பணி நீக்கம், வேலையிழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்து தப்புவது எப்படி?Sponsoredமுன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் டிரெயினராக வேலைக்குச் சேர்ந்து, பத்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று டீம் மேனேஜர் என்ற உயர்பதவிக்கு வந்துள்ள ராஜேஷ் என்பவர், ஐந்து மாதத்துக்கு முன்னர் அந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்போது வேறு நிறுவனத்துக்கு மாறிவிடலாம் என்ற எண்ணத்தில் தைரியமாக இருந்தவருக்கு, வேலை தேடி அலையத் தொடங்கிய பிறகுதான் ஐ.டி நிறுவனங்களின் வேலைவாய்ப்புச் சூழல், தான் வேலைக்குச் சேர்ந்தபோது இல்லாமல், இந்தப் பத்து ஆண்டுகளில் மாறியிருப்பது தெரியவந்தது. 

அவரது சம்பளம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் அவரை வேலைக்கு எடுக்கத் தயங்கின. இன்னும் சில நிறுவனங்களில் அவரது பதவிக்கு நிகரான பணியிடம் காலியில்லை என்று கை விரித்தன. வேறு சில நிறுவனங்களோ, காலத்துக்கேற்ப அவர் தனது திறமையை அப்டேட் செய்யவில்லை என்றும், வயது கூடுதலாக இருக்கிறது என்றும் பல்வேறு காரணங்களைச் சொல்லி நிராகரித்தன. இதற்குள் ஓரிரு மாதம் கழிந்துவிட, கையிருப்பு அனைத்தையும் தொலைத்துவிட்டதால் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்கியும் சமாளிக்கத் தொடங்கினார். ஆனால், வங்கிக்கடன் மூலம் வாங்கிய படாடோபமான வீடு, கார், கிரெடிட் கார்டு ஷாப்பிங் நகைகள் என அனைத்தும் மாதாமாதம் இறுக்கிப்பிடிக்க, ஒருகட்டத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் தற்கொலை முயற்சியில் இறங்கியவரை கஷ்டப்பட்டுக் காப்பாற்றினார்கள்.

Sponsored


இந்த ஒரு ராஜேஷ் மட்டுமல்ல, இவர்போல பலரும் மாதாமாதம் சம்பளம் வாங்கியதுமே மொத்தப் பணத்தையும் இன்ஸ்டால்மென்ட்களில் முடக்கிவிட்டு, கைச்செலவுக்குக் கடன்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கைமுறை வெளியிலிருந்து பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தாலும், இயக்கிக்கொண்டிருப்பது என்னவோ வங்கிக்கடன்களாகத்தான் இருக்கும். ஆம், இவர்களைக் குறிவைத்தும் நம்பியும் பல வங்கிகள் கடன் தரக் காத்திருக்கின்றன. இவர்களும் தங்களது பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் சம்பள உயர்வுக்கேற்ப தங்களது வாழ்க்கைத் தரத்தையும் பெருத்த செலவுகளுடன் உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள். இந்தச் சூழலில் திடீர் வேலையிழப்பு என்ற கத்தி அவர்களை நோக்கிப் பாயும்போது நிலைகுலைந்துபோகிறார்கள்.

Sponsored


இன்றைய கார்ப்பரேட் சூழல், ஆண்டுக்காண்டு மென்பொருளின் வெர்ஷன் மாறுவதுபோல், தங்களது பணியாளர்களும் அப்டேட் செய்துகொள்வதையே எதிர்பார்க்கிறது. இதில் தேக்கநிலையை அடையும் பணியாளர்களைத்தான் வேலையிழப்பு கத்தி பதம்பார்க்கிறது. அதேபோல, குறிப்பிட்ட அளவுக்குமேல் சம்பளம் உயரும்போதும் அவர்களுக்குப் பதிலாகக் குறைந்த சம்பளத்துக்கு இரண்டு பேரை வேலைக்குச் சேர்க்கலாமே என்ற எண்ணத்தில் பணிநீக்கம் செய்கிறது.

இன்னொரு பக்கம் அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் வளர்ந்துவருவதாலும் பணியிழப்பு அதிகரிக்கிறது. மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் துறைகளிலும் ஆண்டுக்காண்டு ஆயிரக்கணக்கில்  வேலையிழப்பு தொடர்கிறது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் நசிவடைந்து மூடப்பட்டன. அங்கே வேலைசெய்த பணியாளர்களும் நிதிச் சிக்கலுக்கு ஆளானார்கள்.

இப்படித் திடீரென வேலை இழந்தவர்களுக்கு, இன்னொரு வேலையில் சேரும்வரை கடினமான வாழ்க்கைச்சூழல்தான். தனியார்த் துறையைப் பொறுத்தவரை இது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இந்தச் சூழலைத் தாங்குவதற்கு சரியான நிதி மேலாண்மை, நிதிச் சேமிப்பு, முதலீடு போன்றவை அவசியமாகிறது. இந்தக் கால இளைஞர்களுக்கு நிறைய சம்பாதிக்கும் திறமையிருந்தாலும், அதைத் திறம்பட சேமிக்க, முதலீடு செய்யத் தெரியாததுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். 

இத்தகைய நிதி நெருக்கடிக்குள் சிக்காமலிருக்க என்ன செய்யவேண்டும் என, பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, ``தொழில்நுட்பம் வளர்ந்துவரும் சூழலில் நம்முடைய திறனை வளர்த்துக்கொண்டே செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. பொதுவாக அக்கவுன்டன்சி, வருமானவரி, நிதி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்குத் திறன் மேம்பாடு பெரிய சவாலான விஷயமல்ல.

