`பிளாஸ்டிக்குகளுக்குப் பதில் வாழை இலைகள்!'- கலெக்டர் அதிரடி நடவடிக்கைSponsored"நாளை முதல் கரூர் மாவட்ட அரசு அலுவலங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இன்று, உலகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பிளாஸ்டிக் பொருள்கள். அவற்றால் மனிதகுலத்திற்கு பற்பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றைக் கருத்தில்கொண்டு, பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கும்பொருட்டு, தமிழக முதல்வர் வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். அதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்க, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், முன்கூட்டியே பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

"நாளை முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களான (தடிமன் வேறுபாடின்றி) பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் மேஜை விரிப்புகள், பிளாஸ்டிக் தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகிதக் குவளைகள், பிளாஸ்டிக் டீ குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட எந்த வகையான பிளாஸ்டிக் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது.

அந்தப் பொருள்களுக்கு மாற்றாக வாழை இலைகள், பாக்குமட்டைத் தட்டுகள், தாமரை இலைகள், காகிதத் தாள்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிக் குவளைகள், காகித உறிஞ்சு குழல்கள், துணிப்பைகள், காகித மற்றும் சணல் பைகள், துணி-காகிதக் கொடிகள் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். நாளை முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த பிளாஸ்டிக் பொருள்கள் தடை அமலுக்கு வருகிறது. எனவே, அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், பிளாஸ்டிக் பைகளில் மனு கொண்டு வந்தால், அந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கி அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, பிறகு மனுக்களைப் பெற்றுக்கொள்வதோடு, மக்களிடம் பிளாஸ்டிக் தீமைகள் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். நல்ல மாற்றத்தை மக்களை தொடங்கச் சொல்லி நாம் அழுத்தாமல், அரசு அலுவலர்களாகிய நாமே முதலில் தொடங்கி வைத்து, முன்னுதாரணமாகத் திகழுவோம். அதைப் பார்த்து மக்களும் மாறுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored 

Sponsored
Trending Articles

Sponsored