வீணாகும் 19,000 கன அடி நீர்; சீரழியும் குறுவை சாகுபடி! - முதல்வர் பழனிசாமியைச் சாடும் ராமதாஸ்



மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிச்சயமாகக் கடைமடைக்க்ச் சென்றடையாது என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மக்கள் நலனில் அக்கறையற்ற பினாமி அரசு தடுப்பணைகளைக் கட்டப்படாததன் விளைவுதான் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

Sponsored


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப்போல மேட்டூர் அணை நிரம்பி வழிந்தும்கூட காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை நெல் பயிர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் பெரும் பகுதி விவசாயத்துக்குப் பயன்படாமல் வங்கக் கடலில் கலந்து வீணாகியிருக்கிறது.

Sponsored


மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் அடுத்த 3 நாள்களில் கல்லணைக்கும் அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து கடைமடை பகுதிகளையும் சென்றடைவது வழக்கமாகும். அதாவது, மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அடுத்த 10 நாள்களுக்கு அனைத்து காவிரி பாசனப் பகுதிகளுக்கும் சென்றடைந்தாக வேண்டும். வழக்கத்தைவிட அதிகமாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டால் இன்னும் கூடுதலாகக் கடைமடைப் பாசனப் பகுதிகக்ச் சென்றடைந்துவிடும். ஆனால், இம்முறை மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்றுடன் 13 நாள்களாகியும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கடைமடை பாசனப் பகுதிகளைச் சென்றடையவில்லை. காவிரி ஆறு பூம்புகார் கடலில் கலப்பதற்கு முந்தைய இடமான நாகை மாவட்டம் மேலையூர் கடைமடைத் தேக்கத்துக்கு கடந்த  ஜூலை 29-ம் தேதியே தண்ணீர் வந்துவிட்ட போதிலும், அதற்கு முன்பாக உள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் இன்னும் சென்றடையவில்லை. அதேநேரத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் வழியாகக் கிட்டத்தட்ட 16 டி.எம்.சி வீணாகக் கடலில் கலந்துள்ளது. இதைவிட மிகக்கேவலமான நீர் மேலாண்மை வேறு எங்கும் கடைப்பிடிக்கப்படாது.

Sponsored


வழக்கமாகக் காவிரி பாசன மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும் 16 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் செய்யப்படுவது வழக்கம். நடப்பாண்டில் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்பதால், நிலத்தடி நீரை நம்பி நடப்பாண்டில் தஞ்சை, நாகை மாவட்டங்களில் தலா 35,000 ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 24,500 ஹெக்டேர் என மொத்தம் 94,500 ஹெக்டேரில், அதாவது 2,36,250 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. இடைப்பட்ட காலத்தில் மேட்டூர் அணைக்கு கூடுதலாகத் தண்ணீர் வரத் தொடங்கியதால் அதை நம்பி பெருமளவில் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் குறுவை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். ஜூலை மாத இறுதி வரை காவிரி பாசன மாவட்டங்களில் 1.05 லட்சம் ஹெக்டேரில், அதாவது 2.63 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடைமடை பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் வறட்சியான சூழல் நிலவுகிறது. புதிதாக நேரடி விதைப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்யலாம்; பயிரைக் காப்பாற்றி விடலாம் என்றாலும்கூட நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன், சாகுபடி செலவுகளும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து எந்த நோக்கத்துக்காகத்  தண்ணீர் திறந்து விடப்பட்டதோ அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு காரணமே காவிரியின் கிளை ஆறுகளிலும் பாசனக் கால்வாய்களிலும் தூர் வாரப்படாததுதான். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி அ.தி.மு.க-வினரால் சுருட்டப்பட்டுவிட்டது. பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சொந்த செலவில் தூர்வாரியப் பகுதிகளில் மட்டும்தான் நீர் சென்றுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாகக் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நடப்பாண்டிலாவது  மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டால் கடைமடை பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடைய வசதியாகக் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளிலும் பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் எனப் பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம் 19-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு விழாவில் தடுப்பணைகள் கட்டுவது குறித்த முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தடுப்பணைகளைக் கட்டவும், கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற பினாமி அரசு அதைச் செய்யாததன் விளைவுதான் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த வாரம் விநாடிக்கு 76,611 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போதே காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையில், நேற்று முதல் வெறும் 19,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில் நிச்சயமாகக் கடைமடைக்குத் தண்ணீர் சென்றடையாது. இதனால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தடுக்க காவிரி கிளை ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களைத் தூர்வாரி சீரமைப்பதுடன், அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாகக் காவிரி படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகளை கட்ட அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 



Trending Articles

Sponsored