க்யூ.ஆர் கோடுடன் ஐ.டி கார்டு... அசரடிக்கும் அரசுப் பள்ளி! #CelebrateGovtSchoolSponsoredதொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியில் உள்ள காலகட்டம் இது. பெரியவர்களைவிட, சிறுவர்கள் ஸ்மார்ட்போன் உள்பட பல கேஜட்களை நேர்த்தியாகக் கையாளுகின்றனர். தனியார் பள்ளிகள் பலவற்றில், மாணவர்களின் வீட்டுப் பாடங்களை, எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெற்றோர்களுக்கு அனுப்புவது எப்போதோ ஆரம்பித்துவிட்டது. இந்தப் பழக்கம், அரசுப் பள்ளிகள் சிலவற்றிலும் தற்போது நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளது. ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சிகளை அரசு அளித்து வருவதால், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு, புதிய தொழில்நுட்பங்களில் கற்பித்து வருகின்றனர்.

தனியார் பள்ளியை நோக்கி, பெற்றோர்கள் செல்லத் தூண்டுபவற்றை, அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தும் முயற்சியில் பல பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியணை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியின் சிறப்புகளை மென்மையான புன்னகையுடன் சொல்கிறார், தலைமை ஆசிரியர் என்.தர்மலிங்கம்.

Sponsored


 "வெள்ளியணை கிராமத்தின் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் ஐந்து தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 56. அவர்களில் 45 பேரை எங்கள் பள்ளியை நோக்கி வரவைத்திருக்கிறோம். பள்ளியில் 156 மாணவர்கள் படிக்கின்றனர். சாரணர் இயக்கம் என்பது, பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் கிடையாது. மாவட்ட அளவிலான தொடக்கப் பள்ளிகளில், முதன்முறையாக எங்கள் பள்ளியில்தான் சாரணர் இயக்கத்தைத் தொடங்கினோம். மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இதில் சிறப்பாகப் பயிற்சி பெற்றுவருகின்றனர். அதேபோல, பசுமைப் படை மூலம் இயற்கையைப் பற்றித் தெரிந்துகொள்வதோடு, மண்ணை நஞ்சாக்கும் பாலித்தீன் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புஉணர்வு பரப்புரையும் செய்துவருகின்றன" என்கிறார்.

Sponsored


மானவர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டைக் கொடுத்திருப்பது இந்தப் பள்ளியின் மற்றொரு சிறப்பு.

"இந்த ஆண்டு தமிழக அரசு உருவாக்கியிருக்கும் புதிய பாடப்புத்தகங்களில், ஒவ்வொரு பாடத்துக்கும் மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள க்யூஆர் கோடு கொடுத்திருப்பது தெரிந்த விஷயம். இது மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதற்கும்  உதவியாக இருக்கிறது. இந்த க்யூஆர் கோடு முறை ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் பிடித்துவிட்டது. இதே முறையை நம் பள்ளி மாணவர்களின் ஐ.டி கார்டிலும் இணைக்கலாமே என்ற யோசனை வந்தது. ஆசிரியர் மனோகரன் உதவியுடன் விரைந்து  செய்தோம். மற்ற ஆசிரியர்களும் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு அளித்தனர். நாங்கள் அளித்திருக்கும் இந்த அடையாள அட்டையில் உள்ள க்யூஆர் கோடு மூலம், அந்த மாணவரின் பெயர், பிளட் குரூப், படிக்கும் வகுப்பு, பெற்றோரின் பெயர்கள், பள்ளி மற்றும் வீட்டு முகவரிகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், அன்றைய தினம் என்னென்ன வீட்டுப் பாடங்கள் கொடுக்கிறோம் என்பதையும், மாணவர் பற்றிய குறிப்புகளையும் தெரிந்துகொள்ளும் விதத்தில் உருவாக்கியிருக்கிறோம்'' என ஆச்சர்யப்படுத்துகிறார் தர்மலிங்கம்.

''இதற்கு நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அடையாள அட்டையில் இருக்கும் தங்களின்

தகவல்களைத் தெரிந்துகொள்ளும் ஆவலில், க்யூஆர் கோடைப் பயன்படுத்தப் பழகுகிறார்கள். அதுவே பாடங்களில் உள்ள க்யூஆர் கோடுகள் வழியே தகவல்களை அறியும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முதலில் பெற்றோர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்போகிறோம். அடுத்து வரும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பின் முதன்மையான விஷயமாக இதுவே இருக்கும். கிராமத்து மாணவர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சாமல், அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான தூண்டுகோலாக எங்களின் பணிகளை அமைத்துக்கொண்டுள்ளோம். அவற்றுள் ஒன்றுதான் இந்த க்யூஆர் ஐடி கார்டு. அடுத்து, ஸ்மார்ட் கிளாஸுக்கான தனி வகுப்பறையை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். அப்படிக் கிடைக்கும்பட்சத்தில், மாணவர்களுக்குப் பல்வேறு விஷயங்களைக் காட்சி வடிவில் கற்பிக்க உதவியாக இருக்கும்." என பெரும் ஆர்வமும் அக்கறையுமாகப் பேசுகிறார், தலைமை ஆசிரியர் தர்மலிங்கம். 

'எட்டாக் கனி' என எந்த விஷயமும் கிராமத்து மாணவர்களுக்கு இருந்துவிடக்கூடாது என இயங்கும் இவரைப் போன்ற ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். Trending Articles

Sponsored