மீண்டும் மீண்டும் ஐ.பி.எஸ் அவதாரம்... மூன்றாவது முறையாகக் கைதாகும் போலி அதிகாரி!Sponsoredகொள்ளையடிப்பவர்கள் போலீஸாரிடம் மாட்டாமல் இருக்க, மாறுவேடத்தில் அலைவது வழக்கம். ஆனால், கொள்ளையடிப்பதற்காக போலீஸ் அதிகாரி போன்று வேடமிட்டு மீண்டும், மீண்டும் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்வதுதான், போலி ஐ.பி.எஸ் பால மணிகண்டனின் வழக்கமாக இருந்துள்ளது. இவர், பணத்துக்காகத் தன்னை ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறி, பல பெண்களைத் திருமணம் செய்து, அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்திருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்துவந்த பால மணிகண்டன், கடந்த பிப்ரவரி மாதம் கானத்தூர் பகுதியில் உள்ள ஓர் அப்பார்ட்மென்ட்டில் குடியேறியுள்ளார். அக்கம்பக்கத்தினரிடம் தன்னை ஓர் ஐ.பி.எஸ் அதிகாரி என்று அவர் கூறியுள்ளார். "அந்தப் பகுதியில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம், ஆவணங்களைக் கேட்டு மிரட்டுவது, பண வேட்டையில் ஈடுபடுவது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் ஐ.பி.எஸ் அதிகாரிபோல் வேடமிட்டுச் சென்று, சோதனை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தைக் கறப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் பால மணிகண்டன். அதோடு மட்டுமல்லாமல் இதுவரை ஒன்பது பெண்களிடம், தன்னை ஐ.பி.எஸ் அதிகாரி என்று சொல்லி, அவர்களைத் திருமணம் செய்து, அதிகளவிலான நகைகளையும் லட்சக்கணக்கான பணத்தையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதுதான் பாலமணிகண்டனின் முழுநேரத் தொழில்" என்று தெரிவிக்கின்றனர் போலீஸார். 

Sponsored


சூர்யா, பாலா என்கிற பால மணிகண்டன் போன்ற வெவ்வேறு பெயர்களில் இந்த மோசடிகளைச் செய்த இவரின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம். பி.டெக் படித்துள்ள பால மணிகண்டன், சென்னை பெருங்களத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராகப் பணியாற்றினார். இந்த நிலையில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணமான கையோடு கானத்தூரில் குடியேறினார். அதன் பிறகே ஐ.பி.எஸ் அதிகாரி அவதாரத்தை எடுத்துள்ளார். 

Sponsored


தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த பிரதீப் குமார், நாராயணன், பரத் விக்னேஷ், ராஜ்கமல் (பரத் விக்னேஷின் தம்பி) ஆகியோர் பாலமணிகண்டனுக்கு உதவி செய்தவர்கள். தற்போது, பால மணிகண்டனுடன் இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே பட்டதாரிகள் என்பதும், பிரபல நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. பால மணிகண்டனுடன், இவர்களும் இணைந்துகொண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களிடம் திமிராகப் பேசுவது, அருகில் உள்ள பண்ணை வீடுகளுக்குச் சோதனை என்ற பெயரில் சென்று பணம் வசூலிப்பது, வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லியிருக்கின்றனர். இதையடுத்து பால மணிகண்டனிடம் விசாரணை நடத்திய கானத்தூர் போலீஸார், அவரின் முன்னுக்குப் பின் முரணான பதிலைத் தொடர்ந்து காவல்நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரித்ததும் உண்மை தெரியவந்தது. ஐ.பி.எஸ் அதிகாரிபோல் பால மணிகண்டன் நடித்ததும் நண்பர்கள் உதவியுடன் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மணிகண்டன் பயன்படுத்திய பொலிரோ வாகனம், மூன்று கார்கள், அடையாள அட்டை, போலீஸ் உடை ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 2013-ம் ஆண்டு திருமணத்துக்காக வரன் தேடி இணையதளத்தில் பதிவு செய்தபோது, தன்னை ஐ.பி.எஸ் அதிகாரி என்று குறிப்பிட்டு பால மணிகண்டன் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து டாக்டர் பெண் ஒருவரைத் திருமணம் செய்து அவரின் நகை மற்றும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி இருக்கிறார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதேபோல் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சிக்கு சென்றபோது, தன்னை ஐ.பி.எஸ் அதிகாரி என்று சொல்லி, அங்கு வந்த ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் காவல்துறைக்குத் தெரியவர பெரவள்ளுர் போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்ததும், மீண்டும் ஐ.பி.எஸ் அதிகாரி போன்று வேடமிட்டு, வழக்கம்போல பெண்களை ஏமாற்றும் செயலில் இறங்கியிருக்கிறார் பால மணிகண்டன். கடந்த 2014-ம் ஆண்டு டி.பி.சத்திரம் போலீஸார், இவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அதன் பின்னர் மீண்டும் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தொடர்ந்து பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்வது, அவர்களிடம் இருந்து பணம், நகைகளைப் பறிப்பது உள்ளிட்ட செயல்களைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் ஜூலை 24-ம் தேதி அன்று கானத்தூர் காவல்நிலைய காவலர்களால் பால மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அவரை, போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது புழல் சிறையில் அடைத்தனர். போலீஸாரின் விசாரணையில் "எனக்கு சின்ன வயசிலிருந்தே ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது ஆசை. அதனால்தான் இப்படி போலீஸ் வேடமிட்டு ஏமாற்றினேன்" எனக் கூலாகச் சொல்லியிருக்கிறார் இந்தப் போலி அதிகாரி.Trending Articles

Sponsored