புதிய பாடங்களுக்கு வகுப்பறையில் என்ன ரிசல்ட்? ஆசிரியர்களின் அனுபவங்கள்Sponsoredந்த ஆண்டு 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்குப் புதிய பாடங்களைத் தந்துள்ளது தமிழ்நாடு அரசு. கல்வித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் தலைமையிலான இந்தப் பணியைப் பல தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ஒரு சில விமர்சனங்களும் வந்துள்ளன. பழைய பாடத்திட்டத்தில் இருந்த போதாமைகளைக் கலைந்து, மேற்படிப்புக்கான வழிகாட்டியாக அமைந்துள்ளன என்பது பரவலான கருத்து. இவையெல்லாம் பாடப்புத்தகங்களைப் பார்த்தவுடன் கூறப்பட்டவை. பாடங்களை வகுப்பறையில் நடத்தும்போது கிடைத்த அனுபவங்கள் என்ன? சில ஆசிரியர்களிடம் கேட்டோம்.

 சுகதேவ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கட்டளை, மரக்காணம்:

Sponsored


``நான், ஒன்றாம் வகுப்பு ஆசிரியர். முதல் வகுப்பு மாணவர்கள் கட்டுக்கோப்பான ஒழுங்குக்குள் அடங்குகின்றவர்கள் அல்ல. விளையாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். எதையாவது கிறுக்கிக்கொண்டே இருக்க நினைப்பவர்கள். இவர்களின் மனநிலைக்கேற்ற வகையில் புத்தகம் வடிமைப்பட்டிருப்பதில் மிகவும் சந்தோஷம். மான், காகம் உள்ளிட்ட உருவங்களைக் கோட்டோவியங்களாக வரையச் சொல்லும் பகுதியை  விரும்பிச் செய்கிறார்கள். எழுத்துகள் ஓவியங்களாகக் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. அது, மாணவர்களை மிகவும் ஈர்க்கிறது. ஆசிரியர்களுக்கான கைடு கொடுத்திருப்பது உதவியாக இருக்கிறது. `காற்றில் எழுதிப் பார்ப்போம், முதுகில் எழுதிக் காட்டுவேன்' எனச் சில விஷயங்களைச் செய்துவருகிறேன். மாணவர்கள் சிரித்துக்கொண்டே அனுமதிக்கிறார்கள்.

Sponsored


தமிழ் மட்டுமன்றி, கணக்குப் பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேம்ஸ் பகுதி மாணவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆங்கில எழுத்துகளில் ஓவியங்கள் இருப்பது சூப்பரான ஐடியா. A என்ற எழுத்தின் கீழே ஓர் எறும்பு எட்டிப் பார்க்கும். இதேபோல கரடி, பூனை போன்றவையும். பூனையைப் பார்க்கவைப்பதன் மூலம் அவ்வெழுத்துகளை எளிதாகக் கற்பிக்க முடிகிறது. அந்த ஓவியங்களைப் பார்க்கும் ஆவலில். நாம் சொல்வதற்கு முன்பே புத்தகத்தைத் திறந்து படம் பார்க்கிறார்கள். விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை ஓவியங்களாக அனைத்துப் பாடங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன அறிவியல் பாடத்தைத் தவிர. அதில் புகைப்படங்களாக இடம்பெற்றிருக்கின்றன. காரணம், மற்ற பாடங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களின் மூலம் அந்தப் பாடத்தைப் புரியவைப்போம். ஆனால், அறிவியலில் அந்தப் படங்கள்தாம் பாடமே. இந்த வேறுபாட்டை மிக நேர்த்தியாகப் புரிந்துகொண்ட பாடக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

ஒரேயொரு விஷயம் மட்டும் நெருடுகிறது. அ முதல் ஃ வரையிலான உயிர் எழுத்துகள் வழமையான வரிசையில் கற்பிக்கத் தந்துள்ளனர். ஆனால், மெய் எழுத்துகளோ வல்லினம், இடையினம், மெல்லினம் என்ற வகைக்குள் உள்ள எழுத்து வரிசையில் உள்ளன. இறுதியில், க் முதல் ன் வரை வரிசையாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மற்றபடி, அனைத்துப் பகுதிகளும் அட்டகாசமாக உள்ளன. முன்பிருந்த பாடங்கள், சில மாணவர்கள் மட்டுமே எளிமையாகக் கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும். ஆனால், அனைத்து மாணவர்களையும் கவனத்தில்கொண்டு இப்போதைய பாடங்களை உருவாக்கியதற்கு நன்றி!''

