கருணாநிதி உடல்நிலை குறித்து கவலை! - விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தி.மு.க தொண்டர்Sponsoredதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலைப்பட்டு, எட்டயபுரத்தைச் சேர்ந்த அக்கட்சித் தொண்டர் செல்வக்குமார் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரம் கான்சாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் எட்டயபுரம் 13-வது வார்டு தி.மு.க. உறுப்பினராக உள்ளார்.

Sponsored


இவருக்கு அருணாச்சலவடிவு என்ற மனைவியும், அழகுராஜா என்ற மகனும், அன்னலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர் மட்டுமல்லாமல்,  இவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தி.மு.க-வில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 4 நாள்களாக சிகிச்சைபெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதிலிருந்து செல்வக்குமார் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி, வீட்டில் புலம்பிக்கொண்டே இருந்திருக்கிறார்.

Sponsored


இந்நிலையில், நேற்றிரவு செல்வக்குமார் கோவில்பட்டி சென்றுவிட்டு வருவதாகச் சொல்லி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால், வீட்டிலிருந்து கிளம்பிய சில மணி நேரத்தில் மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார். வீட்டு வாசலுக்கு வந்ததும் செல்வக்குமார் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரின் குடும்பத்தினர், அவரை தூக்கிக்கொண்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், போகும் வழியிலேயே செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ``கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டதிலிருந்து மனமுடைந்து காணப்பட்ட செல்வக்குமார், கோவில்பட்டிக்குச் சென்று விஷம் வாங்கி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உயிரிழந்துவிட்டார்'' எனத் தெரிவித்தனர். எட்டயபுரம் போலீஸார் செல்வக்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த தொண்டனை இழந்து விட்டதாக தி.மு.க.-வினர் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored