போராட்டத்தின்போது கைது பயத்தால் ஆற்றில் குதித்த பள்ளி மாணவர்கள்.. காப்பாற்றிய பொது மக்கள்!Sponsoredஊரணிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை மூடவலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களை போலீஸார்  கலைந்து செல்லுமாறு எச்சரித்ததால், பயத்தில் நான்கு மாணவர்கள் ஆற்றில் குதித்து தத்தளித்தனர். அவர்களைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் துண்டை கயிறு போல் கட்டிக் கொடுத்து காப்பாற்றினர். ஆனால், போலீஸாரோ ஆற்றில் குதித்து தத்தளித்துக்கொண்டிருந்த மாணவர்களைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அப்பகுதி மக்களைக் கோபத்தில் ஆழ்த்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகே  கல்லணை கால்வாய்  பணிகொண்டான் விடுதியில் கடந்த 9-ம் தேதி புதிதாக இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளிக்கு  அந்த டாஸ்மாக் கடைகளைத் தாண்டித்தான் மாணவ, மாணவியர் செல்ல வேண்டும். மேலும், அப்பகுதி மக்களுக்கு டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதி முக்கியமான வழித்தடமாகும். இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னரே அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளை எடுத்துவிடுவதாக அதிகாரிகள் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Sponsored


இந்த நிலையில், அதிகாரிகள் கூறியபடி டாஸ்மாக் கடைகளை எடுக்கவில்லை. இதனால் சில தினங்களுக்கு முன் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் தலைமையில்  நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தை பணிகொண்டான் விடுதி மக்கள் புறக்கணித்தனர். இதில் கலந்துகொண்ட மற்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் அதிகாரிகள் முதலில் ஒரு கடையை  அகற்றிவிடுவோம். பின்னர் அடுத்த பத்து தினங்களுக்குள் மற்றொரு கடையையும் அகற்றிவிடுவோம் எனக் கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத மக்கள் கலெக்டர் கையெழுத்திட்ட ஆணை இருந்தால் காட்டுங்கள் அப்போதுதான் நாங்கள் இதற்குச் சம்மதிப்போம் எனக் கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Sponsored


இந்த நிலையில், நேற்று மீண்டும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு கந்தர்வக் கோட்டை, பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை  நடத்தினர். போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அப்போது அதிகாரிகள் இரண்டு டாஸ்மாக் கடைகளையும்  அகற்ற முடியாது  எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கொதிப்படைந்ததோடு தொடர்ந்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாகக் கூறி போர்டு ஒன்றை வைத்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவும் ஆரம்பித்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் தெரிவித்தனர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து  கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

இதனால் கோபமடைந்த  இன்ஸ்பெக்டர் தியாகராஜன், மாணவர்களை எச்சரிக்கை செய்தார். இதில் போலீஸார் தங்களைக் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் திடீரென பள்ளிச் சீருடையில் இருந்த நான்கு மாணவர்கள் ஆற்றில் குதித்தனர். இதைக் கண்ட பெண்கள் உட்பட அனைவரும் கூச்சலிட்டனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் நான்கு மாணவர்களும் நீச்சலடிக்க முடியாமல் தத்தளித்தனர். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது துண்டுகளைக் கயிறு போல் கட்டி  ஆற்றில் வீசினர். அவற்றைப் பிடித்து கொண்டு மாணவர்கள் ஒரு வழியாகக் கரை சேர்ந்தனர். விவசாயிகள் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால், போலீஸாரோ ஆற்றில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த மாணவர்களைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பெரும் வேதனை எனத் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள்.Trending Articles

Sponsored