தஞ்சை அருகே 25 அடி அகலத்துக்கு ஆற்றில் ஏற்பட்ட உடைப்பு! - விவசாய நிலத்துக்குள் புகுந்த தண்ணீர்Sponsoredதஞ்சாவூர் அருகே காவிரி கிளை ஆறான கல்லணை கால்வாய் ஆற்றில் தெற்கு கரையில் 25 அடி அகலத்துக்கு உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலத்துக்குள் நீர் புகுந்தது. பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மண் மூட்டைகளைக் கொண்டு உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, முழு கொள்ளளவுடன் நிரம்பியது. இதையடுத்து, பாசனத்துக்காக மேட்டூர் கடந்த வாரத்தில் திறக்கப்பட்டது. அதன் பின்னர், டெல்டா மாவட்டப் பாசனத்துக்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லணை திறக்கப்பட்டது. இந்தநிலையில், மேட்டூருக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகப்படுத்தப்பட்டது. கல்லணைக்கு அதன் கொள்ளளவைத் தாண்டி நீர் வரத் தொடங்கியதால், அதைக் கொள்ளிடம் மற்றும் காவிரியின் கிளை ஆறுகளில் திறந்துவிடப்பட்டது. இதனால், காவிரி கரைகள் நிரம்பியபடி தண்ணீர் சென்றுகொண்டிருக்கின்றன. தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வந்தன. மேலும், பொதுமக்கள் மற்றும் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

Sponsored


Sponsored


இந்தநிலையில், இன்று தஞ்சாவூர் அருகே உள்ள கல்விராயன்பேட்டை வைரபெருமாள்பட்டி கிராமத்துக்கு இடையே கல்லணை கால்வாய் ஆற்றில் 25 அடி அகலத்துக்கு உடைப்பு ஏற்பட்டு நீர் பாய்ந்தோடியது. அந்த இடத்தில் விவசாய நிலங்கள் மட்டுமே இருக்கிறது. வீடுகள் எதுவும் இல்லை, மேலும், தண்ணீர் இப்போதுதான் வந்ததால் வயல்களில் நடவும் செய்யப்படவில்லை. இதனால், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், தொடர்ந்து நீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து பொதுப்பணித்துறை, காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் லாரியில் மண் கொண்டு வந்து அதை மூட்டைகளில் நிரப்பி, உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் பேசினோம், ``காவிரியில் தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் அரசும் அதிகாரிகளும் எல்லா ஆண்டுகளிலும் முறையாக ஆறுகளைப் பலப்படுத்தி, தூர் வார வேண்டும். அரசின் மெத்தனத்தாலும் தொலைநோக்கோடு செயல்படாததாலும் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகிறது. இதுவே, இந்தப் பகுதி நிலங்களில் விவசாயம் செய்யபட்டிருந்தால் இழப்புகள் அதிகமாக இருந்திருக்கும்’’ என்றனர்.
 Trending Articles

Sponsored