`முதல்வர் வரைக்கும் எனக்கு செல்வாக்கு இருக்கு`- அதிகாரியை மிரட்டிய அ.தி.மு.க பகுதிச் செயலாளர்Sponsored``அ.தி.மு.க பகுதிச் செயலாளார் ஒருவர், சட்டத்துக்குப் புறம்பான பணிகளைச் செய்து தர வேண்டுமென்று, ஒருமையில் தகாத வார்த்தைகளைப் பேசியும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வேலையைவிட்டே துரத்திவிடுவேன் எனவும் மிரட்டுகிறார்” என ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளர் ஒருவர், எஸ்.பி-யிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sponsored


ஈரோடு மண்டலம் 4-ல் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்துவருபவர் அசோக்குமார். இவர், கடந்த ஜூலை 30-ம் தேதி பணியில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் நுழைந்த காசிபாளையம் அ.தி.மு.க பகுதிச் செயலாளர் கோவிந்தராஜ், ‘ஏரியாவில் நான் சொல்கிற வேலைகளைச் செய்துத் தர வேண்டும்’ என மிரட்டியிருக்கிறார். ‘சட்டத்துக்கு உட்பட்ட விஷயங்களை மட்டுமே என்னால் செய்யமுடியும்’ என உதவி ஆணையாளர் அசோக்குமார் கூற, கோபமடைந்த அ.தி.மு.க பகுதிச் செயலாளர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளரை ஒருமையில் பேசியும், தாக்குவதற்கும் முற்பட்டுள்ளார். இதனால், கோபமடைந்த ஊழியர்கள், பணி செய்ய விடாமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திவரும் அ.தி.மு.க பகுதிச் செயலாளர் கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலமாக எஸ்.பி அலுவலகத்துக்கு நடந்துசென்று புகார்மனு ஒன்றையும் அளித்தனர்.  

Sponsored


இதுகுறித்து ஈரோடு மண்டலம் 4-ன் உதவி ஆணையாளார் அசோக்குமாரிடம் பேசினோம். “தான் அ.தி.மு.க பகுதிச் செயலாளர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகளை ஒருமையில் தரக் குறைவாகப் பேசுவதும், மாநகராட்சியின் தினசரிப் பணிகள் மற்றும் நடவடிக்கைகளில் தலையிட்டு, நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்திவருகிறார். அலுவலகத்தில் காலியாக உள்ள இருக்கைகளில் அமர்ந்துகொண்டு அராஜகம் செய்துவருகிறார். அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து, அலுவலக பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை எடுத்து எல்லோருக்கும் லீவ் போடுகிறார்.

அந்த வகையில், ஜூலை 30-ம் தேதியன்று என்னுடைய அறைக்கு வந்தவர், சட்டத்துக்குப் புறம்பான முறையற்ற பணிகளைச் செய்து தருமாறு என்னை நிர்பந்தம் செய்தார். ‘நான் சொல்ற வேலையை செஞ்சித் தரலைனா, நீ இங்க இருக்க முடியாது. உன்னை ஒழிச்சுக் கட்டிடுவேன்’ என மிரட்டி என்னை தாக்குவதற்கு முற்பட்டார். நான் சத்தம் போட்டதால், எங்களுடைய அலுவலர்கள் வந்து அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்கள். அதுமட்டுமில்லாமல், ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பெயரைப் பயன்படுத்தி, வேலைசெய்யும் ஊழியர்களை மிரட்டுவதும், ‘மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை மாத்துனதே நாங்கதான். முதலமைச்சர் வரைக்கும் எனக்கு செல்வாக்கு இருக்கு. வேலையை விட்டே தூக்கிடுவேன்’ என்றும் அச்சுறுத்திவருகிறார். இப்படி ஒவ்வொரு நாளும் அவருக்குப் பயந்து பயந்து அரசுப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, அ.தி.மு.க பகுதிச் செயலாளர் கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.Trending Articles

Sponsored