லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவர ஏற்றுமதி நிறுவனங்கள் வலியுறுத்தல்!



லாரி ஸ்டிரைக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற்படுவதோடு, ஏற்றுமதியாளர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் கூறியுள்ளார்.

Sponsored


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20-ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லாரிகளில் சரக்குகள் எடுத்துச் செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், சரக்குகளை ஏற்றி வந்த லாரிகளும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அதில் ஏற்றப்பட்டுள்ள பொருள்கள் சேதமடைந்து வருகின்றன.

Sponsored


ரூ. 5,000 கோடி சரக்குகள் தேக்கம் 

Sponsored


இந்த நிலையில், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருப்பதாகவும் 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சரக்குகள் தொழிற்சாலைகளில் தேங்கிக் கிடப்பதாகவும், பல தொழிற்சாலைகள் உற்பத்திக்கான மூலப் பொருள்கள் பற்றாக்குறையால் தவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

``தற்போதைய சந்தை நிலைமைகள் காரணமாக, டெலிவரிக்கான நிபந்தனைகளுடன்தான் பையர்கள் (Buyers) ஆர்டர்கள் கொடுக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாள்கள் தாமதமானாலும்கூட, ஏற்றுமதியில் இந்தியாவுக்குப் போட்டி நாடுகளாகவும் குறைந்த விலையில் விரைவாக டெலிவரி செய்யக்கூடிய திறன் உள்ளவையாகவும் திகழ்கின்ற பங்களாதேஷ், வியட்நாம், இலங்கை போன்ற நாடுகளில் ஏதாவது ஒன்றை பையர்கள் தேர்வு செய்து, அங்கு ஆர்டர்களைக் கொடுத்துவிடுகிறார்கள். இதனால், ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்.

தொழிலாளர்கள் வேலை இழப்பு

லாரி ஸ்டிரைக் எப்போது முடிவுக்கு வரும் என்ற நிச்சயமற்ற நிலையால், பல்வேறு தொழிற்சாலைகள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருவதால், தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தப் போராட்டம் இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தை மட்டும் பாதிக்காமல், வேலையில்லா திண்டாட்டத்தையும் ஏற்படுத்தி விடும். இது, இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய தரை வழிப்போக்குவரத்து துறை அமைச்சர் மட்டுமல்லாது, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர், ஜவுளித் துறை அமைச்சர் ஆகியோரும் உடனடியாக தலையிட்டு லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என அவர் மேலும் கூறியுள்ளார்.



Trending Articles

Sponsored