மென்பொருள் துறை, ஆட்டோமொபைல், எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்குக் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் கட்டாயம் இருக்கிறது. இந்தத் திறன் மேம்பாட்டுக்கு நிதிச்செலவு ஏற்படுகிறது. தொடர்ந்து மென்பொருள் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் படிக்கவேண்டியதிருக்கிறது. அதற்கு சில ஆயிரங்கள், லட்சங்களில் செலவழிக்கவேண்டியிருக்கிறது. தங்களது வருமானத்தில் இதற்கென ஒரு தொகை ஒதுக்கவேண்டியிருக்கிறது.

நமது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வரியாகச் செலவாகும். மிச்சம் இருப்பது மாதாந்திரத் தவணைகளுக்கும் படிப்புக்கும் செலவழித்ததுபோக, வீட்டுச்செலவுக்குச் சிக்கலாகும். எனவே, சம்பாதிப்பது அதிகமாக இருக்கும்போதே இரண்டாவது வருமானத்துக்கு (passive income) வழிசெய்ய வேண்டும். அந்த வருமானம் வரும் அளவுக்கு முதலீட்டைச் செய்ய வேண்டும். அந்த முதலீட்டுக்கான பணத்தை ஈட்டுவதற்கு, கடுமையான சேமிப்பு மற்றும் சிக்கன முறைகளை நாம் கையாளவேண்டும்.

அதேபோல மற்றவர்களோடு ஒப்பிட்டு நமது வாழ்க்கை தரத்தை ஏற்றுவதும் இறக்குவதுமாக இல்லாமல், நம்முடைய வாழ்க்கைமுறை என்னவோ அதற்கேற்ப செலவைக் குறைத்து முதலீட்டை அதிகப்படுத்தி வாழப் பழக வேண்டும். தற்போதைய அதிகப்படியான சம்பாத்தியம் நிரந்தரமில்லை என்ற எண்ணத்தோடு, தற்போதைய வருமானத்தில் பாதிதான் தற்காலச் செலவுக்கானது என்றும், மீதிப்பாதி எதிர்காலத்துக்கானது என்றும் எண்ண வேண்டும். இப்படித் திட்டமிட்டுச் செயல்பட்டால், திடீர் வேலையிழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியை தைரியமாக எதிர்கொள்ளலாம். 

நமது சேமிப்பை ஓரளவுக்கு நடுத்தர ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, கவனித்துவருவது நல்லது. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் அளவுக்கு நேரமிருக்காது என்பதால், அதைத் தவிர்க்கலாம். இந்த முதலீடுகளும் வருமானவரிச் சலுகையுடன் இருக்கும் திட்டமாக இருப்பது நல்லது. சம்பள வருமானத்துக்கான வருமானவரி போக, கூடுதலாக முதலீட்டு வருமானத்துக்கும் வரி கட்டும் சூழல் சுமையாக இருக்கும் என்பதால், மீண்டும் மீண்டும் வருமானவரி கட்டுவதை கூடுமானவரை தவிர்க்கலாம்.

அதேபோல வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், தங்களது வருமானம், வயது இரண்டையும் கணக்கிட்டு, வாடகைக்குக் கொடுக்கும் பணத்தைச் சொந்த வீட்டின் வங்கிக்கடன் தவணைக்குக் கொடுக்கலாம் என முடிவெடுப்பது சரியானதாக இருக்கும். வாடகையைப் பொறுத்தவரை ஆண்டுக்காண்டு உயரக்கூடியதாக இருக்கும். நமக்கு வருமானம் குறையும் காலகட்டத்தில் மிகப்பெரிய மாதச் செலவாக இருக்கக்கூடும். ஆனால், வீட்டுக்கடன் தவணையைப் பொறுத்தவரை நம் வருமானத்துக்கு ஏற்ப இருக்கும்பட்சத்தில் செலுத்துவது எளிது; வீடும் சொந்தமாகிவிடும். அதோடு, வருமானவரிச் சலுகைகளும் உண்டு. எனவே, அதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அதேபோல செல்போன், லேப்டாப், பைக், கார், வீட்டு உபகரணங்கள் போன்றவற்றை தவணைமுறையில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வருமானத்தில் சேமித்த பணத்திலிருந்தே வாங்க வேண்டும். செல்போனுக்காக 10,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவழிப்பது தற்போதைய காலகட்டத்தில் வீண்செலவே! புதுப்புது மாடல்கள் அறிமுகமானதும் போட்டிபோட்டு வாங்குவது வருமானத்தை வீணடிக்கச்செய்யும் பழக்கமாகும். கார் வாங்குவதாக இருந்தாலும் ஒரு குடும்பத்துக்கு ஒரு கார் மட்டுமே போதுமானது.

இறுதியாக, தற்போது `ஷாப்பிங்மேனியா' என்ற பழக்கம் அதிகரித்துவருகிறது. வாரக்கடைசி என்றாலே ஷாப்பிங் போவதும் நம் தேவைக்கும் அதிகமான பொருள்களை வாங்கிக் குவிப்பதும் அதிகமாகிவருகிறது. இதில், ஆன்லைன் வணிகம் வேறு இளைய சமுதாயத்தைச் சுண்டி இழுக்கிறது.  எனவே, ஷாப்பிங் மால்களுக்குள் நுழையும் முன் வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியலோடு நுழைவதே புத்திசாலித்தனம். தேவையற்ற செலவுகளால் பணமும் விரயமாகாது, வீடும் குப்பையாகாது" என்றார்.

ஆக, திடீர் பணியிழப்பு போன்ற இக்கட்டான சூழல்களைத் தவிர்க்க, பணியில் இருக்கும்போதே திட்டமிட்டுச் சேமித்து, முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அதை எதிர்கொள்ளும்நிதி ஆதரத்தோடு இருந்தால் தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்த்து பதற்றமில்லா வாழ்க்கையை வாழலாம்.Trending Articles

Sponsored