சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா நடத்தப்படுவது ஏன்?Sponsoredங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோயிலின் ஆடித்தபசுத் திருவிழாவின் பிரதான  நிகழ்ச்சியான தபசுக் காட்சி வைபவம் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. அரியும் சிவனும் ஒன்று என்கிற அரிய தத்துவத்தை விளக்கும் வகையில் நடைபெறும் இந்த தபசுக் காட்சியானது சந்திரக் கிரகணம் காரணமாக முன்கூட்டியே நடத்தப்படும் என கோயில் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

சைவமும் வைணவமும் பிளவுபட்டுவிடக் கூடாது என்பதற்காக இறைவன், சங்கரநாராயணர் கோலத்தில் காட்சியளித்த முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் திருத்தலம் விளங்குகிறது. புன்னை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இந்தக் கோயில் ஒன்பது ராஜ கோபுரங்களைக் கொண்டது. சங்கரரும் நாராயணரும் ஒருவரே என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியருளிய இந்தக் கோயிலில் சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சந்நிதி அமைந்துள்ளது. 

Sponsored


சங்கரநாராயணர் கோயிலில் ஆடி மாதம் பவுர்ணமி தினத்தில் உத்தராடம் நட்சத்திரத்தில் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். சங்கன், பதுமன் ஆகிய இரு நாகர்கள் தங்களுடைய இஷ்ட தெய்வங்களான சிவன், திருமால் ஆகியோரில் யார் பெரியவர் என வாதம் நடத்தியதுடன் அம்பாளிடம் வந்து முறையிட்டனர். அவர் சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான், அம்பாளை பொதிகைமலையில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படிக் கூறினார். அதன்படி அவர் தவம் செய்தார். அம்பிகையின் தவத்துக்கு இரங்கி ஈசன், சங்கரநாராயணராக காட்சியளித்தார். அதுவே தபசுக் காட்சி வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. 

Sponsored


இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் காலையும் மாலையும் கோமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் வாகனங்களில் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12 நாள்கள் நடைபெறும் இந்தக் கோயிலின் பிரதான நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (27-ம் தேதி)  நடக்கிறது. இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக மாவட்டம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பங்கேற்பது வழக்கம். அதனால் மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோயில் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன் தினம் (25-ம் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. அதையொட்டி, அதிகாலையிலேயே அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். மண்டகப்படிதாரர்கள் நடத்திய சிறப்பு பூஜைக்குப் பின்னர் தேரோட்டம் நடந்தது. அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். பக்தர்களும் பக்திக் கோஷங்கள் முழங்க தேரை இழுத்தார்கள். 

ஆடித்தபசு விழாவின் `11-ம் நாளில் நடக்கும் தபசுக் காட்சியையொட்டி, காலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள சங்கரலிங்க சுவாமி மற்றும் கோமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, கலச அபிஷேகம் நடக்கிறது. 8:30 மணிக்கு பட்டுப்பரிவட்டம், அலங்காரத்துக்குரிய பொருள்கள் சகிதம் கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. பகல் 12:05 மணிக்கு தங்கச்சப்பரத்தில் கோமதி அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

அதைத் தொடர்ந்து 2:45 மணிக்கு சங்கரநாராயணர் தபசுக் காட்சிக்குப் புறப்படுகிறார். மாலை 5 மணிக்கு சங்கரநாராயணர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறார். இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 9 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்கராக காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

வழக்கமாக சங்கரநாராயணர் கோயிலின் தபசுக் காட்சிகளின்போது அம்பாளுக்கு மாலை 6 மணிக்கு சங்கரநாராயணராகவும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் சங்கரலிங்கமாகவும் காட்சியளிக்கும் நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சந்திரக் கிரகணம் ஏற்படுவதால், இரவு 10 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாள் உற்சவர்கள் திருக்கோயிலுக்குள் வர வேண்டும். 

இரவு 12 மணிக்கு சந்திரக் கிரகணம் தொடங்கி இரவு 1:55 மணிக்கு மத்யகாலம் நடைபெறும். காலை 3:55 மணிக்கு மோட்சகாலம் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தபசுக் காட்சிக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருக்கின்றன.Trending Articles

Sponsored