கடத்தல் சிலைகளுக்கு.. போலி ஆவணங்கள்...! - பகீர் கிளப்பும் நெட்வொர்க்Sponsoredசிலைக்கடத்தல் விவகாரமும், கடத்தலைத் தடுப்பதற்கான தீர்வை நோக்கியப் பயணமும் தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.  வழிபாட்டுச் சிலைகளின் அதிகாரபூர்வ பாதுகாவலர்களான, அரசு அதிகாரிகளுக்கும், சிலைக்கடத்தல் கும்பல்களுக்கும் உள்ள தொடர்புகள், ஏப்ரல் மாதத்து ஆகாயம் போல் வெளுக்க ஆரம்பித்துள்ளது. மனிதன் பேச ஆரம்பிக்கும் முன்னரே, உணர்வுகளால் பேசத் தொடங்கியது, ஓவியங்களின் வழியாகத்தான். அஜந்தா, எல்லோரா போன்ற குகைச் சிற்பங்கள் விட்டுச் சென்ற வரலாற்றுப் பதிவுகள் எண்ணற்றவை. குகைச் சிற்பங்களின் அடுத்த நகர்வாக இருப்பது சிலைகளே. ஓவியத்திலும், சிலை வடிவத்திலும் இந்திய பாரம்பர்யம் அசத்தலானவை. அவை சொல்லும் வரலாற்றுச் சேதிகளும் அசத்தலானவை. விலை மதிப்பில்லா இந்தக் கலை வடிவங்கள் கடத்தலுக்கு உள்ளாவதும், உலகளாவியச் சந்தை இதற்கென இயங்குவதும் இதன் அடிப்படையில்தான்.

ஐ.நா.சட்டமும், இந்தியச் சட்டமும்

சிலைக்கடத்தல் தடுப்புச் சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) 1972- ம் ஆண்டில் கொண்டு வந்திருந்தாலும், சிலைக்கடத்தல் தடுப்புச் சட்டத்தை அதற்கு முந்தைய நூற்றாண்டிலேயே (1878) கொண்டு வந்த நாடு இந்தியா. சட்டம் இயற்றியதில் இந்தியா முன்னோடியாக இருந்தாலும் சிலைக்கடத்தல் விவகாரமும், சிலைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் இந்தியாவில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அரசு எந்திரச் சக்கரத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் நீயா-நானா போட்டிகள், ஒத்துழையாமை, புரையோடிப் போன லஞ்சம் போன்றவை கண்ணுக்குத் தெரிந்த சில காரணங்கள். `நடப்பவை யாவும் இறைவா உன் பொருட்டு' என்று மொத்த பாரத்தையும் கடவுளர்களின் மேல், பொதுவில் போட்டு விடுவது கண்ணுக்குத் தெரியாத காரணம்.

Sponsored


சிலைகளின் கதை

Sponsored


தோராயக் கணக்கின்படி ஒரு தகவலைச் சொல்கிறார்கள்... அதாவது, 'தமிழகத்தில் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டக் கோயில்களில், நான்கு லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் இருக்கின்றன'.  இந்தக் கணக்குப்படி பார்த்தால், இந்தியாவில் அதிகமான கோயில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்ற இன்னொரு துணைத் தகவலும் கிடைக்கிறது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்ற முதியவர், `ஆர்ட் கேலரி' நடத்துவதாகச் சொல்லிக்கொண்டு சிலைக்கடத்தலில் ஈடுபட்டார். போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வசம் இவர் சிக்கிய பின்னரே பல சிலைகளை மீட்க முடிந்திருக்கிறது. `சிலையே கலை, கலையே சிலை, இரண்டுக்கும் உலக நாடுகளில் இருக்கிறது உன்னத விலை' என்று வாழ்ந்து வந்த தீனதயாளனின் வரலாறு, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் 1970-களில் தொடங்கியிருக்கிறது. ஆந்திராவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ஓர் இளைஞன்தான், அடுத்த முப்பதாண்டுகளில் தமிழகத்தின் பஞ்சலோகச் சிலைகளை புது ட்ரிக்கில் பதுக்கி விற்கும் `எக்ஸ்பர்ட்' ஆவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

போலீஸ் வெப்சைட்

தற்போது, திருட்டுச் சிலைகளை வாங்குவதற்கு வெளிநாட்டினர் தயக்கம் காட்டுகின்றனர். திருட்டுச் சிலைகள் குறித்த விவரங்களை `போலீஸ் இணைய'த்தில் வெளியிட்டு, தமிழக போலீஸார் முட்டுக் கட்டை போட்டிருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. தமிழகத்துச் சிலைகள், உலகச் சந்தையில் வருவதும் இதன் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீஸ் இணைய தளத்தில், சிலைகள் குறித்த விவரத்தைச் சரிபார்த்த பின்னரே, நுகர்வோர்களான சிலை விரும்பிகள் சிலைகளுக்கு விலை பேசும் நிலை உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலால், வெளிநாட்டு விற்பனையைத் தீர்மானிக்கும், வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். இந்தியாவில் 1950-களில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டுக் காலத்திலும் கடத்தப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் என்கிறது யுனெஸ்கோ ஆய்வறிக்கை. இதன் மதிப்பு என்று மட்டும் கணக்கில் கொண்டால், 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

