`தலைவர் நலமாக உள்ளார், தைரியமாக இருங்கள்’ - தொண்டர்களுக்கு ஆறுதல் சொன்ன கனிமொழிSponsored‘தி.மு.க தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார், தொண்டர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள்’ என மருத்துவமனை வளாகத்தில் கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாள்களாக அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என வெளியான தகவலால் தி.மு.க தொண்டர்கள் பலர் மருத்துவமனை வளாகத்தில் குவியத்தொடங்கினர். மேலும், கருணாநிதியின் குடும்பத்தாரான ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி என அனைவரும் மருத்துவமனை வந்ததை அடுத்து மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

Sponsored


கருணாநிதியின் உடல்நிலை குறித்த வதந்தியும் மருத்துவமனை சுற்றி அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டதும் தொண்டர்களின் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது. பின்னர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளார் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பிறகுதான் தொண்டர்கள் சற்று நிம்மதியடைந்தனர். 

Sponsored


இந்நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து காவேரி மருத்துவமனைக்குச் சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர், ``தி.மு.க தலைவர் கருணாநிதி தற்போது நலமாக உள்ளார். தொண்டர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள். யாரும் இங்கு இருக்க வேண்டாம், அனைவரும் வீட்டுக்குச் சென்று உணவருந்திவிட்டு வாருங்கள்” எனக் கூறினார். பின்னர் தொண்டர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியாகக் கலைந்து செல்லுமாறு மருத்துவமனை சார்பாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.Trending Articles

Sponsored