மரக்காமலை மூலிகைத் தண்ணீருக்கு ஆசைப்பட்டு உயிர்விட்ட உரவியாபாரி!Sponsoredதேனி மாவட்டம் மரக்காமலைக்கு மூலிகை தண்ணீர் குடிக்கச் சென்றவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மலையிலேயே உயிரிழந்த சம்பவம் தேனியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1500 அடி உயர மரக்காமலை : 

தேனி நகரத்தைச் சுற்றிலும் உள்ள மலைகளில் உயரமானது மரக்காமலை. பார்ப்பதற்கு மரக்கா (கிராமங்களில் நெல் அளக்கும் அளவைகளில் ஒன்று) போன்று உள்ளதால் இப்பெயர்! இந்த மலை, சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. மலை அடிவாரத்தில் சன்னாசியப்பன் கோயில் உள்ளது. வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆடி மாதத்தில் அனைத்து நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். 

Sponsored


Sponsored


``நினைத்ததை நிறைவேற்றிக் கொடுப்பார் சன்னாசியப்பன்" என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும், ``சன்னாசியப்பன், மலையடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமல்ல, மலை உச்சியில் உள்ள குகையிலும் உள்ளார். மலை உச்சியில் உள்ள குகை கோயிலுக்குச் செல்ல கடுமையான மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். மேலே ஏறினால் இறங்குவதற்கு இரண்டு நாள்கள்கூட ஆகலாம். தண்ணீர், சாப்பாடு எல்லாம் கொண்டு செல்ல வேண்டும். காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலும் இருக்கும். ஆடி அமாவாசையன்று கொஞ்சம்பேர் அங்கு சென்று பொங்கல்வைத்து வழிபாடு நடத்துவார்கள். மற்ற நாள்களில் பெரும்பாலும் யாரும் அங்கே செல்ல மாட்டார்கள். செல்ல ஆசைப்பட்டு மலையேறுபவர்கள் பாதியிலேயே திரும்பி வந்துவிடுவார்கள்" என்கிறார்கள்.

இவ்வளவு கடுமையான பாதையைக் கடந்து குகை கோயிலுக்குச் செல்லக் காரணம் என்ன?

``குகைக் கோயிலில் ஒரு இயற்கை ஊற்று உள்ளது. அதில் வரும் தண்ணீரைக் குடித்தால், எந்த நோயாக இருந்தாலும் குணமாகிவிடும். அந்த மூலிகைத் தண்ணீருக்கு ஆசைப்பட்டுத்தான்  கடும் சிரமங்களைக் கடந்து மலையேறிச் செல்கிறார்கள்" என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

மூலிகை தண்ணீருக்கு ஆசைப்பட்ட உர வியாபாரி : 

மரக்காமலையில் இருக்கும் மூலிகைத் தண்ணீரை குடிப்பதற்காகச் சென்ற உர வியாபாரி ஈஸ்வரன் (வயது 48) மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``கம்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், சொந்தமாக உரக்கடை வைத்திருக்கிறார். இவரின் நண்பர் அப்துல்லா (வயது 38) தன் தந்தையின் தோட்டந்துக்கு ஈஸ்வரனை அழைத்துச் சென்றுள்ளார். ஈஸ்வரனுக்கு இருக்கும் தோல்வியாதி பற்றி தோட்டத்தில் இருந்த சிலர் விசாரித்துவிட்டு, மரக்காமலை உச்சியில் இருக்கும் மூலிகைத் தண்ணீரைப் பற்றி அவரிடம் கூறியுள்ளனர். அதைக்கேட்டு ஆச்சர்யமடைந்த ஈஸ்வரன், 'மூலிகைத் தண்ணீரை குடிக்க வேண்டும்' என தன் நண்பரிடம் கூறி, அவரையும் அழைத்துக்கொண்டு மலை மீது ஏறியுள்ளார்.

மலைக்குச் சென்று மூலிகைத் தண்ணீரை குடித்துவிட்டு திரும்பும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு வழியிலேயே இறந்துள்ளார் ஈஸ்வரன். கடுமையான பாதை என்பதாலும், வனவிலங்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் பதற்றமடைந்த அப்துல்லா, வேகமாக மலையை விட்டு கீழிறங்கிவந்து நடந்த சம்பவத்தை ஈஸ்வரனின் உறவினர்களிடம் கூறியுள்ளார். தீயணைப்புத் துறையினரின் உதவியோடு  மலையில்

தேடி ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம்" என்றனர்.

தவழ்ந்து சென்ற மீட்புக் குழுவினர் :

மலை மீது உயிரிழந்த ஈஸ்வரனின் உடலை மீட்க, தீயணைப்புப்படை வீரர்கள், போலீஸார், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் என மொத்தம் 20 பேர், சென்றனர். காலையில் துவங்கிய மீட்புப்பணி இரவுதான் நிறைவடைந்திருக்கிறது. மீட்புப்பணி குறித்து தேனி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நிலைய அலுவலர் மனோகரிடம் பேசினோம்.

``ஈஸ்வரனின் இறப்பு குறித்து சனிக்கிழமை மாலை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. போடி தீயணைப்பு வீரர்கள் மலை மீது ஏறினர். இரவு நேரமானதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை மீட்புப் பணியில் இறங்கினோம். மிகவும் சரிவான, செங்குத்தான பாதை அது. சில இடங்களில் தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தது. முள் புதர்களால் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 

இறுதியில், சரிவு ஒன்றில் இருந்து, ஈஸ்வரனின் உடலைக் கண்டுபிடித்தோம். ஆனால், அந்தச் சரிவில் கால்வைத்து இறங்கமுடியவில்லை. அபாயகரமான சரிவாக இருந்தது. எங்களுடன் வந்திருந்த ஈஸ்வரனின் உறவினர்கள், 'உங்களால் உடலை மீட்க முடியாது என்று தோன்றுகிறது. அப்படியே மீட்டாலும், கீழே கொண்டுசெல்வது மிகவும் கடினம். நீங்கள் அனுமதித்தால் இங்கேயே ஈஸ்வரனுக்கு இறுதி காரியம் செய்துவிடுகிறோம்' என்றனர். அதைக்கேட்டு எங்களுக்கு வருத்தமாக இருந்தது. 'அப்படி செய்தால் சரியாக இருக்காது' என்று அவர்களிடம் கூறிவிட்டு மீட்குப் பணியில் இறங்கினோம்.

ஆபத்தைக் கடந்து, சுமார் இரண்டரை மணி நேரம் போராடி உடலை மீட்டோம். பின்னர் மூங்கில் கம்புகளில் உடலைக் கட்டி மலையில் இருந்து கீழே கொண்டுவந்தோம். பாதையே இல்லாத ஓர் இடத்தில் ஈஸ்வரன் பயணம் செய்திருப்பது நன்றாக தெரிந்தது. மூலிகை தண்ணீர் குடிப்பதற்காக இப்படி ஒரு ஆபத்தான பயணம் அவசியமற்றது!" என்றார்.

மரக்காமலை மூலிகைத் தண்ணீருக்கு நோய்களைக் குணமாக்கும் சக்தி இருக்கிறதோ, இல்லையோ, இப்படியொரு ஆபத்தான பயணத்தை, தக்க ஏற்பாடுகளும் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதலுமின்றி மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது. இனியும் இது போன்றதொரு சம்பவம் நடைபெறக்கூடாது என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.Trending Articles

Sponsored