தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்காக படித்துறை அமைக்க ஜடாயு தீர்த்தத்தில் பூமி பூஜை!Sponsoredநெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில், 144 வருடங்களுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் மகா புஷ்கரம் விழாவுக்காக தீர்த்தக் கட்டங்களில் படித்துறை அமைப்பதற்காக, ஜடாயு தீர்த்தத்தில் பூமி பூஜை.நடைபெற்றது. 

நெல்லை மாவட்டத்தில் ஓடும் வற்றாத தாமிரபரணி நதியின் ராசி, விருச்சிகம். 12 வருடங்களுக்கு ஒருமுறை விருச்சிக ராசிக்கு குருபகவான் வருவது வழக்கம். ஆனால், 144 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அனைத்து கிரகங்களும் ஒன்று சேர்ந்து வருவதால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழா நடைபெற உள்ளது.

Sponsored


இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்காக, தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன. புஷ்கர விழாவில் நாடு முழுவதிலும் இருந்து சாதுக்களும் லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்துகொள்வார்கள் என்பதால், விழாவுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டுவருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி, பாபநாசத்தில் சமவெளி பகுதிக்கு வந்தடைகிறது. 

Sponsored


தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் பல்வேறு இடங்களிலும் 148 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. புஷ்கரம் நடக்கும்போது, இந்த தீர்த்தக் கட்டங்களில் குளித்தால், நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதனால், திரளான மக்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக ஆற்றில் படித்துறைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

நெல்லையை அடுத்த அருகன்குளம் பகுதியில், ராமபிரான் ஜடாயுக்கு மோட்சம் அளித்து தவம்செய்த ஜடாயு கட்டம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் பக்தர்களின் வசதிக்காக படித்துறை அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. வாஸ்து பூஜைக்கு முன்னதாக படித்துறையில் செங்கல்கள் மற்றும் கும்பம் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. தாமிரபரணி புஷ்கர தலைவரான பெருங்குளம் செங்கோல் ஆதீன குருமகா சந்நிதானம் வாஸ்து மந்திரங்கள் கூறி செங்கல்களை எடுத்து வைத்து மங்களாசாசனம் செய்தார். 

பின்னர், அனைவரும் தாமிரபரணி நதியில் வேத மந்திரங்கள் முழங்க கும்ப தீர்த்தத்தை விட்டனர். தாமிரபரணி மஹா புஷ்கரம் சிறப்பாக நடைபெற அனைத்து ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள் மற்றும் பக்தர்கள் மங்கல வாழ்த்துக் கூறினர். இந்த விழாவில், நாங்குனேரி ஸ்ரீ மதுரகவி வானமாமலை ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் உட்பட ஏராளமானோர் கலந்துகொணடனர். 
 Trending Articles

Sponsored