கோவை விடுதி உரிமையாளர் ஜெகநாதன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!Sponsoredநெல்லையில், விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் கோவையைச் சேர்ந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன் உடல், உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கோவை பீளமேடு பகுதியில் பெண்கள் விடுதிகளை நடத்தி வந்தவர் ஜெகநாதன். 500-க்கும் அதிகமான பெண்கள் தங்கி இருந்த அந்த விடுதியின் காப்பாளராக இருந்த புனிதா, சில தினங்களுக்கு முன்பு ஜெகநாதனின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விடுதியில் தங்கியிருந்த 4 பெண்களை நட்சத்தர விடுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு, அவர்களைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததுடன், விடுதி உரிமையாளரின் விருப்பத்திற்கு இணங்கவும் வற்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

Sponsored


இதுதொடர்பாக,  பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் ஜெகநாதன், காப்பாளர் புனிதா ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவந்தனர். இந்த நிலையில், விடுதியின் உரிமையாளரான ஜெகநாதன், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இன்று (26-ம் தேதி) பிணமாகக் கிடந்தார்.

Sponsored


குற்றாலத்தில் வழக்கறிஞருடன் தங்கியிருந்த ஜெகநாதன், வழக்கறிஞர் ஆலோசனைப்படி சந்தனமாரியப்பன் என்ற குற்றவாளியுடன் சேர்ந்து சிவலார்குளம் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தோட்டத்தில் மறைந்திருந்துள்ளார். அப்போது ,மது போதையில் இருந்த ஜெகநாதன், மன உளைச்சல் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலைசெய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடலை ஆலங்குளம் போலீஸார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெகநாதன் உடல்கூறு ஆய்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அவரது உடலை கோவையிலிருந்து வந்திருந்த உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர். உடல்கூறு ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே, ஜெகநாதன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

அத்துடன், ஜெகநாதன் கோவையில் இருந்து தலைமறைவானபோது, நிறைய ரொக்கப் பணத்தை கையோடு எடுத்துவந்துள்ளார். அதனால், அவர் பணத்துக்காகக் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அவருடன் காட்டில் மறைந்து இருந்த சந்தனமாரியப்பனைப் பிடித்து விசாரிக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அவர் பிடிபட்ட பின்னரே, இந்த வழக்கின் பல மர்ம முடிச்சுகள் அவிழும். Trending Articles

Sponsored