`பயிற்சி முடித்த அனைவருக்கும் பணி வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்'- புதிய அர்ச்சகர் பேட்டிSponsored"ஆகம விதிகளை பின்பற்றி இங்கு பணியாற்றி வருகிறேன். தற்போது இந்த தகவல் போதும். இதுபோல் பயிற்சி முடித்த அனைவருக்கும் அர்ச்சகர் பணி வழங்கினால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள்" என்று மதுரை ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ள மாரிச்சாமி கூறினார்.

தமிழக ஆன்மிகத் தலைநகரமான மதுரையிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் பிராமணர் அல்லாதவரை அர்ச்சகராக நியமித்து திமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும்  திட்டத்தை எடப்பாடி அரசு ஆர்ப்பாட்டமில்லாமல் நிறைவேற்றியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள பெருங்கோயில்களில் சாதி இழிவை நீக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை கருணாநிதி கடந்த 2006-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது கொண்டு வந்தார். அதற்காக அவர்கள் ஆகமப்படி பயிற்சி பெற தமிழகத்தில் முக்கிய கோயில் நகரங்களில் பயிற்சிப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. சிறந்த ஆன்மிகவாதிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் பயிற்சி முடித்தவர்களை கோயில்களில் பணி அமர்த்த நினைத்த நேரத்தில் நீண்ட காலமாக பெரும் கோயில்களில் அர்ச்சகராக பணியாற்றியவர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். இதனால் பயிற்சி முடித்தவர்கள் நீண்ட காலமாக பணி கிடைக்காமல் காத்திருந்தார்கள். இந்த நிலையில் இவர்களுக்காக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஆகம கோயில்களின் விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று உத்தரவிட்டது.

Sponsored


இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கேரள அரசு, பிராமணர் அல்லாதவர்களை கோயில்களில் அர்ச்சகராக நியமித்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த நிலையில் மதுரையிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் அர்ச்சகராக பிராமணர் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள விஷயம் தற்போது வெளி வந்து அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Sponsored


மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ள மாரிச்சாமியை சந்தித்து பேசினோம். "மதுரைதான் சொந்த ஊர். எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு. சாமிக்கு பூஜை செய்யும் பணி செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்தேன். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலை இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சேர்ந்து பயிற்சி பெற்றேன்.  நான் சைவ ஆகம பயிற்சி முடித்தேன். வேதங்களையும், மந்திரங்களையும் கற்று முடித்தேன். அப்போதிருந்த சூழ்நிலையால், எங்களுக்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பணி வழங்கவில்லை. நீதிமன்றம் சென்றோம். அதை எதிர்த்து சிலர் சென்றனர். இப்படியே போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் ஐந்து மாதங்களுக்கு முன் மதுரை ஐயப்பன் கோயிலுக்கு அர்ச்சகர் தேவை என்று அறிவித்தார்கள். அந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். அதில் நான் தேர்வு செய்யப்பட்டு இக்கோயிலில் பணியாற்றி வருகிறேன். ஆகம விதிகளை பின்பற்றி இங்கு பணியாற்றி வருகிறேன். தற்போது இந்த தகவல் போதும். இதுபோல் பயிற்சி முடித்த அனைவருக்கும் அர்ச்சகர் பணி வழங்கினால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள்" என்றார்.Trending Articles

Sponsored