`வாழ்வாதாரங்கள் முழுமையாகப் பாதிப்பு' - ஸ்டெர்லைட் ஆலைக்காக கிராம மக்கள் கோரிக்கை!Sponsoredவாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மேலும் ஒரு கிராமத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே-22-ம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 2 பெண்கள் உட்பட 13  பேர்  உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். ஆலை தொடர்ந்து  இயங்குவதை மக்கள் விரும்பவில்லை எனக் கூறி, ஆலையை நிரந்தரமாக மூட கடந்த மே-28-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது.

Sponsored


இந்நிலையில், சில நாள்களுக்குப் பின், “மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்தவர்கள்தான் எங்களை மூளைச் சலவைசெய்து போராட்டத்தைத் தூண்டினார்கள். நாங்கள் நேரடியாகப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மீனவ மக்கள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் மனு கொடுத்தனர். அதற்கு அடுத்த நாளே, இதே காரணத்தைச் சொல்லி, மடத்தூரைச் சேர்ந்த கிராம மக்களும் திரண்டுவந்து சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் மனு அளித்தனர்.

Sponsored


அதேபோல, இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தங்களின் வாழ்வாதரமும் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்படுகின்றன. ஆலை தரப்பில் இருந்து எங்களுக்குக் கிடைத்துவந்த உதவிகளும் கிடைக்கவில்லை எனக் கூறி, ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு வீரபாண்டியாபுரம், குமரெட்டியாபுரம் ஆகிய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்களைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் எனப் பல தரப்பினரும் ஆலையைத் திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், மூன்று சென்ட் அந்தோணியார்புரம் பகுதி மக்கள், ஆட்சியர் அலுவகத்துக்குத் திரண்டுவந்து, ஸ்டெர்லைட் ஆலையைத்  திறக்க  வேண்டும் என மனு கொடுத்தனர். இதுகுறித்து நிஷா என்ற பெண் பேசுகையில், “பல ஆண்டுகளாக, நாங்கள் மூன்று சென்ட் அந்தோணியார்புரத்தில் வசித்துவருகிறோம். எங்கள் பகுதிகளில் உள்ள பலர், ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்துவந்தோம். 

தற்போது ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், கார்ப்பரேட்டுகளின் சி.பி.ஆர் திட்டத்தின்மூலம் எங்களின் மருத்துவம், வாழ்வாதாரம், கல்வி உதவித்தொகை, கிராம நலவாழ்வு என அனைத்து நலத்திட்டங்களும் தடைபட்டுள்ளன. எனவே, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஆலையைத் திறக்க அரசு ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.” என்றார். ஆலையை மூடிட வேண்டும், ஆலையால் எங்களுக்கு முற்றிலும் பாதிப்பு என ஆலைக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள்ஓங்கி ஒலித்த கிராமங்களில், தற்போது ஆதரவுக்குரல்கள் பெருகி வருகின்றன.Trending Articles

Sponsored