அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைச்சர், அனைத்துக் கட்சியினர் அஞ்சலிSponsored மறைந்த முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று காலை அவரது நினைவிடத்தில் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.

மறைந்த ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவிடம், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த தேசிய நினைவகத்தை கடந்த ஆண்டு இதே நாளில், பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து, இது வரை இந்த நினைவிடத்துக்கு 33 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்து, கலாமுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றதுடன், இங்கு அமைக்கப்பட்டுள்ள கலாமின் வாழ்க்கை வரலாற்று காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள்  ஆகியவற்றையும் கண்டு செல்கின்றனர்.

Sponsored


இந்நிலையில், இன்று அவரது 3-வது நினைவு தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலிசெலுத்தினர்.

Sponsored


தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோர் கலாம் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நடிகர் தாமு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பா.ஜ.க சார்பில், மாநில துணைத் தலைவர் குப்புராமு, மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்ம கார்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள், நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர். இவர்களைத் தொடர்ந்து, டாக்டர் கலாமின் முன்னாள் உதவியாளரும் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனருமான பொன்ராஜ், கலாம் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா தனது கணவருடன் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருக்கு பாதுகாப்பாக வந்த காவலர், காலணியைக் கழற்றாமல் நினைவிடத்தினுள் நுழைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.  அதைக் கவனித்த நினைவிட அதிகாரி, அந்தக் காவலரை அங்கிருந்து வெளியேற்றினார்.Trending Articles

Sponsored