வாட்ஸ்அப்பில் தகவல்... கைமாறும் செல்போன், பணம்! - கரைவேட்டி கட்டி திருடிய கில்லாடிகளின் கதைSponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நலம் விசாரிக்க வந்த தொண்டர்களிடம் செல்போன், பணம் ஆகியவற்றைக் கரை வேட்டி கட்டி திருடிய 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரின் உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்களும் தி.மு.க-வின் மூத்த தலைவர்களும் தெரிவித்துள்ளனர். 

கருணாநிதியின் உடல் நலத்தைத் தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து தி.மு.க-வினர் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் மருத்துவமனை முன்பு காத்திருக்கின்றனர். பலர் வேண்டுதல்களிலும் ஈடுபட்டுள்ளனர். சோகத்துடனும் கவலைதோய்ந்த முகத்துடனும் காத்திருக்கும் தொண்டர்களிடம் சிலர் கைவரிசைக் காட்டிவருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் செல்போன், பணம், நகைகள் திருடப்படுவது தொடர்கதையானது. பணம், செல்போன், நகைகளைப் பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடும் கும்பல் குறித்த தகவல்களைப் போலீஸார் சேகரித்தனர். தொடர்ந்து, திருட்டு கும்பலையும் போலீஸார் கண்காணித்தனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் 13 திருடர்கள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கருணாநிதியின் நலம் விசாரிக்க வந்த தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் செல்போன், பணம், நகைகள் திருடப்பட்டன. தி.மு.க தொண்டர்களைப்போல கரை வேட்டி கட்டிய திருட்டுக் கும்பல் கைவரிசை காட்டியது எங்களுக்கு விசாரணையில் தெரிய வந்தது. அவர்களைப் பொறிவைத்து பிடிக்கத் திட்டமிட்டோம்.  எங்களிடம் சிக்கிய கரை வேட்டி கட்டிய அந்த நபர், நாங்களே சோகத்தில் இருக்கிறோம் என்று ஆவேசமாகக் கூறினார். ஆனாலும் அவரை தனியாகப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் 12 பேரைப் பிடித்துள்ளோம். அவர்களில் சிலரும் தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சோகத்தில் இருக்கிறோம். நாங்களாவது திருடுவதாவது என்று கோபமாகக் கூறினார். அவர்களையும் எங்கள் பாணியில் விசாரித்தபோது திருடியதை ஒப்புக் கொண்டனர்.

Sponsored


எங்களிடம் சிக்கியவர்கள் திருச்சி முசிறியைச் சேர்ந்த ஆறுமுகம், திண்டுக்கல்லைச் சேர்ந்த அண்ணாதுரை, ஜாஹிர், தங்கராசு, சிக்கந்தர் சேட்டு, சிக்கந்தர் பாஷா, அமீர்பாட்சா, வேலூரைச் சேர்ந்த மணிகண்டன், பரமக்குடியைச் சேர்ந்த முரளி, முனியசாமி, பேராவூரணியைச் சேர்ந்த நீலகண்டன், சென்னையைச் சேர்ந்த ராகுல், ஜீவரத்னம் என 13 பேரை கைதுசெய்துள்ளோம்" என்றனர். 
 
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கூட்டமாக இடங்களில் திருடும் இந்தக் கும்பல் தனி நெட்வோர்க் ஒன்றை வைத்துள்ளது. அதாவது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிவிட்டு தப்பிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவலை பல்வேறு மாவட்டங்களிலிருக்கும் இந்தக் கொள்ளையர்கள் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளனர். பிறகு அனைவரும் அங்கிருந்து சென்னைக்கு வந்துள்ளனர். தி.மு.க-வின் கரைவேட்டி கட்டிக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகக் கவனத்தைத் திசைதிருப்பி நகை, செல்போன், பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளனர். பிறகு, கொள்ளையடித்தவற்றை வேறு ஒருவரிடம் கொடுத்து லாட்ஜ்களில் வைக்கச் சொல்வதுண்டு. இதற்காக ஒவ்வொரு குழுக்களாக இந்தத் திருட்டுக் கும்பல் செயல்பட்டுள்ளது. திருட்டுக் கும்பலைக் கண்காணிக்க தனித்தனியாகத் தலைவர்களும் இருந்துள்ளனர். தலைவர்களின் வழிகாட்டுதலின்படிதான் திருட்டு நடந்துள்ளது. ஒருவேளை போலீஸாரிடம் சிக்கினால் நகை, பணம், செல்போன்களைப் பறிமுதல் செய்யக் கூடாது என்பதிலும் திருட்டுக் கும்பல் முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளது. பல இடங்களிலிருந்து வந்த இவர்கள் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் திருடும் பொருள்களைப் பங்கு போட்டு பிரித்து அதை உடனுக்குடன் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால், இந்தக் கும்பலிடமிருந்து ஒருசில பொருள்களை மட்டுமே எங்களால் பறிமுதல் செய்ய முடிந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்துவருகிறோம். திருடிய பொருள்கள் எங்கு கொடுக்கப்பட்டுள்ளன என்ற தகவல் கிடைத்ததும் அவற்றைப் பறிமுதல் செய்துவிடுவோம்" என்றார். Trending Articles

Sponsored