சிலைகள் மீட்பும் போலி ஆவணமும்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, நடக்கும் சிலைக்கடத்தல் குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``தீனதயாளன் வீட்டில் நடந்த ரெய்டிலேயே பழங்காலக் கற்சிலைகள் 71, உலோகச் சிலைகள் 50, தேர் மரச் சிற்பங்கள் 51, பழைமையான ஓவியங்கள் 42 எனச் சிக்கின. ``சிலைக்கடத்தல் தடுப்புப் பணியை முதலில் கோயில்களிலிருந்துதான் மேற்கொள்ள வேண்டும். அங்கேதான் பாதுகாப்பு வசதியைப் பலப்படுத்த வேண்டும். அனைத்துக் கோயில்களிலும் தரமான கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டியது மிகவும் அவசியம். வங்கிகளுக்கு உள்ளது போல், கோயில்களுக்கும் பாதுகாப்பு அலாரம் அமைக்கலாம். அலாரத்தின் சிக்னலைக் கோயில் எல்லைக்கு உட்பட்ட உள்ளூர் காவல்நிலையம், இந்து அறநிலையத்துறை, நம்பிக்கையான உள்ளூர் முக்கிய பிரமுகர்களுக்குக் கிடைக்கும்படிச் செய்யலாம். தீனதயாளன் நெட்வொர்க் மிகவும் பெரிது. கோயில் சொத்துகளைக் களவாட நினைக்கும் அனைத்துத் தீய சக்திகளையும் விரட்டிக் கொண்டே இருப்போம். நம் நாட்டின் கலாசாரப் பொக்கிஷங்களை மீட்கும் வரை ஓய்வில்லை.

இந்தியாவிலிருந்து திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட கோயில் சிலைகள் அத்தனையுமே, 1970-க்கு முன்னரே யாரோ ஒருவரால் தானமாகக் கொடுக்கப் பட்டவை என்பதுபோல், இன்று போலி ஆவணங்கள் உலகம் முழுவதும் சுற்றலில் இருக்கிறது. இதை நம்மூர் கடத்தல் புள்ளிகள்தாம் தயாரித்து வைத்துள்ளனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது. `1970 ம் ஆண்டுக்குப் பின் கடத்தப்பட்ட சிலைகள் என்றால், இன்டர்போல் போலீஸ் மூலம் பரஸ்பர நாடுகளின் நல்லுறவில்  சிலைகளைத் திரும்பப் பெற உதவிட முடியும்' என்று, ஐ.நா. சொல்கிறது. அதே வேளையில், `1970-க்கு முன்னர் கடத்தப்பட்ட சிலைகளை, அப்படி மீட்க சட்டத்தில் இடமில்லை' என்ற சட்டவிதிமுறையைப் பின்பற்றியே, போலி ஆவணங்களும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முடிந்தவரையில் இந்தப் போலி ஆவணங்களைக் கைப்பற்றி விட்டோம். இனி என்னாகுமோ, எது எப்படிப் போகுமோ தெரியவில்லை?" என்று புதிர் போட்டார்.
 
...சிலைகளின் கதை இப்படியிருக்க, புகழ்பெற்ற ரவிவர்மா ஓவியங்களின் விலை, சந்தை மதிப்பில் பல கோடிகளைத் தாண்டுகிறது என்பதால், அவற்றைச் சோதனையில் சிக்காமல் தந்திரமாகக் கடத்துகின்றனர். விலைமதிப்பற்ற, இந்தப் பழங்கால ஓவியங்களின் மீது, `பிளாஸ்டிக் கோட்' கொடுத்து அதன்மீது இக்கால சாதாரண ஓவியங்களைச் சிதைக்காமல் பக்குவமாகப் பொருத்தி அதை உலகச் சந்தைக்குக் கொண்டு போகிறார்கள். ஏலத்துக்கு ஓவியங்கள் வருவதற்கு முன்னர், புதிதாகப் பொருத்தப்பட்ட சாதாரண ஓவியங்களைப் பக்குவமாக அகற்றி விடுகிறார்களாம்...

கலைக்கே வித்தையை போதிக்கிறது கடத்தல் கும்பல்!

 Trending Articles

Sponsored