" 'அறிவே மனிதனைக் காக்கும் கருவி' என வாழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம்!" - சேவியர் ராஜப்பாமாணவர்களின் வழிகாட்டியாக இன்றும் அவர்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் ஜனாதிபதியான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் மறைந்த 3-வது ஆண்டு தினம் இன்று.

நாட்டின் தென்கோடி மூலையில் உள்ள கடலோரப் பகுதியில் பிறந்து தனது அறிவாற்றலால் விண்ணில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய நல் ஆசானும், உலகெங்கும் இருக்கும் மாணவர்கள் மத்தியில் அறிவியலையும், திருக்குறளையும் உரையாற்றி மகிழ்வதையே தனது பிறவிப் பயனாகக் கொண்ட லட்சிய விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் எண்ணங்கள், எழுத்துகள், சிந்தனைகளைப் பற்றி இங்கே நினைவுகூருகிறார் அவரது குடும்பத்தினரின் நண்பரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான சேவியர் ராஜப்பா.  ``அறிவே ஒரு மனிதனைக் காக்கும் கருவியாகச் செயல்படுகிறது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் டாக்டர் அப்துல்கலாம். பகைவராலும் அழிக்க முடியாத கோட்டையாக இருந்து ஒருவனைப் பாதுகாப்பது அவன் பெற்றிருக்கும் `அறிவே' என்ற பொருளுணர்ந்ததால் சென்ற இடமெல்லாம் அறிவை வளர்த்தெடுக்கத் தனது கேள்விகளால் வேள்விகளை நெய்தவர். தேசத்தின் கட்டுமானங்களில் இளைஞர்களின் பங்கேற்பு மிகவும் அவசியம் என்று உணர்ந்ததால், அவர் எங்குச் சென்றாலும் மாணவ - மாணவிகளைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் மூலம் தனது `விஷன் - 2020' திட்டங்களையும், தொலைநோக்குச் சிந்தனைகளையும் தனது இறுதிமூச்சுவரை விதைத்துச் சென்றவர்.

Sponsored


Sponsored


கடின உழைப்பினைக் கொண்டிருந்த கலாம், தனது பள்ளிப்பருவ காலங்களில் கிடைக்கும் விடுமுறை நாள்களில் பல்வேறு வேளைகளுக்குச் சென்று அதன்மூலம் கிடைத்த வருவாயினைத் தனது கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களுக்காகச் சேமித்தவர். எந்த ஒரு செயல் திட்டத்தை எடுத்தாலும் அதில் 100 சதவிகித அர்ப்பணிப்பைச் செலுத்திச் செயல்பட்டதன் விளைவாக அவர் எடுத்த திட்டங்களில் எல்லாம் வெற்றிபெற்றார். அவற்றில், `அக்னி', `பிரமோஸ்' ஏவுகணைகள் திட்டங்களும் அடக்கம். தாய்நாட்டின் மீதும், தாய் நாட்டு மக்கள் மீதும் மிகுந்த அன்புகொண்டிருந்த காரணத்தால் தன்னைத் தேடி வந்த வெளிநாட்டு வாய்ப்புகளை எல்லாம் நாகரிகமாக மறுத்துவிட்டவர். தனது அறிவும், உழைப்பும் தாய்நாட்டுக்காகவே செலவிடப்பட வேண்டும் என்ற நாட்டுப்பற்றில் உறுதியாக இருந்தவர்.

Sponsored


`தன்னம்பிக்கை என்பது உயர்ந்த மலையுச்சியிலிருந்து நீ கீழேவிழும் நேரத்தில்கூடச் சிறகுகளை வளர்த்துக்கொள்வதே' எனச் சொல்லி தன்னம்பிக்கை என்ற வார்த்தைக்கே தைரியத்தைத் தந்து, அதன்படி சிந்தித்து வாழ வழிகாட்டி சென்ற சிந்தனையாளர்.

`இருக்கலாம்... நடக்கலாம்... நினைக்கலாம் என்ற இந்தியரை, 

பறக்கலாம்... ஜெயிக்கலாம்... சாதிக்கலாம் என்ற 

சக்தியைக் கொடுத்த அப்துல்கலாம்'

- என்று காவல் துறைக் கண்காணிப்பாளர் வடுகம் சிவகுமார் எழுதிய பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வோர் இந்திய இளைஞரையும் தட்டி

எழுப்பும் ஆற்றல் கொண்டவராகத் திகழ்ந்தவர் அப்துல்கலாம் என்பதற்கு சான்று எதுவும் தேவையில்லை. காலம் கைகொண்டு சென்ற கலாம், வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு 10 கட்டளைகளைத் தன்வசம் வைத்திருந்து அவற்றை, தான் சந்திக்கும் மாணவர்கள் மத்தியில் வாசித்து அதனை, மாணவ - மாணவிகள் உறுதி எடுக்கும்படியும் செய்தவர்.

அறிவு, ஆற்றல், மனிதநேயம், நதிநீர் இணைப்பு, இயற்கை விவசாயம், மனவளம், பொறியியல், கண்டுபிடிப்பு, நூலறிவு, இசை, கவிதை, நாடகம், நட்பு, தேச ஒற்றுமை, மதநல்லிணக்கம், பிறருக்கு உதவும் குணம், நேர்மை, எளிமை, கனிவு என எண்ணற்ற எண்ணங்களை தன் வாழ்நாள் முழுவதும் கரம்பற்றி நடந்தவர்.

 இவற்றின் மூலம் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற இந்திய இளைஞர் சமுதாயம், நம் நாட்டை வளப்படுத்த காத்திருக்கிறார்கள். அவர்களை வழிநடத்த நம் தலைவர்கள் முன்வர வேண்டும். அதன்மூலம் கலாம் எதிர்பார்த்த `வல்லரசுக் கனவு' நிச்சயம் நனவாகும். 

`உங்கள் இதயங்களில் அன்பு எனும்

சிறகுகளைப் பொறுத்திக்கொள்ளுங்கள்.

அது, உங்களின் அளப்பறிய

ஆற்றலையும், அறிவையும் வெளிப்படுத்தும்

தோனியாகச் செயல்படும்'  - என்ற அவரது எண்ணங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். அதற்கு நம் நினைவில் இருக்கும் டாக்டர் அப்துல்கலாமின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் என்றென்றும் நமக்குத் துணையிருக்கும்'' என்றார்.Trending Articles

Sponsored