நெல்லைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: 509 பேருக்கு பட்டம் வழங்கினார் பன்வாரிலால் புரோஹித்Sponsoredமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு, மாணவ- மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 48,836 பேர் பட்டம் பெற்றார்கள். அதில், சிறப்பிடம் பெற்ற 86 பேர், முனைவர் பட்டம் பெற்ற 423 பேர் என 509 பேருக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார்.  

Sponsored


இந்த நிகழ்ச்சியில், ராணி அண்ணா கல்லூரி மாணவிகளான ராமலட்சுமி (பி.எஸ்ஸி இயற்பியல்), சாந்தி (பி.எஸ்ஸி கணினி அறிவியல்), சாரதா மகளிர் கல்லூரி அர்ச்சனா சுரேஷ்குமார் (பி.ஏ பொருளாதாரம்), ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவி அபியா மெக்காடே (பி.எஸ்ஸி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து), கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவி ஹைரூன் ரைசா (பி.எஸ்ஸி விலங்கியல்) ஆகியோர் இரட்டைப் பதக்கங்களைப் பெற்றனர். 

Sponsored


ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும் ஆய்வுப்புல முதல்வருமான தியாகராஜன், பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர்,  ``இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 70 கோடி பேர் உள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் உயர் கல்வி படித்தும் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் 40 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் பேர் உள்ளனர். படித்துப் பட்டம் பெற்றும் வேலை இல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் கல்வியுடன் தங்களின் திறனை மேம்படுத்தவில்லை. அதனால் படிக்கும்போதே மாணவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

விழாவில் கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.பி.அன்பழகன் வாழ்த்திப் பேசுகையில், ``உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா, பாரதிதாசன், அழகப்பா, அண்ணாமலை, பாரதியார் ஆகியவை சிறந்த பல்கலைக் கழகங்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. உயர்கல்வி பெறுபவர்களின் சதவிகிதம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. 

இந்திய அளவில் 25.2 சதவிகிதம் பேர் உயர் கல்வி பெறுகிறார்கள். அதுவே உலக அளவில் 36 சதவிகிதமாக உள்ளது. ஆனால், தமிழக அளவில் உயர் கல்வி பெறுபவர்களின் வளர்ச்சி என்பது 48.6 சதவிகிதமாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை விடவும் 1.9 சதவிகிதம் அதிகம். மாணவர் ஆசிரியர் விகிதம் என்பது இந்திய அளவில் 29 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் இருந்தபோதிலும் தமிழகத்தில் 18 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது'' எனத் தெரிவித்தார். 

முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் 2.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.Trending Articles

Sponsored