மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்!Sponsoredவிதிமுறைகளை மீறி தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பிய விவகாரத்துக்குக் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, தமிழக அரசு சொத்துவரியை இருமடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத தமிழக அரசு சொத்துவரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. அதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்பதால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். 

Sponsored


ரஃபேல் விமான ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நிர்மலா சீதாராமன் அனுமதி மறுத்தார். ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்காக விதிமுறைகளை மீறி ராணுவ ஹெலிகாப்டரை மத்திய அமைச்சர் அனுப்பி இருக்கிறார். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் கடலுக்குள் தத்தளித்தபோது ஹெலிகாப்டரை அனுப்பக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது அனுப்பவில்லை. சென்னையில் பெருவெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் அனுப்பவில்லை. 

Sponsored


அவசியத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பாத நிர்மலா சீதாராமன், தனி நபருக்காக அனுப்பி வைத்திருப்பது தவறான செயல். அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் ராணுவ அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால், அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் ராணுவத் துறையின் சார்பாக இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். 

தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. காவல்துறையும் உளவுத்துறையும் செயல் இழந்துவிட்டன. இதுபோன்ற குற்றங்களைத் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். அ.தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருவதாக முதல்வர் கூறுகிறார், முதலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட்டு மற்ற தேர்தலுக்கு தயாராகட்டும். நீண்டநாள்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பது தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் காட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.
 

Sponsored