``இப்பக்கூட நான் ஏன் சிரிக்கிறேன் தெரியுமா..?'' - காவேரி'-யில் கலகலத்த துரைமுருகன் #KarunanidhiSponsoredகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்காக, கட்சித் தொண்டர்கள் திரண்டுவருவதால், சென்னை ஆழ்வார்பேட்டை மட்டுமல்லாது நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிகரித்துக் காணப்படுகிறது. காவேரி மருத்துவமனை வளாகத்தில் திரளும் தி.மு.க. தொண்டர்களை அப்புறப்படுத்தவும் முடியாமல், அவர்களுக்குச் சமாதானமும் சொல்ல முடியாமல் போலீஸாரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் திணறுகின்றனர். 

'அப்பா நல்லா இருக்கார், அவருக்கு ஒரு குறையும் இல்லை' என்று கனிமொழி எம்.பி-யும், 'நானே கிளம்பி வீட்டுக்குப் போறேன்யா, அதைப் பார்த்துமா தெரியலே... தலைவர் நல்லாயிட்டாருய்யா' என்று மு.க. அழகிரியும் தொண்டர்களுக்கு குளுகோஸ் ஏற்றிச் சென்றனர். 'என் மகனுக்குத் தலைவர்தான், உதயசூரியன் என்று பெயர் வைத்தார். என் தந்தை போன்றவர் கலைஞர். அவர் குணமானால், நான் என் தலைமுடியைக்  காணிக்கையாகக் கொடுக்கிறேன்' என்றபடி திருவாரூரைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் ஒருவர், மருத்துவமனை அருகிலேயே மொட்டை போட்டுக் கொண்டார். 'தலைவர், குணமாகி வந்ததும் முதல்ல உன் மொட்டையிலதான் ஒரு குட்டு வைக்கப் போறாரு, தலைவருக்கு மொட்டை போடுறதும் பிடிக்காது. பிறரை மொட்டை அடிப்பதும் பிடிக்காது' என்று சிலேடையாக ஒருவர் கமென்ட் அடித்தார்.

கண்களில் இருந்து கசியும் கண்ணீருடன், அந்தக் கமென்ட் அடித்தவர், தி.மு.க. வழக்கறிஞரான ஆர்.கே.நகர் மருதுகணேஷ். 'எப்படியாவது மருத்துவமனைக்குள் நுழைந்து விடவேண்டும்' என்ற எண்ணத்தில் மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருந்த தொண்டர்களை அதிகளவில் பார்க்க முடிந்தது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிற நோயாளிகளின் உறவினர்கள், கழுத்தில் அந்தந்த வார்டுக்கான அடையாள அட்டையுடனேயே, மருத்துவமனையை விட்டு வெளியே வருவதும், உள்ளே போவதுமாக இருக்கிறார்கள். போலீஸார் அறிவுறுத்தலின்பேரில், மருத்துவமனையில் குறிப்பிட்ட கேட்டையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வெளியூரில் இருந்து வந்திருந்த சில தி.மு.க. தொண்டர்கள், அவர்களிடம், "நீங்க எந்த வார்டுப் பக்கம் இருக்கீங்க, நாலாவது மாடியிலயா? தலைவர் எப்படி இருக்காரு? பேப்பர்லாம் படிக்கிறாரா?" என்றெல்லாம் வெள்ளந்தியாக விசாரித்துக் கொண்டிருந்தனர்.

Sponsored


Sponsored


சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய், "நீங்க வெளியே போகும்போது எங்களை உங்களோட சொந்தக்காரர்னு சொல்லி மருத்துவமனைக்குள்ளே கூட்டிட்டுப் போயிடறீங்களா?" என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். "ஒரு நோயாளிக்கு ஒரு விசிட்டர் மட்டும்தான் இருக்க முடியும். நாங்கள் திரும்பிச் செல்லும்போது யாரையாவது, உள்ளே அழைத்துப் போவதாக இருந்தால் முன்கூட்டியே மருத்துவமனை நிர்வாகத்தில் சொல்லி, என்ட்ரி போட்டால் மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். அப்படியே நாங்கள் உங்களைக் கூட்டிக் கொண்டு போனாலும், எங்க 'விஸிட்டர் பாஸ்' இருக்கும் அறையைத் தாண்டி, நீங்கள் வேறு இடத்துக்குப் போகமுடியாது. அடுத்தமுறை வரும்போது, கண்டிப்பாக உங்களை உள்ளே அழைத்துப் போகப் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார் ஒரு நோயாளியின் அட்டெண்டர்.

அரசு நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து விட்டு, காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை வந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மருத்துவமனையில் சுமார் 20  நிமிடம்வரை இருந்துவிட்டு, வெளியே வந்ததும், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அவர். "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடமும் விவரம் கேட்டறிந்தேன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் கருணாநிதியை நேரில் பார்த்தோம்" என்று அவர் சொன்னதும், தி.மு.க. தொண்டர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்தனர். திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா போன்ற தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள், கருணாநிதி உடல்நிலை குறித்து உற்சாகமாகப் பேட்டி அளித்தபோதிலும், கடந்த சில நாட்களாகவே தூக்கம் தொலைத்திருந்ததால், அவர்களின் முகம் வாடியிருந்ததைக்கூட தொண்டர்களால் ஏற்க முடியவில்லை. பேட்டியளித்தத்  தலைவர்களின் முகக்குறிப்புகளை வைத்து, கருணாநிதியின் உடல் நலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் மட்டும் மருத்துவமனை வளாகத்தில், சிரித்த முகத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அங்கிருந்த தொண்டர்களிடம்  "நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கும்போதே நீங்களெல்லாம் கிளம்பி வீட்டுக்குப் போயிருக்க வேண்டாமா? என் சிரிப்புக்கும், சந்தோஷத்துக்கும் காரணமே தலைவர்தானப்பா... அவர், நல்லா இருக்காருப்பா... முன்னைவிட வேகமான பழைய தலைவரை அறிவாலயத்துல நீங்களெல்லாம் பார்க்கப் போறீங்க" என்று அவர் சொன்னதும் அங்கே எழுந்த ஆரவாரமும், விசில் சத்தமும் அடங்க வெகுநேரம் பிடித்தது. துரைமுருகனின் பேச்சை ஊடகங்களும் விடாமல் ஒளிபரப்ப, மருத்துவமனை முன் திரண்டிருந்த தி.மு.க.வினருக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.Trending Articles

Sponsored