”எனக்கு தலைவரை பார்க்கனும்” - மருத்துவமனை வாசலில் மனமுடைந்து கண்ணீர் சிந்திய திமுக தொண்டர்!Sponsoredதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கி சிகிச்சை எடுத்துவருகிறார். அவ்வப்பொழுது கருணாநிதியில் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டு வந்தாலும் கோபாலபுரம் இல்லத்தில் வைத்தே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முரசொலி அலுவலகத்திற்கு ஒருமுறை, அறிவாலயத்திற்கு ஒருமுறை, அவ்வப்பொழுது சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் என அவரின் இருப்பை மக்கள் உணர்ந்துகொண்டே இருந்தனர். 

Sponsored


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் திடீர் தொய்வு ஏற்பட்டதும், மூத்த திமுக நிர்வாகிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்தில் கூடியதும் சம்பவத்தைத் தீவிரப்படுத்தியது. திமுக தொண்டர்கள் தொடர்ந்து அவரின் இல்லத்திற்கு முன்பு கூடத் தொடங்கினர். கருணாநிதியின் இரத்த அழுத்தம் மேலும் குறைந்ததையடுத்து 27ம் தேதி இரவன்று காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Sponsored


பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் காவிரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கருணாநிதியின் உடல்நிலையைப் பற்றி விசாரித்துச் சென்றனர். நேற்றிரவு காவிரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை தற்காலிக பின்னடைவைச் சந்தித்து, பின்னர் மெதுவாக சீரடைந்து வருவதாக வெளியிட்ட அறிக்கை தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு ஊரிலிருந்தும் தொண்டர்கள் சென்னையில் வந்திருங்கி காவிரி மருத்துவமனை நோக்கிப் படையெடுத்தனர். 

அப்படி கருணாநிதி உடல்நிலை பற்றி செய்தி கேட்டு சென்னை கிளம்பி வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 76 வயதான முனுசாமியும் ஒருவர். ”டிவில அவருடைய உடல்நிலையில் பின்னடைவு என செய்தியைப் பார்த்ததும் தாங்க முடியாம கிளம்பி வந்துட்டேன். என் தலைவன் மீண்டு வரனும் அவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாது” எனக் கண்ணீர் விட்டவாறே மருத்துவமனை வாசலில் காத்திருந்தார் 76 வயதான முனுசாமி. 

பலரிடமும் விசாரித்து மருத்துவமனையை வந்தடைந்த முனுசாமி சோர்வுற்று கீழே விழுந்திருக்கிறார். அவரிடம் பேசியபோது, ”என்னுடைய இருபது வயசுல இருந்து திமுக தொண்டனா இருக்கேன். என்னுடைய திருமணத்தில் கூட ஆற்காடு வீராசாமி கலந்திருக்கிறார். 1962 தர்மபுரி தேர்தலில் முதல் முறையாக கலைஞரைப் பார்த்தேன். திமுகவும், தலைவரும் தான் எனக்கு எல்லாம். ஆனா அவர இப்ப பார்க்க முடியலையே” எனக் கூறி அழுதிருக்கிறார் முனுசாமி. 1965-ம் ஆண்டு மொழிப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர். 1976ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாக குறிப்பிடுகிறார். 

”கலைஞருக்கு குணமடையும் வரை இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன்” எனத் தீர்மானமாக கூறிவிட்டு நகர்ந்து விட்டார். இவரைப் போன்று பலரும் கருணாநிதியின் உடல்நிலை பற்றிய கவலையோடு காவிரி மருத்துவமனை வாசலில் காத்துக்கிடக்கின்றனர் “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” எனும் கர்ஜனை குரலைக் கேட்பதற்காக.!Trending Articles

Sponsored