கூடங்குளம் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!



Sponsored



நெல்லை மாவட்டம், கூடங்குளம் முதல் அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெற இருப்பதால், இன்று காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தித்திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. முதலாவது அணு உலையில், இன்று காலை முதல் மின்சார உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அணு உலையில் உள்ள எரிபொருளை மாற்றும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


இது தொடர்பாக, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநரான டி.எஸ்.சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கூடங்குளம் முதலாவது அணுஉலை தொடர்ந்து 7000 மணி நேரம் இயங்கியுள்ளது. அதனால், அணு உலையை நிறுத்திவைத்து, அதில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக இன்று (ஆகஸ்ட் 1-ம் தேதி), முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Sponsored


இந்த அணு உலையில், நாளை முதல் (ஆகஸ்ட் 2-ம் தேதி) பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புப் பணிகள் தொடங்கும். அடுத்த ஒருவாரத்தில், அணு உலையின் வெப்ப நீரழுத்தச் சோதனை தொடக்கப்படும். அந்தச் சோதனை நடைபெறும்போது வால்வுகள் திறக்கப்படுவதால், அதில் இருந்து மெதுவாகக் கிளம்பும் ஓசை, சில நிமிடங்களுக்கு பலத்த சத்தமாக மாறும். பகல் நேரத்தில் மட்டுமே இந்தச் சோதனை நடத்தப்படும். இந்த ஓசை காரணமாக, அருகில் உள்ள கிராம மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, குறித்த நேரத்தில் அணுஉலையின் செயல்பாடு தொடங்கும்’’ என்று அறிவித்துள்ளார். 

ஏற்கெனவே, பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டாவது அணுஉலை, 152 நாள்களுக்குப் பின்னர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி செயல்படத் தொடங்கிய நிலையில், தற்போது முதலாவது அணுஉலை நிறுத்தப்பட்டுள்ளது. இரு அணுஉலைகளிலும் தரமற்ற உதிரிப் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து இரு அணுஉலைகளில் ஏதாவது ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுவருவதாக அணு உலை எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது, முதல் அணுஉலை நிறுத்தப்பட்டதால், 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



Trending Articles

Sponsored