கருணாநிதி உடல்நலக் குறைவு: தீக்குளித்த தி.மு.க தொண்டர் மரணம்!



Sponsored



தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு குறித்த செய்திகளால் மனம் வருந்திய தி.மு.க தொண்டர் ஒருவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

நெல்லை என்.ஜி.ஓ காலனி அருகில் உள்ள திருநகர் பகுதியைச் சேர்ந்தவர், சங்கர். 50 வயது நிரம்பிய அவர் சமையல் வேலைகளுக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் தீவிரமான தி.மு.க தொண்டர். அதனால் கருணாநிதி மீதும் கட்சியின் மீதும்  தீவிர பற்று கொண்டிருந்தார். நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கருணாநிதி எங்கு பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் சங்கர் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த சில தினங்களாக கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்ததும், சங்கர் மிகுந்த வேதனை அடைந்தார். தனது தலைவருக்கு உடல் நலம் நலிவுற்று சிகிச்சை எடுக்கும் நிலை ஆகிவிட்டதே என குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் புலம்பி வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாகவே அவர் வேலைக்குச் செல்லாமல், தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்து கருணாநிதி குறித்த செய்திகளையே பார்த்து வந்துள்ளார்.

Sponsored


மருத்துவ சிகிச்சையில் இருக்கும் கருணாநிதியின் உடல்நிலை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பின்னடைவு ஏற்பட்டபோது மிகவும் சோகம் அடைந்தார். அதனால் கடந்த ஜூலை 30-ம் தேதி அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டதுடன், ‘கலைஞர் வாழ்க’ என கோஷமிட்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரின் மனைவி பேச்சியம்மாளும் அவரின் உறவினர்களும் சேர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Sponsored


நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அதனால் குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர். தி.மு.க தொண்டர் சங்கர், கருணாநிதி மீது கொண்ட பற்றால் தீக்குளித்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லையில் உள்ள தி.மு.க-வினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 



Trending Articles

Sponsored