கூடங்குளம் அணுஉலை சீரமைக்கப்பட்ட 12 நாள்களில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்!Sponsoredகூடங்குளம் 2-வது அணுஉலையில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 152 நாள்கள் நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், 12 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட இரு அணுஉலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த அணு உலைகளில் உள்ள உதிரிப் பாகங்கள் தரமற்றவை என அணுஉலை எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதை உண்மையாக்கும் வகையில், இரு அணுