கார்கில் போர் வெற்றி தினம்; ராமேஸ்வரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பேரணிSponsoredகார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தைக் கொண்டாடும் விதமாக ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பேரணி சென்றனர்.

காஷ்மீர் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டை மீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிரவாதிகள் உதவியுடன் கடந்த 1999 மே 6-ம் தேதி இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் புகுந்தனர். 18 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியான அங்கு அவர்கள் முகாம்கள் அமைத்து  தங்கியிருந்தனர். இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்கள் அளித்திருந்தது. 3 நாள்களுக்குப் பின் இது இந்திய ராணுவத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 15 நாள்கள் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இதைத் தொடர்ந்து மே 26-ல்  இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இதில் பங்கேற்று பாகிஸ்தான் வீரர்களுடன்  போரில் ஈடுபட்டனர். பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய ராணுவத்தினரின் கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் சமரசப் பேச்சுக்கு வந்த பாகிஸ்தானின் அழைப்பை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. இதனால் உலக நாடுகளின் ஆதரவை கோரிய பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வேறு வழியில்லாமல் ஊடுருவல்காரர்களைத் திரும்பப் பெற சம்மதித்தது பாகிஸ்தான். ஆனால், தீவிரவாதிகள் இதை ஏற்கவில்லை. இதையடுத்து, இந்திய ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத தீவிரவாதிகள் கார்கில் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

இது இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட முழுமையான போர் இல்லை என்றாலும் இந்தியா முழுவதும் ஒன்றுபட்ட தேச உணர்வுகளை ஏற்படுத்தியது. இந்தப் போரில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் திருச்சி சரவணன், தஞ்சை காமராஜ், லெப்டினன்ட் கர்னல் சென்னை நடராஜ் ஆகியோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். கார்கில் போர் வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ல் 'கார்கில் வெற்றி தினம்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முன்னதாக கார்கில் போரில் உயிர் நீத்த இந்திய ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored