எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்திக்கு தயாராகும் 3டி ஓவியப் பானைகள்!



Sponsored



நெல்லையை அடுத்த அருகன்குளத்தில் அமைந்திருக்கிறது எட்டெழுத்து பெருமாள் கோயில். கிருஷ்ண ஜயந்தியன்று, இந்தக் கோயிலுக்கு வரும்  பக்தர்களுக்கு பிரசாதமாக பட்சணங்கள் கொடுப்பதற்காக 11,008 ஓவியப் பானைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக 3டி சித்திர பானைகளும் செய்யப்பட்டுள்ளன.

தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள எழில் கொஞ்சும் கிராமம் சேந்திமங்கலம். அதன் அருகில் உள்ள அருகன்குளத்தில் பசுமையான வயல்வெளிகள் சூழ, ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்தப் பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்ததாக ஒரு செய்தி உண்டு. சித்தர்களுக்கு ஸ்ரீராமன் காட்சியளித்த இடமாகவும், சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோயிலாகவும் பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது

Sponsored


ஶ்ரீஎட்டெழுத்து பெருமாள் கோயிலுடன் இணைந்து பிரமாண்டமான ஒரு கோசாலை அமைந்துள்ளது. அதில் 250-க்கும் அதிகமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கோசாலையின் மையப்பகுதியில் பசுக்களுடன் கிருஷ்ணர் இருப்பது போன்ற சிலை  இருக்கிறது. இந்தச் சிலைக்கும் கோசாலையில் உள்ள பசுக்களுக்கும் தினமும் இருவேளையும் பூஜை நடத்தப்பட்டுவருகிறது.

Sponsored


இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிருஷ்ண ஜயந்தி விழா மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலில் இறைவனுக்கு பிரசாதங்களை மண் பானைகளில் வைத்து நைவேத்தியம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு முதன்முதலாக 25 பானைகளில் பிரசாதங்களை பானைகளில் வைத்து நைவேத்தியம் செய்தனர். பின்னர் அதுவே படிப்படியாக அதிகரித்து 108, 1,008 என உயர்ந்து தற்போது 11,008 பானைகளில் பிரசாதங்களை நைவேத்தியம் செய்யும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

பிரசாதப் பானைகளை அழகுபடுத்தும் வகையில் அதில் அழகழகான ஓவியங்களும் தீட்டப்படுகின்றன. ஒவியம் தத்ரூபமாக அமைவதற்காக,  'பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்' கொண்டு முதலில் சிற்பத்தின் வடிவம் வரையப்படுகிறது, பின்னர் அதனுள் வண்ணம் தீட்டப்பட்டு ஓவியம் மிக நேரத்தியாக்கப்படுகிறது. கிருஷ்ணரின் முகம், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர், மயில் தோகையில் கிருஷ்ணர், இயற்கைக் காட்சிகளுடன் இருக்கும் கிருஷ்ணர், சங்கு சக்கரத்துடன் உள்ள கிருஷ்ணர் எனப் பல்வேறு வகையான ஓவியங்கள் வரையப்படுகின்றன. 

நாட்டிலேயே முதல் முறையாக, ஶ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயிலில் மட்டுமே இது போன்று வண்ணமயமான மண் பானைகள் தயார் செய்யப்பட்டு அதில் கிருஷ்ணருக்கு பிரசாதம் நைவேத்தியம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. ஓவியங்கள் தீட்டப்பட்ட மண்பாத்திரங்களில் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பண்டங்களான வெண்ணெய், முறுக்கு, தட்டை, லட்டு, சீடை, ஜிலேபி, அல்வா, பர்பி, மைசூர்பாக், ஏணி மிட்டாய், காரச் சேவு, வறுவல், இனிப்புகள் உள்ளிட்ட பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன.

இந்தப் பிரசாதங்கள் அனைத்தும் நெல்லையில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில் பணியாற்றும் திறமையான சமையல் கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சிறிய பானைகளில் முக்கால் கிலோ பட்சணங்களும், பெரிய பானைகளில் 2 கிலோ மற்றும் 3 கிலோ அளவுக்கு பட்சணங்களும் நிரப்பப்பட்டு பூஜையின் போது வைக்கப்படும். இதற்கான பானைகள் தயாரிக்கும் பணிகள் ஓராண்டாக நடைபெற்ற போதிலும், ஓவியம் தீட்டும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்படுகிறது. 

அதன்படி, 6 முதல் 10 ஓவியர்கள் மண் பானைகளில் ஓவியங்களைத் தீட்டுகிறார்கள். வண்ணங்கள் பூசுவது, அவற்றில் சித்திரங்களை வரைவது போன்ற பணிகள் வேகம் பிடிக்கின்றன. தற்போது ஓவியம் தீட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக 3டி முறையில் பானைகளில் சித்திரங்கள் வரையப்படுகின்றன. அதன்படி சில பானைகளில் மட்டும் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மூலமாக பானை மீது சிலை போன்று ஓவியங்களை வடிவமைத்து அதில் நேர்த்தியாக வர்ணம் தீட்டப்படுகிறது.  முப்பரிணாமத்தில் வரையப்படும் இந்த ஓவியங்கள் மனதைக் கவர்கின்றன. இந்த ஆண்டு பரீட்சார்த்தமாக 17 பானைகள் மட்டும் முப்பரிமாணத்தில் வரையப்பட்டுள்ளன.

இந்தப் பானைகளில் பட்சணங்கள் நிரப்பப்பட்டு பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படும். இதற்கான முன்பதிவு ஒரு மாதத்துக்கு முன்பாகவே தொடங்குகிறது. முன்பதிவு செய்த பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். இதற்காக பணம் எதுவும் பெறப்படுவதில்லை. கிருஷ்ண ஜயந்தி விழா செப்டம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் பின்னர் செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு பிரசாதப் பானைகள் விநியோகிக்கப்படும். 

இது குறித்து ராஜகோபால் என்ற பக்தர் கூறுகையில், ’’மதுரா நகருக்கு அடுத்தபடியாக ஶ்ரீஎட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது இந்தக் கோயிலில் மனமுருகி வேண்டுவது நிறைவேறுகிறது. வழக்கமாக எல்லா கோயில்களிலும் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் பாரம்பரிய முறைப்படி மண் பானைகளில் பிரசாதம் வழங்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. அதோடு, பிரசாதப் பானைகளில் ஒவியங்கள் வரையப்பட்டு இருப்பதால் அவற்றை வீட்டின் பூஜையறையில் வைத்துப் பாதுகாக்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது’’ என்றார்.

அருகன்குளம் ஶ்ரீஎட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்திகான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பிரசாதப் பானைகளைப் பெறுவதற்காக பக்தர்கள் முன்பதிவு செய்வதும் தொடங்கி இருக்கிறது. கிருஷ்ண ஜயந்திக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர். 



Trending Articles

Sponsored