`கடவுளிடம் ஜெபம் செய்தேன்..!’ - கருணாநிதிக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்



தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 8 வயது சிறுமி எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 

Sponsored


காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய, அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். ஆனால், தி.மு.க தொண்டர்கள் பலர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே மருத்துவமனை வாசலில் காத்துக்கிடக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தொண்டர்கள்,  `தலைவர் மீண்டு வருவார். அவர் குணமாகி வீடு திரும்பும்வரை இங்கிருந்து செல்லமாட்டோம்’ என்று பிடிவாதம் பிடித்து வருகின்றனர். நெல்லை, திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த முதியவர்கள்  `கருணாநிதியை ஓரமாக நின்று பார்த்துவிட்டு செல்கிறோம்’  என்று தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டுவிட்டு, ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். இப்படியான பல நெகிழ்ச்சியான காட்சிகள்  காவேரி மருத்துவமனை வாசலில் நிரம்பியிருக்கிறது.

Sponsored



 

Sponsored


இந்நிலையில் பட்டாபிராமைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி மிச்செல் மிராக்ளின், கருணாநிதிக்காக கடிதம் எழுதி தன் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மிச்செல், கருணாநிதிக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தில், `அன்புள்ள டாக்டர் கருணாநிதி தாத்தாவுக்கு, எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்.  உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கேள்விப்பட்டபோது எனக்கு அழுகையாக வந்தது. அன்று இரவு தூங்குவதற்கு முன்னர் உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்.  நான் பிரார்த்தனை செய்ததால் உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிட்டதாக மறுநாள் காலை என் அம்மா சொன்னார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியாகப் பள்ளி சென்றேன்’ என்று எழுதியிருந்தார்.  இந்த கடிதம் தி.மு.க ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 


 

சிறுமி மிச்செல் மிராக்கிளின் தாத்தா சாலமோனிடம் பேசினோம். 

 `நான், தி.மு.க.வில் நீண்ட காலமாக உறுப்பினராக உள்ளேன். என்னுடைய மகள் ரோஸ்லின். அவர், ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அவரின் கணவர் சாம்சன். பேராசிரியராக உள்ளார். இவர்களின் மகள்தான் மிச்செல் மிராக்கிளின். அவர், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 29-ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பாதிப்பு குறித்த செய்தியை டிவி-யில் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரின் கண்கள் கலங்கின. அவருக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். நீண்ட நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். இன்று காலை எழுந்தவுடன் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை என்னிடம் காண்பித்தார். அந்தக் கடிதத்தை எனக்குத் தெரிந்தவரான விஜயகுமார் மூலம் அறிவாலயத்துக்குக் கொடுத்தனுப்பினேன். தற்போது, அந்தக் கடிதம்தான் தி.மு.க. இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிச்செல் மிராக்கிளின் பள்ளிக்குச் சென்றுள்ளார். அவர் இந்தத் தகவலை கேள்விப்பட்டால் மகிழ்ச்சியடைவார்’ என்றார்.

சிறுமி  மிச்செல்லிடம் பேசினோம்.. 

`ஞாயிற்று கிழமை டிவி பார்த்துட்டு இருந்தேன்.  கருணாநிதி தாத்தாவுக்கு உடம்பு முடியலன்னு சொன்னாங்க. அழுகை வந்துடுச்சு. என் அம்மா, அப்பா, தாத்தாவுக்கு கருணாநிதி தாத்தாவ ரொம்பப் பிடிக்கும். அவங்க அவர பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. அதனால எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அவருக்காக ஜெபம் பண்ணேன். மறுநாள் காலைல அவருக்கு சரி ஆகிடுச்சுன்னு அம்மா சொன்னாங்க. ஹேப்பி ஆகிட்டேன். அவருக்காக லெட்டர் எழுதினேன்’ என்றவரிடம், இந்தக் கடிதம் நீங்களாகதான் எழுதினீர்களா? என்று கேட்டதற்கு.. `ஆமா.. நானாதான் எழுதினேன். என் லவ் கருணாநிதி தாத்தாவுக்கு தெரியணும்னு எழுதினேன்’ என்றார் மழலைக் குரலில். உண்மையில், கருணாநிதியின் புகழ் தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கும்!  



Trending Articles

Sponsored