`நடப்புக் கூட்டத்தொடருக்கு மட்டும் அனுமதி!’ - புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பதில்பா.ஜ,க நியமன எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரு ஆண்டாக நிலவி வந்த இழுபறி நிலை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

Sponsored


கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஓர் ஆண்டு கடந்த நிலையில் நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்காமல் இருந்தது. மத்திய பா.ஜ.க அரசின் உத்தரவுப்படி, துணைநிலை ஆளுநர்  கிரண்பேடி மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்தார். அந்தப் பட்டியலில் பா.ஜ.க-வின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், பா.ஜ.க-வைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகியோரது பெயர் இடம் பெற்றிருந்தது. அதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி அவர்கள் மூன்று பேரையும் எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவை பிறப்பித்தது மத்திய உள்துறை. ஆனால், முறைப்படியான அனுமதி வராததால் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று மறுத்தார் சபாநாயகர் வைத்திலிங்கம். தொடர்ந்து 2017 ஜூலை 4-ம் தேதி இரவு மூன்று எம்.எல்.ஏ-க்களையும் ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்த ஆளுநர் கிரண்பேடி, அவர்களுக்கு ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அங்கு, மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது. அதையடுத்து உச்சநீதிமன்றத்தில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் மேல்முறையீடு செய்தார். அவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் இரண்டு முறை பேரவைக்கூட்டத்துக்கு வந்த நியமன எம்.எல்.ஏ-க்களை பேரவைக்குள் அனுமதிக்கவில்லை.

Sponsored


Sponsored


``புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து  தெரிவித்திருந்தது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் அந்தக் கருத்தை செயல்படுத்தும்படி அறிவுறுத்தி வந்தார். இப்படியான நெருக்கடிகள் அதிகரித்த சூழலில், பேரவைக்குள் நியமன எம்.எல்.ஏ-க்கள் இன்று அனுமதிக்கப்பட்டனர். நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்ட பா.ஜ.க மாநிலத்தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் காலையில் பேரவைக்கு வந்தனர். சாமிநாதன் தாமரைப் பூவை கையில் வைத்திருந்தார். மூவரும் பேரவையின் படிக்கட்டை வணங்கி உள்ளே வந்தனர். பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி ஆகியோரைச் சந்தித்து சால்வை அணிவித்து விட்டு பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர். இவர்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.கவுக்கு அடுத்து இடம் ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து பேரவையில் நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றிய பிறகு எழுந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன், ``புதுச்சேரி அரசின் பரிந்துரை இல்லாமல் சட்டப்பேரவைக்கு மத்திய அரசு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துள்ளனர். அவர்களை பேரவைக்குள் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அது முடியும் வரை அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக உரிமை மீறல் கடிதம் தந்துள்ளேன்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய அரசு கொறடா அனந்தராமன், ``குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 55-ன் கீழ் நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் வாக்குரிமை இல்லை. அதனால் மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்தச் சட்டப்பேரவையில் எந்த ஒரு வாக்கெடுப்பிலும் வாக்களிக்கும் உரிமை இல்லை.

இத்தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினார். அதற்கு ``உச்சநீதிமன்ற எதிர்பார்ப்புக்கு இணங்க மூன்று பேரையும் பேரவையின் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்துள்ளேன். அதுவரை மட்டுமே அனுமதி பொருந்தும். உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் 11.9.2018-க்குப் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார் சபாநாயகர் வைத்திலிங்கம். தீர்மானத்தை பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று தெரிவித்ததால் நிறைவேறியதாக தெரிவித்தார் சபாநாயகர். இதனிடையே தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை என்று அ.தி.மு.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் புகார் கூறினார்கள். மேலும், சபாநாயகரின் நடவடிக்கையைக் கண்டித்து என்.ஆர்.காங்கிரஸார் வெளிநடப்பு செய்வதாக கூறிய நிலையில் சபை நடவடிக்கைகளை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர்.Trending Articles

Sponsored