இடிக்கப்பட்ட பாலம்... 5 கி.மீ தூரம் நடைப்பயணம்... தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!Sponsoredநெல்லை மேலப்பாளையத்திலிருந்து டவுன் பகுதிக்குச் செல்லும் பாலம் இடிந்த நிலையில், புதிய பாலம் கட்டப்படாததால் பள்ளி மாணவ- மாணவிகள் மாற்றுப் பாதையில் 5 கி.மீ தூரத்துக்கு சுற்றிச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்திலிருந்து டவுன் பகுதிக்குச் செல்லும் சாலையின் இடையே, பாளையங்கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயைப் பொதுமக்கள் கடக்கும் வகையில் தரைப்பாலம் இருந்தது. அந்தப் பாலம் பழுதடைந்ததால், அதை இடித்துவிட்டு புதிய தரைப்பாலம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி பாலப்பணிகள் தொடங்கின. அதற்காக, பழைய தரைப்பாலத்தை இடித்துவிட்டு தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டது.

Sponsored


தற்போது, நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் நீர் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. அதில் இருந்து பாசனத்துக்காகக் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாளையங்கால்வாயிலும் விவசாயத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டதால், அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாலத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு இடியும் நிலை ஏற்பட்டது. அதனால் விபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், பொதுப்பணித்துறையினர் அந்த பாலத்தை இடித்துவிட்டனர். அதனால்,மேலப்பாளையம் பகுதியில் இருந்து நெல்லை டவுனில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மாற்றுப் பாதையில் 5 கி.மீ தூரம் சுற்றிச் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வயோதிகர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.  பள்ளிக் குழந்தைகளும் பொதுமக்களும், பாலம் இடிக்கப்பட்ட இடத்தில் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Sponsored


ஒரு சிலர், பாளையங்கால்வாயின் உள்ளே இறங்கி, பொதுப்பணித்துறைக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினார்கள். பள்ளி மாணவர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுப்பணித்துறை உதவிக் கோட்டப் பொறியாளரான கந்தசாமி, சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றுப்பாலம் அமைக்கப்படும் என அறிவித்ததால் பொதுமக்கள்  கலைந்துசென்றனர். Trending Articles

Sponsored