 ராணி திலக் (தாமோதரன்) ஆசிரியர், அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்:

``நான் ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் நடத்துகிறேன். அனைத்துப் பாடங்களும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. மாணவர்கள் ஈடுபாட்டுடன் படிப்பதே அதற்குச் சாட்சி. ஒரு பாடம் முடிந்ததும், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் க்யூஆர் கோடு மூலம் பார்க்கக் கிடைக்கும் வீடியோ, மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. பல வெப்சைட் மூலம் புதிய விஷயங்களைக் கற்கின்றனர். குறிப்பாக, திராவிட மொழிக் குடும்பம் பாடத்துக்கு இணையம் மூலம் பல தரவுகளைத் தேடி எடுத்தோம். கால்டுவெல் எழுதிய நூலை அறிமுகப்படுத்தினேன்.  மாணவர்களிடம் ஒரு தேடலையும் புதிய பாடங்கள் உருவாக்கி உள்ளன.

ஆசிரியர்களுக்கான வழிகாட்டலில், எப்படி மதிப்பிடுவது போன்ற சில விஷயங்களே உள்ளன. நான் பரிந்துரைப்பது, ஒரு பாடத்தை ஆரம்பிக்கும் முன், ஆசிரியர்கள் எப்படித் தயாராக வேண்டும் என்பதற்கான வழிகாட்டல். ஏனெனில், ஆத்மாநாம் கவிதைகள் பாடத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆத்மாநாம் யார், அவரின் கவிதைகள் தமிழ்க் கவிதை வரலாற்றில் என்ன இடத்தைப் பிடித்திருக்கின்றன போன்ற தகவல்கள் ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வேண்டும். பாடத்தில் வருபவர்கள் தொடர்பான புத்தகங்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதுவும் நடந்தால் மட்டுமே, இந்த மாற்றம் முழுமை அடையும். பாடங்கள் உருவாக்கத்தில் கல்வித் துறையில் உள்ள நவீனக் கவிஞர்கள், எழுத்தாளர்களை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். ஏனெனில், படைப்பூக்கம் மிக்க பாடங்களை உருவாக்கப் படைப்பாளிகளையும் அதில் ஈடுபடச் செய்ய வேண்டும் அல்லவா."

 து.விஜயலட்சுமி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம்:

``நான், ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் நடத்துகிறேன். `புதிய பாடங்கள் வரவேற்கத்தக்க விதமாகவே இருக்கின்றன. முதல் விஷயமாக, புத்தகங்கள் வண்ணமயமாக இருப்பது. இப்படி வர வேண்டும் என்பது பல வருட எதிர்பார்ப்பு. அடுத்து, பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்குத் தந்திருக்கும் பயிற்சிகள். பாடங்களில் முக்கியமான பாயின்ட்களை நாங்கள் குறித்துக்கொள்ளச் சொல்வோம். இப்போது வந்துள்ள புத்தகத்தில், அதற்கென தனி வண்ணம் கொடுத்திருப்பது அருமையான யோசனை. மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது க்யூஆர் கோடு மூலம் வீடியோக்களுக்குச் செல்லும் முறையை. இப்போது எல்லோரின் வீடுகளிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும், அக்கம் பக்கத்தில் 10 நிமிடம் இரவல் வாங்கிக்கொள்ளலாம். இந்த முறையால், ஒரு வார்த்தையை எப்படிச் சரியாக உச்சரிப்பு என்பதில் தொடங்கி, அந்த வார்த்தைக்குரிய பொருள், படம் உள்ளிட்ட பல விஷயங்களையும் மாணவர்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆங்கிலம் மட்டுமன்றி, அறிவியல், சமூக அறிவியல் போன்றவையும் சிறப்பான விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடத்துக்கு க்யூஆர் கோடு மூலம் காட்சிப் படங்களுக்குச் செல்வது அதிகம் பயனளிக்கிறது. `இந்த வசதியெல்லாம் நகரங்களில் மட்டும்தான் பயன்படும்' எனச் சிலர் நினைக்கலாம். எங்கள் பகுதி கிராமம்தான். இங்கேயே பாடங்களுக்கேற்ற வகையில் பயன்படுத்த முடிகிறது. ' learning with happiness' என்பார்கள். அது, தற்போது வகுப்பறைகளில் நிகழ்ந்துவருகிறது."Trending Articles

Sponsored