`மேட்டூர் அணையை நிரப்பிய ஏழுமலையான்!'- நெகிழ்ந்த எடப்பாடி பழனிசாமிSponsored``நான் திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதை அடுத்தே மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நான் திருப்பதி ஏழுமலையானிடம் மேட்டூர் அணையில் தண்ணீர் 120 அடி  நிரம்ப வேண்டும் என்று வேண்டினேன். அதைச் சில அரசியல் கட்சித் தலைவர்கள் கிண்டல் செய்தார்கள். ஆனால், ஏழுமலையானின் அருளால் இன்று மேட்டூர் அணை 120 அடியைத் தாண்டி நிரம்பி வழிகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி இருக்கிறது. இது ஏழுமலையானால் நடந்தது. உச்சநீதிமன்றத்தின் படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை  ஆணையம் முறைப்படி மாதாந்திர அடிப்படையில் நமக்குத் தண்ணீர் கிடைக்கும். 3 டி.எம்.சி., நீர் கொடுக்க முடியாது என்று சொன்னவர்கள் வர்ண பகவான் கருணையினால் தற்போது 1,17,000 கன அடி நீர் திறந்து விட்டிருக்கிறார்கள். இயற்கை நமக்குச் சாதகமாக இருக்கிறது. விவசாயத்துக்குத் தேவையான உரங்கள் கையிருப்பு இருக்கிறது. ஆங்காங்கே உரங்களை வாங்கிக் கொள்ளலாம். லாரி ஸ்டிரைக்கால் விவசாயப் பொருள்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. அதனால் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்க்க வேண்டும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறேன்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நலக்குறைவு பற்றி கேட்டு வந்திருக்கிறார்கள். அவர் உடல் நலத்தோடு நன்றாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துவரி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. துணை முதல்வர் பன்னீர் செல்வமும், நானும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். ஊடகங்களுக்கு ஏதாவது கிடைக்குமா என்று கிளப்பி விடுகிறார்கள். எட்டு வழிச் சாலை சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தால் பல மாவட்டங்கள் பயன்பெறும். இந்தச் சாலையால் 60 கி.மீட்டர் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். 95 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துவிட்டது. 9 சதவிகித பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகளும், பொதுமக்களும் இப்பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மேட்டூரில் இருந்து காவிரி செல்லும் பாதைகள் சமவெளி பரப்பாக இருப்பதால் அணை கட்ட முடியவில்லை. தமிழகத்துக்கு வரும் ஒரு சொட்டுநீரைக்கூட வீணாக்காமல் இருக்க ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 6 மாதத்தில் ஆய்வு செய்து ஆய்வறிக்கை கொடுப்பார்கள். தண்ணீர் தேக்கி வைப்போம். நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored