”ஜி.எஸ்.டிக்கு மட்டும்தான் புதுச்சேரியா...?” டெல்லியில் குமுறிய நாராயணசாமிSponsored`தனி மாநில அந்தஸ்து’ என்பது புதுச்சேரி மாநிலத்தின் நீண்டகால கோரிக்கை. அதற்காகக் கடந்த காலங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் போடப்பட்டு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் அவை புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. ஆனாலும், அந்தக் கோரிக்கை இன்றைய தேதிவரை கானல் நீராக மட்டுமே நீடித்துவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்துமுடிந்த 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து’ தீர்மானத்தை மீண்டும் கொண்டு வந்ததோடு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் அதைப் பேரவையில் நிறைவேற்றியது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு. மேலும், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் டெல்லிக்குச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து தீர்மானத்தை அளித்து தனி மாநிலக் கோரிக்கையை வைப்பதென்றும் பேரவையில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரதான எதிர்க் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தவிர்த்து அனைத்து எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

அதையடுத்து, “நீண்டகாலமாக யூனியன் பிரதேசமாக இருந்துவரும் புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்தைக் கேட்கின்றனர். புதுச்சேரியைப் பொறுத்தவரை இந்தியா - பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்கெனவே ஓர் ஒப்பந்தம் இருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்துதான் முடிவெடுக்க முடியும். அதனால், புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து என்பது சிக்கலான விஷயம்” என்று தனது எதிர்ப்பை மறைமுகமாக வெளிப்படுத்திய புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி, “புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து கேட்பதை காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் விரும்பவில்லை” என்று அவர்களையும் இந்த விவகாரத்தில் உள்ளே இழுத்துவிட்டார். உடனே, ``கிரண்பேடியின் இந்தக் கருத்து காரைக்கால், மாஹி, ஏனாம் பிராந்திய மக்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது” என்று கொதித்தெழுந்தன அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்.

Sponsored


அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதோடு, டெல்லிக்குச் சென்று அந்தத் தீர்மானத்தைப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து அளிக்க முடிவெடுத்தோம். அதன்படி, என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தவிர காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கடந்த 23-ம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரை முதலில் சந்தித்தோம். அப்போது அவரிடம், ‘1954-ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட புதுச்சேரி இந்திய யூனியனில் இணைந்தது. அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரிக்கு மத்திய அரசு 90 சதவிகித மானியம் கொடுத்தது. அதையடுத்து புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் வந்தது. புதுச்சேரியுடன் யூனியன் பிரதேசங்களாக இருந்த கோவா, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகலாந்து ஆகிய அனைத்தும் மாநில அந்தஸ்தைப் பெற்றுவிட்டன. புதுச்சேரி மட்டும் அப்படியே நீடித்துவருகிறது. 2016-ம் ஆண்டு புதுச்சேரிக்குத் தனிக் கணக்கு தொடங்க அதிகாரம் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதுவரை கொடுத்துவந்த 70 சதவிகித மானியத்தை 30 சதவிகிதமாகக் குறைத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் திட்டங்களை  மாநிலத்தில் நிறைவேற்றும்போது 90 சதவிகிதம் கொடுக்கப்பட்டு வந்த மானியத்தையும் 60 சதவிகிதமாகக் குறைத்துவிட்டது. 

