`மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு ஆனது எப்படி?’ - ஒரு ரீவைண்ட்!Sponsoredதி.மு.க தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று, இன்றுடன் 50 ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி, தி.மு.க-வின் செயல்தலைவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்; கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதியுள்ளார். தி.மு.க-வின் வரலாற்றிலும் தமிழக மக்களின் வரலாற்றிலும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது, `மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டியது. இதற்காக மட்டும் இந்த நிகழ்வைத் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. இதே மாதிரியான ஒரு ஜூலை 27-ல்தான் ` `மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த பெயரை, `தமிழ்நாடு' என மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை சங்கரலிங்கனாரால் வைக்கப்பட்டது. இவரது கோரிக்கை, இவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்களாலேயே எதிர்க்கப்பட்டது. ஆனாலும், விடாப்பிடியாக  தன் கொள்கையில் நின்ற சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து, 76 நாள்கள் கழித்து உயிர்விட்டார். இன்றுதான் தமிழ்நாடு என்ற கோரிக்கை விதைபோட்ட நாள் என்பதையும் ஒரு காரணமாகக்கொண்டு இந்த நிகழ்வைத் திரும்பிப் பார்க்கலாம். 

தமிழ்நாடு, தமிழகம் என்ற சொல் திடீரென வந்ததில்லை. தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு `தமிழகம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாக, கீழ்க்காணும் இலக்கியக் குறிப்புகளைச் சொல்லலாம்.

Sponsored


`வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்' எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

Sponsored


`வையக வரைப்பில் தமிழகம் கேட்ப' (புறநானூறு, 168 :18)

`இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க' (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5) 

`இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய' (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)

`சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்' (மணிமேகலை, 17: 62)

என்று இலக்கியம் முழுவதும் `தமிழ்நாடு' என்ற சொல்தான் காணப்படுகிறது. 

அரசியலாக...

1956-ல் எழுந்த இந்தக் கோரிக்கையை, பிறகு 1957-லும் 1963-லும் தி.மு.க இந்தப் பிரச்னையை தமிழக  சட்டமன்றத்தில் எழுப்பியது. அப்போதும், பிறகு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது காங்கிரஸ் கட்சிதான். 1963-ல் தி.மு.க தலைவர் சி.என்.அண்ணாதுரை, தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியத்தையும், மிகப்பழைய காப்பியமான சிலப்பதிகாரத்தையும் எடுத்துக்காட்டி `` `தமிழ்நாடு' என்ற பெயர் சில காலமாகவே இருந்துவருகிறது” என்று இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஆதரவாகப் பேசினார்.

இது ஒருபுறமிருக்க, இந்த யோசனை அரசியல்வாதிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த மா.பொ.சிவஞானம், அண்ணாதுரையோடு இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

சுதந்திரத்துக்கு முன்பாக ஒடிசாவிலிருந்து திருநெல்வேலி வரையிலான இடம் `மெட்ராஸ் பிரெசிடென்சி' என்று அழைக்கப்பட்டது. இதற்கு மெட்ராஸ் தலைநகரமாகும். 1930-ல் ஒடிசா மாநிலம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆந்திரா, தமிழகம், கேரளா, கர்நாடகாவின் சில பகுதிகள் எல்லாம் சேர்த்து `மெட்ராஸ் பிரெசிடென்சி' என்று அழைக்கப்பட்டது. 1937-லிருந்து இது `மெட்ராஸ் புரொவின்ஸ்' என்று அழைக்கப்பட்டது. தேர்தல்களும் நடத்தப்பட்டன. 1953-ல் பொட்டி ஶ்ரீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து இறந்த பிறகு, ஆந்திரா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

மொழிவாரியாக இவ்வாறு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும், தமிழ்நாடு `மெட்ராஸ் மாநிலம்' என்றே அழைக்கப்பட்டுவந்தது. 1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 1967 ஜூலை 18 அன்று சட்டமன்றத்தில் `தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றத்துக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணாதுரை. விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், ``மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்ட வேண்டும். ஆகவே, `தமிழ்நாடு - மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே” என்று யோசனை சொன்னார்.  

இறுதியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துமே ஒருமித்த எண்ணத்துக்கு வந்திருந்ததால், `தமிழ்நாடு' என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு பேசிய முதலமைச்சர் அண்ணாதுரை, `தமிழ்நாடு' என்று மூன்று முறை உச்சரிக்க, அவையில் இருந்த உறுப்பினர்களோ, மூன்று முறை `வாழ்க’ என்றனர். 

`தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றத்துக்கான கோரிக்கை வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து அது நிறைவேறியது. தமிழக வரலாற்றில் இன்றும் அது ஒரு மிகப்பெரிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதை அடுத்து, ஜனவரி மாதத்தில் பெயர் மாற்றத்துக்கான பொன்விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.Trending Articles

Sponsored