கருணாநிதி ஹெல்த் ரிப்போர்ட் - புகைப்படம் சொல்வது என்ன?



திமுக தலைவர் கருணாநிதியை, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்த புகைப்படம் வெளியானது. இதில் இருந்த அளவீடுகள் மூலம் கருணாநிதியின் உடல்நிலையை கணிக்க முடிகிறது.

Sponsored


தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டதாக இரண்டுநாட்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியானது. அறிக்கையை தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அ.தி.மு.க, வி.சி.க, த.மா.க, உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவரவர்கள் கோபாலபுரத்துக்கு வருகை புரிந்தனர். அவர்கள் வருகையை அடுத்து சில மணி நேரங்களிலே கோபாலபுரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏராளமான தொண்டர்கள், தி.மு.க தலைவரின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்தனர்.

Sponsored


இந்த நிலையில், ரத்த அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக கோபாலபுரம் இல்லத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என ஆ.ராசா தெரிவித்ததையடுத்து, தொண்டர்கள் நிம்மதியடைந்தனர்.

Sponsored


கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும், திரைத்துறையினரும்,  அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்நித்து, உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர். மாநில முதல்வர்கள் சிலரும் கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில் சென்னை வந்துள்ள துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். அவருடன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். அவர் கருணாநிதியை பார்த்த புகைப்படம் வெளியானது. அந்த படத்தில் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் மானிட்டரில் சில அளவீடுகள் இருந்தன. அதனடிப்படையில்,  வயதானவர்களை பொறுத்தவரையில் சராசரி  இதயத்துடிப்பு 72 - 100வரை இருக்கும். அந்த புகைப்படத்தில் கருணாநிதியின் இதயத்துடிப்பு 94 என்ற அளவில் உள்ளது. அதே போல ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு, இயல்பாக 90-100 வரை இருக்கும். அந்த புகைப்படத்தில் 97 என காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்ஸிஜன் அளவும் சீராகவே உள்ளது. அடுத்ததாக நிமிடத்துக்கு  மூச்சு விடும் அளவு 30 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் ஓரளவுக்கு சராசரி தான். இதன் மூலம் கருணாநிதியின் உடல்நிலை சராசரியான அளவில் இருப்பதாகவே கருத முடிகிறது. இந்த புகைப்படத்தின் மூலம் கருணாநிதிக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.
 



Trending Articles

Sponsored