Sponsored


ஒவ்வோர் ஆண்டும் புதுச்சேரி மாநிலத்தின் திட்டமில்லாச் செலவு அதிகரித்தபோதிலும் மத்திய அரசு அதிகப்படுத்தவில்லை. டெல்லியில் போலீஸுக்கு முழுச் சம்பளமும், ஓய்வுபெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தையும் மத்திய அரசே செலுத்தி வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய, மாநிலங்களுக்கான நிதிக் கமிஷனிலும் சேர்க்கப்படவில்லை, சட்டசபை இருப்பதால் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் கமிஷனிலும் சேர்க்கப்படவில்லை. ஆறாவது ஊதியக்குழு அமல்படுத்தியதற்கான பாக்கித் தொகையையும் தரவில்லை. அதேபோல,  ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவதற்குத் தருவதாகக் கூறிய நிதியையும் தரவில்லை. நிர்வாகரீதியாகப் பார்த்தால் மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசத்துக்கும் தனித்தனி அதிகாரம் இல்லை. ஆனால், விதிகளை மீறி அனைத்துக் கோப்புகளையும் துணைநிலை ஆளுநர் திருப்பி அனுப்பிவருகிறார். இதனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசு முழு அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியுடன் ஒப்பிடும்போது நிதி, சட்டம் - ஒழுங்கு, நிலம் ஆகியவை டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், இவை மூன்றும் புதுச்சேரியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முட்டுக்கட்டை இருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் அமைச்சரவை முடிவில் கவர்னருக்கு மாற்றுக்கருத்து ஏற்பட்டால், அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பவேண்டும். அமைச்சரவை மீண்டும் அதே முடிவை எடுத்தால் அதை மாற்றவோ, திருப்பி அனுப்பவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. ஆனால், புதுச்சேரியில் அமைச்சரவை முடிவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பித் தீர்வு காண வேண்டும். இதுதான் மற்ற மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் உள்ள ஒரே வித்தியாசம். ஜி.எஸ்.டி கவுன்சிலில் புதுச்சேரியைத் தனி மாநிலமாக அங்கீகரிக்கும் மத்திய அரசு அரசியல் நிர்வாகத்திலும், நிதி தருவதிலும் யூனியன் பிரதேசமாகவே பார்க்கிறது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற இயலாத சூழல் உள்ளதால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும்’ என்று வலியுறுத்தினோம்.

இதுவரை புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றினாலும் அதைப் பிரதமர், ஜனாதிபதிக்கு அனுப்பியதில்லை. ஆனால், தற்போது நேரடியாகவே சென்று அவர்களிடம் தீர்மானத்தை வழங்கி மாநில அந்தஸ்து கிடைப்பதற்கான விதையை விதைத்துள்ளோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. புதுச்சேரிக்கு என்ன செய்தால் நன்மை ஏற்படும் என்பது அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ-க்களுக்கும்தான் தெரியும். புதுச்சேரி இந்தியாவுடன் இணையும்போது புதுச்சேரியின் தனித்தன்மையைப் பாதுகாப்போம் என்று பிரெஞ்சு அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் என நான்கு பிராந்தியங்களும் ஒன்றாக இணைந்துதான் மாநில அந்தஸ்தைப் பெறுவோம்.

நிலப்பகுதியில் பிரிந்துகிடப்பதாகக் கூறினால் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பாகூர், திருக்கனூர், காலாப்பட்டு பகுதிகளும் கூடப் பிரிந்துதான் இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு மட்டும்தான் மாநில அந்தஸ்து கிடைக்கும். கவர்னர் கிரண்பேடி அவரது எல்லையில்தான் செயல்பட வேண்டும். அரசியல்வாதியாகச் செயல்பட வேண்டும் என நினைத்தால் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால், கவர்னராக இருந்து கொண்டு அரசியல்வாதியைப்போல் செயல்படக்கூடாது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கொடுக்கக்கூடாது என்று சொல்வதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை சேர்ந்தவரா? எங்கள் மாநிலத்தின் பிரச்னையை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். கவர்னர் கிரண்பேடி அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம்” என்றார் கடுமையாக.

மேலும் அவர், ``2011-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மாநில அந்தஸ்து வேண்டும் என்று மாநாடு போட்டவர். ஆனால், நாங்கள் அப்போது சிறப்பு மாநில அந்தஸ்துதான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். ஆனாலும், பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மாநில அந்தஸ்து கேட்டதால், பெரும்பான்மைக்கு மதிப்பளிக்கும் நோக்கில் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, `சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து பெற ஆதரவு அளித்து, டெல்லி செல்லும்போது வருவோம்' என்றார். அதனடிப்படையில் அவருக்குக் கடிதம் அனுப்பியதுடன், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு  அழைத்தோம். அவரால் வர முடியாவிட்டாலும் அவரது கட்சி எம்.எல்.ஏ-க்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் அவரும் வரவில்லை, எம்.எல்.ஏ-க்களையும் அனுப்பிவைக்கவில்லை. அதனால் மாநில அந்தஸ்து பிரச்னையில் எதிர்க் கட்சி தரப்பு ரங்கசாமிக்கு உள்ளேயும் வெளியேயும் இரு நிலைப்பாடுகள் இருக்கின்றன” என்றார்.Trending Articles

Sponsored