தொண்டர்கள் வருகை அதிகரிப்பு - கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஸ்டாலின்!



Sponsored



தி.மு.க தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் வெளியே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். 

Sponsored


மு.க அழகிரி நாளை காலை கோபாலபுரம் வரவுள்ளார். சாலை மார்க்கமாக அவர் சென்னை வருகிறார். 

Sponsored


தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வருகை தந்தார்.  

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோபாலபுரம் வந்தார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 

கருணாநிதியின் இல்லம் இருக்கும் கோபாலபுரம் பகுதியில் தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு இப்போது கூடுதல் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் கருணாநிதி இல்லம் வந்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ‘தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் யாரும் சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தோம். அவருக்குத் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டமி கருவி மாற்றப்படும்போது எல்லாம் தொற்று காரணமாகக் காய்ச்சல் ஏற்படும். இப்போது அப்படிதான் ஏற்பட்டுள்ளது. அச்சப்படும் படியாக ஒன்றும் இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். கருணாநிதியைச் சந்திக்கவில்லை. அவர் வழக்கம் போல் ஓய்வில் இருக்கிறார்" என்றார்.  

கே. பாலகிருஷ்னன் செய்தியாளர்களிடம், ``தி.மு.க தலைவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு காய்ச்சல்தான் இருக்கிறது. அதனால் சந்திக்க வந்தோம். அவர் நலமுடன் இருக்கிறார்'' என்றார். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், ``தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியிருப்பதாக வந்த தகவலை அடுத்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைவார்” என்றார்.

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். கருணாநிதி நலமுடன் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``கருணாநிதி நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் முழு குணமடைந்து திரும்புவார்’’என்று தெரிவித்தார். தி.மு.க தலைவரை அ.தி.மு.க அமைச்சர்கள் வந்து பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், ``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தபோது தி.மு.க-வினர் வந்து பார்த்தார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் வந்து கருணாநிதியின் உடல்நிலை விசாரித்தோம். இது அரசியல் பண்பாடு’’என்றார்.  இந்த சந்திப்பின்போது, தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இந்த நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் சென்றனர். கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரிப்பதற்காக, அவர்கள் கோபாலபுரம் இல்லம் வந்ததாகக் கூறப்படுகிறது. 

தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் முழு குணமடைந்து வருவார் என்றும் கோபாலபுரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். 

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே கோபாலபுரம் திரும்பினார்.  அதன்பிறகு ஒருவாரம் கடந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ` சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அச்சப்படும் வகையில் ஏதுமில்லை. அவரின் உடல்நிலைகுறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 

இந்நிலையில் இன்று, இதுகுறித்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாகக் காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. இதற்காக, அவரது வீட்டிலேயே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.



Trending Articles

Sponsored