``கருணாநிதி உருவாக்கிய ஆரோக்கிய அரசியல்..!’’ #Karunanidhi



Sponsored



தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க-வுக்கும் அதன் தலைவராக 50 ஆண்டுக்காலம் இருந்த மு.கருணாநிதிக்கும் தனியான, மிகப்பெரிய ஓர் அத்தியாயம் உண்டு. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேறி அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கிய நாள்முதல், தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்களும் அவ்விரு கட்சிகளின் நிர்வாகிகளும் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருந்து வருகின்றனர். அதிலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதாவது 2016 டிசம்பர் வரை, அ.தி.மு.க - தி.மு.க-வினர் இடையேயான பரஸ்பர மோதல் மிகவும் உச்சத்தில் இருந்தது என்றே சொல்லலாம். ஒரே குடும்பத்தில் அண்ணன் அ.தி.மு.க-விலும், தம்பி அல்லது உறவினர்கள் தி.மு.க-விலும் உறுப்பினர்களாகவோ நிர்வாகிகளாகவோ இருந்தால், அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

ஜென்ம விரோதிகளைப் போன்றே தி.மு.க-வினரும் அ.தி.மு.க-வினரும் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வார்கள். பொதுமேடைகளிலும் தேர்தல் நேர பிரசாரங்களின்போதும் அ.தி.மு.க - தி.மு.க-வினர் இடையே மோதல் வலுப்பெற்று, கைகலப்பு, மோதல்களில் முடிவதும் வாடிக்கையான ஒன்றாகும். அதிலும், அ.தி.மு.க தலைமையை, தி.மு.க-வினர் விமர்சிப்பதும் தி.மு.க தலைமையை அ.தி.மு.க-வைச் சேர்ந்த சாதாரண தொண்டன்கூட, தங்களின் தலைவி முன்னிலையிலோ அல்லது பொது வெளியிலோ புழுதிவாரி தூற்றுவதும் தொடர்ந்து நடைபெறுவது வாடிக்கை. தமிழக சட்டசபைக்குள்ளும் அ.தி.மு.க - தி.மு.க உறுப்பினர்கள், ஒருவரையொருவர் குற்றம்சாட்டிப் பேசுவதும் வெளிநடப்பு செய்வதும் சபை நடைபெறும் நாள்களில் அன்றாட நிகழ்வாக இடம்பெறும். 

Sponsored


அ.தி.மு.க-வினரும் தி.மு.க-வினரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக்கொள்வதே அபூர்வமானதாக இருக்கும். திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகள் என்றாலும் துக்க நிகழ்வுகள் என்றாலும் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திக்காமல் ஒதுங்கியே அரசியல் செய்து வந்தனர். அப்படியே, அதுபோன்ற விழாக்களுக்கோ துக்க நிகழ்வுகளுக்கோ இரு கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்றாலும் ஒருவர் போகும்போது, இன்னோருவர் அங்கே இருக்காதவாறு பார்த்துக்கொள்வார்கள். அதுபோன்றே அவர்களின் ஷெட்யூலை வகுத்துக்கொள்வார்கள். தலைவர்கள் ஆனாலும், ஒன்றிய நிர்வாகிகள் ஆனாலும், இரு கட்சியினரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டாலே, தலைமை தங்களைக் கட்சியிலிருந்து தூக்கியெறிந்துவிடும் என்பதால், கிராமங்களில்கூட தி.மு.க - அ.தி.மு.க-வினர் அடக்கியே வாசிப்பார்கள். அப்படியே ஓரிரு இடங்களில் இரு துருவக் கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டாலும் அந்தச் சம்பவம் குறித்து, தலைமைக்கு போட்டுக் கொடுத்து, சம்பந்தப்பட்டவர்களைக் கட்சியிலிருந்து நீக்கும்வரை தூற்றுவோரும் இரு கட்சிகளிலுமே உள்ளனர். 

Sponsored


இதுபோன்ற சூழலில் நடவடிக்கை எடுப்பதில் தி.மு.க தலைவர் கருணாநிதி, சற்றே இளகிய ரகம் எனலாம். இரு கட்சிகளைச் சேர்ந்தோர் சந்தித்துக்கொண்டாலும் அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஆனாலும், இந்த இரண்டு கட்சிக்காரர்களுக்கும் இடையே எப்போதுமே நீண்ட இடைவெளி இருந்துகொண்டிருந்தது. அதன் உச்சகட்ட உதாரணமாக, இப்போது நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை, தன்னுடைய மகள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் மகனை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக, மகளின் திருமணத்துக்கே செல்லவில்லை என்பதைக் கூறலாம். அதாவது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அந்த வி.ஐ.பி-யின் மகன் என்பதால், தான் சார்ந்துள்ள கட்சித் தலைவர் (அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா), அந்தத் திருமணத்தில் பங்கேற்பதை விரும்ப மாட்டார் என்பதை மனதில் வைத்து, மகள் திருமணத்தையே புறக்கணித்தவர் தம்பிதுரை என்ற வரலாறும் உண்டு. ஆனால், இந்த வீராப்புகள்; அரசியல் நாடகங்களை எல்லாம், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது உடைத்து தகர்த்தெறிந்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று சசிகலாவைச் சந்தித்து விசாரித்தார்.

சிகிச்சை பலனின்றி, 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததும், ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருமாறு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் சசிகலா.

இதனிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வயோதிகத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியில் உடல் நிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு மோசமடைந்தது. இதையடுத்து, காவேரி மருத்துவமனை டாக்டர்கள், கருணாநிதிக்கு வீட்டிலேயே தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஜூலை 26-ம் தேதி இரவு, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கே சென்று, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரித்தனர். தி.மு.க முன்னணி தலைவர்கள் துரைமுருகன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், ரகுமான்கான் ஆகியோரையும் அவர்கள் நேரில் சந்தித்து, கருணாநிதி உடல் நலம் பற்றிக் கேட்டனர். 

கருணாநிதியின் இல்லத்துக்கு ஜெயலலிதா இருந்தவரை, எந்தவோர் அமைச்சரோ அல்லது அ.தி.மு.க நிர்வாகிகளோ சென்றதாக வரலாறு கிடையாது. ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள், இப்போது கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று உடல் நலத்தை விசாரித்தது அரசியல் அரங்கிலும் தமிழக மக்கள் மத்தியிலும் மிகப்பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கக்கூட மாட்டார்கள் என்றநிலை இப்போது மாறியிருப்பதை, நல்லதோர் ஆரோக்கிய அரசியல் சூழலாகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள். மேலும், கோபாலபுரம் வீட்டிலிருந்து, கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று, கருணாநிதியின் உடல் நலம் பற்றிக் கேட்டறிந்தார்.

இதன் தொடர்ச்சியாக சேலத்திலிருந்து நேற்றிரவு சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்று காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், கே.சி.கருப்பணன் ஆகியோரும் சென்று மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் பற்றிக் கேட்டறிந்தனர். ஸ்டாலின் மற்றும் தி.மு.க நிர்வாகிகளைச் சந்தித்து, கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிக் கேட்டறிந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நிலவி வந்த வெறுப்பு அரசியல், இப்போது ஆரோக்கிய அரசியலாக மாறி வருவதையே இதுபோன்ற சந்திப்புகள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அண்ணாவின் தம்பிகள் ஒருவரை ஒருவர் சந்திக்க, மூத்த தம்பியான தி.மு.க தலைவர் கருணாநிதி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

டெல்லியில் நாடாளுமன்றத்திலும் வெளியேயும் கொள்கைரீதியாக, காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொள்ளும் காங்கிரஸ், பி.ஜே.பி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொது நிகழ்ச்சிகளில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதும் நட்புபாராட்டுவதும் வழக்கமான நடைமுறை. ஏன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, பி.ஜே.பி மூத்த தலைவர் அத்வானி போன்றோர் தங்களுக்குள் கட்சி ரீதியாகக் கருத்துவேறுபாடுகள் நிலவினாலும் ஆரோக்கிய அரசியலைக் கடைப்பிடித்து வருகிறார்கள். 

தற்போது, அதுபோன்ற ஆரோக்கியமான அரசியல் தமிழகத்திலும் உருவாகிக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான்..!



Trending Articles

Sponsored