அயனாவரம் சிறுமி விவகாரம்... சிக்கும் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்!Sponsoredவன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாக மெடிக்கல் ஷாப் ஊழியர்கள் சிலரும் சிக்குகின்றனர். சென்னை அயனாவரம் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் மனிதமிருகங்களால் சிறுமி பாழ்படுத்தப்பட்ட விவகாரத்தில் 17 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஊசிமருந்தை செலுத்தி, சிலர் வல்லுறவில் ஈடுபட்டதாக ஒரு தகவல், துவக்கம் முதலே இருந்து வந்தது. இது குறித்த அடுத்தகட்ட விசாரணையில், அயனாவரம் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்திவரும் மூன்றுபேர், ஊசி மருந்துகளைக் கொடுத்து உதவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை தரப்பில் இதுபற்றிக் கேட்ட போது, ``சிறுமிக்கு எதிரான குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் லிப்ட் ஆபரேட்டர்களும் உண்டு. லிப்ட் ஆபரேட்டர்களில் ஒருவர், அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் உதவியாளராக இருந்துள்ளார். குறிப்பிட்ட ஓர்  ஊசி மருந்தை பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறுமிக்கு அவர் செலுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்து வந்தது. டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், அந்த ஊசிமருந்தை மெடிக்கல் ஷாப்களில் வழங்க மாட்டார்கள் என்ற நிலையில், இந்த லிப்ட் ஆபரேட்டர் அந்த ஊசிமருந்தைத் தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறார். கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு மெடிகல் ஷாப்களில் இதைக் கொடுத்தார்களா, அல்லது லிப்ட் ஆபரேட்டரின் நடவடிக்கைகள் குறித்து அந்தக் கடைக்காரர்களுக்கு ஏற்கெனவே தெரியுமா என்கிற கோணத்தில், கடைக்காரர்களும் விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள், `ஊசி மருந்துக்கும், இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று முதலில் மறுப்பு தெரிவித்தனர், அதற்கான ஆதாரங்கள் நிறையவே கைவசம் இருப்பதால் அவர்களின் மறுப்பு எடுபடவில்லை. அது மட்டுமல்ல, இன்னும் பல ஆதாரங்கள் கிடைத்தபடி இருக்கிறது.

Sponsored


மகிளா கோர்ட்டில் அவர்களை ஆஜர் செய்து  ஜூலை 31-ம் தேதி வரை கோர்ட் காவலில் வைத்துள்ளோம். 31-ம் தேதி வரை ரிமாண்டு  காவலில் இருந்தாலும், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டில் ஐந்துநாள் கஸ்டடி வாங்கியுள்ளோம். கஸ்டடியில் அவர்கள் சொல்லும் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக் கூடும் என்பதால், விசாரணை செய்யும் இடத்தை ரகசியமாக வைத்திருக்கிறோம். விசாரணையின் தன்மை, முடிவுகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் ரகசியத் தன்மையுடன்தான் இருக்கும். ஏற்கெனவே மத்திய புழல் சிறையில், மாஜிஸ்திரேட்டுகள் ரோஹித்துரை, கலைப்பொன்னி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினார். வழக்கம் போலவே, குற்றம் சாட்டப்பட்ட நபருடன், அதில் தொடர்பில்லாத ஆறுபேரை நிற்க வைத்து அடையாளம் காட்டும் பார்முலாதான் இந்த அடையாள அணிவகுப்பிலும் கடைபிடிக்கப்பட்டது" என்றனர்.

Sponsored


சிறுமி வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிக்கு மீண்டும் ஒருமுறை சென்று வந்தோம். நாம் பார்த்த மனிதர்களின் கண்களில் அந்த 17 பேர்தான் வந்து வந்து போனார்கள். குடியிருப்பின் முகப்பும், சுற்றுப்புறமும் ரகசியமாய் போலீஸாரால் முகாமிடப்பட்டிருக்கிறது. கேமராக் கண்களும் ஒருபக்கம், அநியாயம் ருசிக்கும் மிருகங்களைத் துழாவிக் கொண்டிருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே, கும்பலாக நிற்கும் ஆட்கள் யாருமே இல்லை. இந்த விவகாரத்தில் குடியிருப்பின் பெயர், படம் போன்றவற்றை முக்கிய மீடியாக்கள் பதிவு செய்யாமல் தவிர்த்த வகையில். `இதோ இந்த வீடுதானாம்ப்பா' என்று அந்தச் சாலையைக் கடக்கிறவர்கள் வியப்பது, சாபம் விடுவது போன்றவை தவிர்க்கப்பட்டிருக்கிறது. 

மூன்றுமாத காலக் கெடுவுக்குள், இந்த வழக்கு விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட வேண்டும் என்பதில் சென்னை போலீஸார் உறுதியாய் இருக்கின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாதிப்புக்கு ஆளான சிறுமிக்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள பொதுமருத்துவம், உளவியல், இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், மகளிர் நோயியல் துறைகளின் பேராசிரியர்கள் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் சிறுமியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகின்றனர்.Trending Articles

Sponsored