``ஐயாவுக்கு எப்படி இருக்கு?”- கோபாலபுரத்தின் உருக்கமான காட்சிகள்Sponsoredதி.மு.க தலைவராகப் பொன்விழா ஆண்டைக் கடக்கிறார், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி. ஆனால், அதைக் கொண்டாட வேண்டிய கருணாநிதியின் உடல்நிலை குறித்த கவலையில் சோர்ந்திருக்கிறார்கள், தி.மு.க-வின் தொண்டர்கள். இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தலைவரின் பொன்விழா கொண்டாட்டங்களுக்கு ஓய்வுகொடுத்துள்ளார்கள் தி.மு.க-வினர். 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து கோபாலபுரத்தில் என்ன நடக்கிறது எனக் கருணாநிதியின் உறவுகளுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் கேட்டபோது, ``ட்ரக்கியோடமி சிகிச்சைக்காகக் காவேரி மருத்துவமனைக்குக் கடந்த வாரம் கருணாநிதியை அழைத்துப் போகும் முன்பு, அவருக்கு நினைவு இருந்தது. அருகில் இருப்பவர்களை அறிந்துகொண்டு, கைகளைப் பற்றிக்கொள்ளும் நிலையில் இருந்தார். ஆனால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவருக்கு நினைவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு மருத்துவர்கள் குழு, `முதுமையின் காரணமாக அறுவை சிகிச்சையைத் தாங்கும் நிலையில் அவரது உடல் இல்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொடுக்கப்படும் மருந்துகளைக்கூட அவர் உடல் ஏற்றுக்கொள்வது கடினம். அதனால்தான், அவரின் நினைவாற்றல் இப்போது இல்லாமல் இருக்கிறது. இனி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிப்பதைவிட வீட்டில் வைத்து அவருக்குத் தொடர் சிகிச்சை அளிப்பதுதான் சிறந்தது' என்று சொல்லியுள்ளார்கள். 

Sponsored


அதன்பிறகுதான் கருணாநிதியை வீட்டுக்கு அழைத்துவந்தார்கள். வீட்டுக்கு வந்தது முதலே படுக்கை நிலையில்தான் இருந்து வருகிறார். நினைவாற்றல் இல்லாமல் போய்விட்டது, அரைமயக்க நிலையிலே அவர் இருந்துவந்துள்ளார். நுரையீரலில் இருக்கும் சளி தொந்தரவால் அவரால் இயல்பாக மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். சளியும், நோய்த்தொற்றும் காரணமாக அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலைக் குணப்படுத்தவும், சுவாசக்கோளாற்றைச் சரிசெய்யவும் நேற்று காவேரி மருத்துவக் குழு கோபாலபுரம் வந்தது. மருத்துவக் குழு வருகைக்குப் பிறகுதான், `கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்' என்ற தகவல் வெளியே பரவியது. அதே நேரம், கருணாநிதியைச் சோதித்த மருத்துவர்கள், `அவருடைய இதயத்துடிப்பு சீராக உள்ளது. உள் உடல் உறுப்புகள் இயக்கத்தில்தான் உள்ளன. ஆனால், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தாலும், வாய்வழியாகவே அவர் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கிறார். செயற்கைச் சுவாசம் தேவைப்பட்டால் அளிக்கலாம்' என்று ஆலோசனை சொல்லியுள்ளார்கள். மேலும், கருணாநிதிக்குத் நோய்த்தொற்று இருப்பதால், அவரை யாரும் நேரில் பாரக்க வேண்டாம் என்றும் சொல்லியுள்ளார்கள். செயற்கைச் சுவாசம் அளிக்க வேண்டாம், அவர் இயற்கையான சுவாத்திலேயே இருக்கட்டும் என்று குடும்பத்தினர் கருத்து சொல்லியுள்ளனர். 

Sponsored


காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியான பிறகு, அனைத்துக் கட்சியின் தலைவர்களும் கோபாலபுரத்துக்கு வருகை தந்தவண்ணம் இருக்கின்றனர். அப்போது, அனைவரையும் ஸ்டாலின் கீழ்த்தளத்தில் சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து எடுத்துச் சொல்லி வருகிறார். யாரையும் மேல்தளத்தில் கருணாநிதியைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. தி.மு.க-வின் முன்னணித் தலைவர்களைக்கூடக் கருணாநிதியைப் பார்க்க மருத்துவக் குழு அனுமதிக்கவில்லை. நேற்று நள்ளிரவு காய்ச்சல் கொஞ்சம் குறைந்த நிலையில் வாய்வழியாகச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது, தி.மு.க-வினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

50 ஆண்டுக்காலம் இயக்கத்தைப் பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து கட்டிக்காத்த கருணாநிதி, தி.மு.க தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்ட பொன்விழா தினத்தன்று (இன்று) உடல் நலிவுற்றிருப்பதால் அவர் உடல்நிலை குறித்து ஏக்கத்தோடு கோபாலபுரம் வீட்டுவாசலில் நின்று விசாரித்துவருகிறார்கள் தி.மு.க தொண்டர்கள்'' என்றனர் மிகவும் வருத்தத்துடன்.Trending Articles

Sponsored