ஶ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த ராகவா லாரன்ஸ்!



Sponsored



தெலுங்கு ஊடகங்களில் மட்டும் ஒலித்துவந்த ஶ்ரீரெட்டியின் பெயர், கடந்த சில வாரங்களாகத் தமிழ் ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவர், தமிழ் சினிமாவில் இருக்கும் சில ஹீரோக்கள், இயக்குநர்கள் தனக்கு வாய்ப்பு கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டிவந்தார். அதில், அவர்  நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பெயரைத்தான் முதலில் வெளியிட்டார். இத்தனை நாள்கள் இதுகுறித்து எந்த எதிர்ப்பும், விளக்கமும் அளிக்காத ராகவா லாரன்ஸ், இப்போது தன்னுடைய பதிலை வெளியிட்டுள்ளார்.

"ஶ்ரீரெட்டி கூறியிருப்பது பற்றி நான் விளக்கவேண்டியுள்ளது. இது, எனக்குப் பெரிய விஷயம் இல்லை. மேலும், இதுகுறித்து மீடியா தொடர்ந்து என்னைத் தொடர்புகொண்டு விசாரிப்பதும், இந்தப் பிரச்னை தொடர்பான விளக்கத்தைக் கேட்பதும் என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஶ்ரீரெட்டி என்னை  ஏழு வருடங்களுக்கு முன்பு 'ரெபெல்' திரைப்படம் ஷூட்டிங்கின்போது சந்தித்ததாகச் சொல்கிறார். அப்போதே, ஏன் அவர் இதுகுறித்து புகார் கொடுக்கவில்லை. இதெல்லாம் சரி. அவர் என்னுடைய  ஹோட்டல் அறைக்கு வந்ததாகவும், அங்கு கடவுள் புகைப்படங்கள் மற்றும் ருத்ராக்‌சத்தைப் பார்த்ததாகவும் சொல்கிறார்.  ஹோட்டல் அறையில் ருத்ராக்‌சத்தை வைத்து பூஜை செய்ய நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் ஶ்ரீரெட்டியிடம் நேரடியாகச் சொல்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு நான் யார் என்று தெரியும். கடவுளுக்கும் தெரியும். இத்தனை நடந்தும் எனக்கு உங்கள் மேல் கோபம் இல்லை. உங்களுடைய இன்டர்வியூவ்களைப் பார்த்தால் எனக்கு பாவமாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு என்னதான் பிரச்னை? எல்லோரும் வாய்ப்பு தருவதாகச் சொல்லி உங்களை ஏமாற்றிவிட்டதாகத்தானே புகார் சொல்கிறீர்கள்.

நீங்கள், உங்களை நல்ல நடிகை என்று சொல்வதால், ஒன்று செய்யலாம். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, அதில் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்கச்சொல்கிறேன். நடனமாடச் சொல்கிறேன். என்னைப்போன்று ஆடச் சொல்ல மாட்டேன். மிக எளிமையான நடனம் ஆடினால் போதும். ஒரு நடிகருக்கு அத்தியாவசியத் தேவையான நடிப்பும், நடனமும் இருந்தால்போதும். நீங்கள் நடிப்பது எனக்கு உண்மையில் பிடித்திருந்தால், பத்திரிகையாளர்கள் முன்பு உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பளிக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கான முன்பதிவும் கொடுக்க நான் தயார். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால், உங்களை நேரில் சந்திக்க எனக்கு எந்தத் பயமும் இல்லை. என்னுடைய படத்தில் நீங்கள் நடித்தால், உங்களுக்கு அதிகப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படி உங்களுக்கு மற்றவர்கள் முன்பு நடிக்கத் தயக்கமாக இருந்தால், என்னுடைய மேனேஜரைத் தொடர்புகொள்ளுங்கள். நேரடியாக என்னுடைய அலுவலகம் வாருங்கள். உங்களுடன் வழக்கறிஞர் மற்றும் உங்கள் ஆலோசகரையும் உடன் அழைத்துவாருங்கள். வந்து நடித்துக் காட்டுங்கள். என்னுடைய தரப்பில் இருந்து நிச்சயம் உதவ முயல்வேன். இந்த விளக்கத்தை நான் பயத்தினால் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிக்கக்கூடியவன். அதனால்தான், என்னுடைய அம்மாவுக்கு கோயில் கட்டினேன். நாம் நல்ல விஷயங்களையே பேசுவோம்; நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored