நெல்லையைப் பதறவைத்த `குவார்ட்டர்' கொலை! - சிக்குவாரா `நெல்லிக்கா சண்டியர்'?Sponsoredநெல்லை மாவட்டம்  சுரண்டை அருகே, குவார்ட்டர், வாங்கித் தரவில்லை என்ற காரணத்துக்காகத் தன்னுடைய தம்பியை அடித்துக் கொலை செய்துவிட்டதாக,  அவரின் சகோதரி பரபரப்பான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டம், சுரண்டையை அடுத்த சாம்பார்வடகரை  தட்டான்குளத்தைச்  சேர்ந்தவர், முருகன். கூலித்தொழிலாளியான இவர், கடந்த 30-ம் தேதி மரணமடைந்தார். அவரின் சடலம் எரிக்கப்பட்டது. தற்போது, முருகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் சகோதரி சீதா தெரிவித்துள்ளார். 

Sponsored


சீதா கூறுகையில், ``என்னுடைய தம்பிதான் முருகன். அவனுக்கு அத்தை மகளைத் திருமணம் செய்துவைத்தோம். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கை ஒரு மாதத்தில் முடிந்துவிட்டது. இதனால், தனிமரமாக வாழ்ந்துவந்தான். எங்கள் ஊரில் 'நெல்லிக்கா சண்டியர்' என்பவரிடம் முருகன் வேலைசெய்துவந்தான். இருவரும் சேர்ந்துதான் தினமும் மது குடிப்பார்கள். இதற்காக, மேலப்பாவூருக்குச் சென்று முருகன்தான் பிராந்தி வாங்கிக்கொண்டுவருவான்.

கடந்த 29-ம் தேதி, குவாட்டர் வாங்கிக்கொண்டு முருகன் வந்துள்ளான். இரண்டு பேரும் சேர்ந்து குடித்துள்ளனர். அதன்பிறகு, மீண்டும் குவாட்டர் வாங்கிவரச் சொல்லியிருக்கிறார் நெல்லிக்கா சண்டியர். ஆனால், முருகன் வாங்கிக் கொடுக்கவில்லை. முருகன், தங்கச்சி வீட்டு முன்பு போதையில் விழுந்துகிடந்துள்ளான். அங்கு வந்த நெல்லிக்கா சண்டியர், முருகனின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்துள்ளார்.  அதனால், முருகன் இறந்துவிட்டான். நடந்த கொலை சம்பவத்தை மறைத்து, அவனின் சடலத்தை எரித்துவிட்டார்கள். சாம்பவர்வடகரை போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார் கண்ணீருடன்.

Sponsored


 

இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீஸாரிடம் கேட்டதற்கு, `முருகன் தரப்பில் இதுவரை எங்களுக்கு புகார் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், சம்பவம்குறித்து விசாரித்துவருகிறோம்' என்றனர் சுருக்கமாக. 

சாம்பவர்வடகரையில் உள்ள சிலரிடம் பேசினோம். ``நெல்லிக்கா சண்டியரின் வீட்டில்தான் முருகன் எப்போதும் இருப்பான். குடிப்பழக்கத்துக்கு அடிமையான முருகன், குடித்துவிட்டு ஆங்காங்கே விழுந்துகிடப்பான். அப்படித்தான், குடித்துவிட்டு இறந்துவிட்டான். அவனின் சடலத்தை எரிக்கும்போதுகூட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திடீரென நெல்லிக்கா சண்டியர், முருகனை அடித்துக் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். நெல்லிக்கா சண்டியர், அரசியல் கட்சியில் இருந்தார். இப்போது அதில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது" என்றனர். 

`நெல்லிக்கா சண்டியர்' என்ற பெயர் எப்படி அவருக்கு வந்தது என்று கேட்டதற்கு, ``அது அவருடைய பட்டப்பெயர். ஆனால், அதற்கான காரணம் எல்லாம் தெரியாது. எல்லோரும் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள். ஊரில், அவருடைய நிஜப் பெயரைவிட இந்தப் பெயர் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்" என்றனர். 

நெல்லிக்கா சண்டியரிடம் பேச, அவரின் செல்போனுக்குத் தொடர்புகொண்டோம். ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம். Trending Articles

Sponsored