லாரி ஸ்டிரைக் எதிரொலி - தீப்பெட்டி ஆலைகளை மூட உற்பத்தியாளர்கள் முடிவு!Sponsoredலாரிகள் வேலை நிறுத்தம் 7-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருவதால், தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தி ஆலைகளை மூடிட, கோவில்பட்டி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 6 லட்சம் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரிகள் வேலை நிறுத்தம் 7-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனால், தென் மாவட்டங்களில் முக்கியத் தொழிலான தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் உற்பத்திசெய்யப்படும் 2 லட்சம் தீப்பெட்டிப் பண்டல்கள் தேக்கமடைந்து வருவது மட்டுமில்லாமல், தீப்பெட்டி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ரூ.300 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவைப்படும் மெழுகு, குச்சி, குளோரேட், சல்பர், கேசின், பாஸ்பரஸ் ஆகிய மூலப் பொருள்கள் வந்து சேர்வதில் தடைபட்டுள்ளது. 

Sponsored


ஆலைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மூலப்பொருள்களைக்கொண்டு தீப்பெட்டி உற்பத்திசெய்யப்பட்டு வந்த நிலையில், உற்பத்தியைத் தொடர்வதற்கு மூலப்பொருள்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல,  தீப்பெட்டி பண்டல்களின் தேக்கம் அதிகரித்து வருவதால், உற்பத்திசெய்யப்படும் தீப்பெட்டிகளைத் தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

Sponsored


இக்கூட்டத்தில், லாரிகள் வேலை நிறுத்தம்குறித்தும், தீப்பெட்டிப் பண்டல்கள் தேக்கம், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில், நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ”லாரிகளின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்,  தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்கள் வரத்து தடையால், தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.  இந்த 7 நாள்களில், ரூ.200 கோடி மதிப்பிலான தீப்பெட்டிப் பண்டல்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், ரூ.300 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில்கொண்டு லாரிகளின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். Trending Articles

Sponsored