தெப்பக்காடு யானைகள் முகாமில் 7 யானைகளுக்கு கும்கி பயிற்சி!Sponsoredநீலகிரி மாவட்டம் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் யானைகள் ஊருக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல், யானை தாக்கியதில் உயிரிழப்பு போன்ற செய்திகள் வழக்கமான ஒன்றாகிவிட்டன. மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதும், காய்வெடி வைத்து கொல்லப்படுவதும் சகஜமாகிவிட்டது.

தமிழகத்தின் பல பகுதிகளில் வனங்கள் அழிக்கப்படுவது, இது போன்ற மனித - விலங்கு மோதல்களுக்குக் காரணமாகியுள்ளது. குறிப்பாக யானைகள் அதிகம் வாழும் தமிழகம், கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், கோவா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் யானை - மனித மோதல்கள் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என வன உயிரியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். யானை - மனித மோதல்களைத் தடுப்பதில் கும்கி யானைகளின் பங்களிப்பு அவசியமானது. மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், கும்கிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால், புதிதாகக் கும்கி யானைகளைத் தயார் செய்வது அத்தியாவசியமாகியுள்ளது. கும்கி யானைகளால் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்குச் சென்று காட்டு யானைகளை விரட்ட முடியும். மேலும், கும்கி யானைகள் இருந்தால் வனத்துறை பணியாளர்கள் பாதுகாப்பாகக் காட்டு யானைகள் அருகே சென்று பணியாற்ற முடியும். 

Sponsored


தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் ஏற்படக்கூடிய யானை - மனித மோதல்களைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள கும்கி யானைகள். குறிப்பாக, முதுமலையில் பராமரிக்கப்பட்ட சுப்பிரமணி, இந்தர் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வெளிமாநிலங்களிலும் காட்டு யானைகளை விரட்டுவதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்த யானைகள் நான்கு மாநிலங்களில் காட்டு யானைகளை விரட்டவும் பிடிக்கவும் பலமுறை சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணி யானை இறந்த நிலையில், இந்தர் யானை கண் பார்வையை இழந்து ஓய்வு பெற்றது. 

Sponsored


இதையடுத்து தற்போது தெப்பக்காடு யானைகள் முகாமில், முதுமலை, விஜய், வசீம் ஆகிய கும்கி யானைகள் மட்டுமே உள்ளன. இந்த யானைகள் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று யானைகளை விரட்டவும் பிடிக்கவும் உதவியுள்ளன. இந்தக் கும்கிகளுக்கும் வயதாகி வருவதால், சில ஆண்டுகளில் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். எனவே அடுத்த தலைமுறை கும்கி யானைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். முதற்கட்டமாக முதுமலையில் பராமரிக்கப்படும் பொம்மன், கிருஷ்ணா, ஸ்ரீநிவாசன் மற்றும் சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட கிரி ஆகிய குட்டி யானைகளுக்கு கும்கி பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளோடு சேர்ந்து கேரளாவிலிருந்து முதுமலைக்கு பயிற்சி பெற வந்த மூன்று யானைகளும் பயிற்சி பெற்று வருகின்றன.

முதுமலையில் பயிற்சி பெற்று வரும் 7 யானைகளுக்கும் சிறந்த பயிற்சியாளர்களால், சிறப்பான முறையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானைகளை பிடிக்கவும், லாரியில் ஏற்றவும், பிடிக்கப்படும் காட்டு யானையின் காலில் சங்கிலி கட்ட உதவவும், காட்டு யானைகள் காலில் கட்டப்படும் சங்கிலியை மிதிக்கவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதுமலையைச் சேர்ந்த 4 குட்டி யானைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் முழு பயிற்சியையும் பெற்று, அடுத்த தலைமுறையின் சிறந்த கும்கி யானைகளாக வரும் எனப் பயிற்சி அளிக்கும் பாகன்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதேபாேல, கேரளாவிலிருந்து கும்கி பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள 3 யானைகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. இனி வரும் காலங்களில் கேரளாவில் ஏற்படும் யானை - மனித மோதல்களைத் தடுப்பதில், இந்த யானைகளின் பங்கு அதிகம் இருக்கும் என அந்த யானைகளின் பாகன்கள் கூறினர். Trending Articles

Sponsored