வழக்கறிஞர் அரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கு ரத்து!Sponsoredதூத்துக்குடி போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்டதாக, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் அரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்துசெய்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப்  போராட்டக் குழுவுக்கு சட்ட ஆலோசகராக இருந்த வழக்கறிஞர் அரிராகவன் மீது, தூத்துக்குடி கலவரம் தொடர்பாக காவல்துறையால்  92 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. 'இது அனைத்தும் பொய் வழக்குகள்' என்று மனித உரிமை அமைப்பாளர்கள் கூறிவந்தனர்.  இந்த வழக்குகளில், உயர் நீதிமன்றம் இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், இவரை வெளியில் விடக் கூடாது என்று திட்டமிட்டு, கடந்த வாரம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். 

இதை ரத்துசெய்யக்கோரி, அவரது மனைவி சத்தியபாமா உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த  நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர்அகமது அமர்வு, அரிராகவன் தரப்பு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரின்  வாதங்களைக் கேட்டு, போலீஸாரின் நடவடிக்கைமீது கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார்கள். "நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், மனுதாரரின் கணவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்தது எப்படி? நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், வேண்டுமென்றே அவர்மீது தேசிய பாதுகாப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது, ஜனநாயக நாடா, இல்லை போலீஸ் நாடா? இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

Sponsored


இதைத் தொடர்ந்து, இன்று கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். அதைக் குறித்துக்கொண்ட நீதிபதிகள், அரிராகவன்மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை போடும் பொய் வழக்குகள் ஒவ்வொன்றையும் உயர் நீதிமன்றம் ரத்துசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored