"போஸ்டர் கிழிப்பதுதான் காவல்துறையின் வேலையா?" - 'கடல்குதிரைகள்' இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்Sponsoredக்கள் நலனுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டுபவை இயக்குநர் புகழேந்தி தங்கராஜின் திரைப்படங்கள். கடற்கரையோர மக்களின் சோகத்தையும், கடல் கடந்த தமிழினத்தின் வேதனையையும் பேசுபவை இவரது படங்கள். ஈழமக்களின் வலியை, 'காற்றுக்கென்ன வேலி'யாக இவர் சொன்னபோது ஏகத்துக்கும் சோதனைகளைச் சந்தித்தார். சென்சார் போர்டு சம்மதித்தும், நீதிமன்றம் சென்றுதான், அந்த 'வேலி'யை உடைத்தார். தற்போது, அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடல்குதிரைகள்' திரைப்படம், இடிந்தகரை மக்களின் வலியைச் சொல்கிற படம். 'காற்றுக்கென்ன வேலி' படத்துக்கு கொஞ்சமும் குறையாத வலியையும், அச்சுறுத்தலையும் இந்தப் படமும் இவருக்குக் கொடுத்திருக்கிறது. படத்தின் பிரத்யேகக் காட்சிகளை வெளியிடத் தடை, படம் ரிலீஸ் செய்வதில் அச்சுறுத்தல் என்று அடுத்தடுத்த சோதனைகளைச் சந்தித்துள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.

அவர் நம்மிடம் பேசியபோது, "'கடல்குதிரைகள்' திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. பிரச்னைகளைச் சொல்லக் கூடிய இதுபோன்ற படங்கள் சிறப்பாக உருவாகியிருக்கிறது என்பதே, அதிகார வர்க்கத்துக்குப் பிடிக்காத வார்த்தைதானே? காவல்துறையினர் மறைமுகமாகச் செயல்பட்டதை, படத்தின் பிரத்யேகக் காட்சி ஏற்பாட்டின் போது அறிய முடிந்தது. 'கடல் குதிரைகள்' படத்துக்காக உழைத்த இடிந்தகரை மீனவ மக்கள் 500 பேருக்கு மட்டும் பிரத்யேகக் காட்சி ஏற்பாடு செய்திருந்தோம். திருநெல்வேலியில் உள்ள ஒரு தியேட்டரில் பணத்தைக் கட்டி, அனுமதியும் பெற்றோம். ஜனவரி 21-ம் தேதி காட்சி தொடர்பான பிரஸ்மீட்டை நானும், சுப.உதயகுமாரும், இரண்டு நாட்கள் முன்னதாக 18-ம் தேதி நடத்தினோம். நாங்கள் பிரஸ்மீட் கொடுத்த மறுநாள் 19-ம் தேதி, தியேட்டரில் இருந்து எங்களுக்கு போன் வந்தது. 'போலீஸ் தரப்பில் உங்கள் படத்தின் ப்ரிவ்யூ காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்' என்றனர். பார் கவுன்சில் செயலாளர் செந்தில் உள்பட பலர், தியேட்டர் நிர்வாகியைச் சந்தித்துப் பேசினோம். 

Sponsored


'போலீஸ் எங்களை மிரட்டுகிறார்கள். நாங்கள் தொடர்ந்து தியேட்டரை நடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்' என்றனர். 'நீங்கள் சம்மதித்து, அதன் பின்னர் 'கியூப்'-ல் பணம் கட்டி, அவர்களும் தியேட்டரில் படத்தை டவுன்லோடு செய்துவிட்டுப் போன பிறகு ப்ரிவ்யூ காட்சிக்குத் தயங்குறீர்களே! படச்சுருளை என்ன பெட்டியில் வைத்தா கொண்டு வரப் போகிறீர்கள்?' என்று வாதிட்டோம். 'போலீஸ் எஸ்.பி.,யின் உத்தரவை நாங்கள் மீறமுடியாது. இங்குதான் தொழில் செய்ய வேண்டும்' என்றனர். 'உங்கள் மீது 500 கோடி ரூபாய்க்கு, டேமேஜ் சூட்டை நீதிமன்றத்தில் போடுகிறோம், அங்கு வந்து உங்கள் பதிலைச் சொல்லுங்கள்' என்ற பிறகுதான் போலீஸ் எஸ்.பி.யைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும்படி சொன்னார்கள். போலீஸ் எஸ்.பி, "நாங்கள் அப்படி எந்த உத்தரவும், யாருக்கும் போடவில்லை. அவர்களை எங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்" என்கிறார். எஸ்.பி.யின் கண்முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர்களால், அவரை எதிர்த்துப் பேசமுடியுமா? போலீஸ் செய்த வேலைகளை எங்களால் உணரமுடிந்தது. ஒருவழியாக அன்றைய ப்ரிவ்யூ காட்சிகளை, மக்களுக்குப் போட்டுக் காட்டி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம். வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

Sponsored


சென்னை 'பிரசாத் லேப்'பில் கடந்த 28-ம் தேதி, அதற்கான ப்ரிவ்யூ ஷோ நடத்த திட்டமிட்டபோது, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. 'அய்யாவை வந்து பார்த்துட்டு அப்புறம் படத்தோட ப்ரிவ்யூ ஷோவைப் போட்டுக்கங்க' என்றனர். அவர்கள் சொன்ன 'அய்யா'வான போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன். 'எங்களிடம் இதற்குப் பர்மிஷன் வாங்கணுமே' என்றார். 'நாங்கள், தணிக்கைக் குழுவின் அனுமதியைத்தான் பெற வேண்டும். அதைப் பெற்று விட்டோம். காவல்துறையிலும் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படவில்லை.' என்றோம். 'நான் ஒரு அதிகாரி, என்னிடமே இப்படிப் பேசுகிறீர்களே. ப்ரிவ்யூ ஷோவுக்கு, அனுமதிக் கடிதம் கொடுத்து விட்டு, நாங்கள் சம்மதித்த பிறகு, ஷோவைப் போட்டுக் காட்டுங்கள்' என்றார் இன்ஸ்பெக்டர். 'நாளொன்றுக்கு 20 படங்களுக்கு மேல் ப்ரிவ்யூ ஷோவில் காட்டப்படுகிறது. எல்லாப் படங்களுக்கும் இப்படி அனுமதி கடிதம் தரப்பட்டுள்ளதா' என்ற கேள்விக்கு இன்ஸ்பெக்டரிடம் பதில் இல்லை. 

இதுதொடர்பாக நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தோம். பெரும் போராட்டத்துக்குப் பிறகே இங்கும் வெற்றி பெற முடிந்தது. ஏராளமான போலீஸார், ரகசியமாகவும், ஒரு சிலர் எங்களிடம் கேட்டுக் கொண்டும் படம் பார்த்தனர். அவர்கள் அதை சினிமாவாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உணர்வுப் பூர்வமாகப் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. படத்தில், விவகாரம் ஏதாவது சிக்குமா என்றுதான் பார்த்திருப்பார்கள். ஒன்றும் தேறாத நிலையில், இப்போது கடைசி முயற்சியாக, படத்தின் போஸ்டர்களைக் கிழிக்கத் தொடங்கி விட்டனர். எதிர்ப்பாளர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும், படம் பதிலைச் சொல்லும். இடிந்தகரையின் 35வது கிலோ மீட்டரில் பிறந்தவன் நான். அந்த மக்கள் அழிவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பேனா? 'கடல்குதிரைகள்' திரைப்படத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன், கதிர்மொழி உள்ளிட்டோர் இடிந்தகரை மக்களின் எண்ணவோட்டத்தைப் பாடலாக எழுதியிருக்கின்றனர்" என்றார், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.

ஆகஸ்ட் 3-ம் தேதியை, படக்குழுவைப் போலவே போலீஸாரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது.Trending Articles

Sponsored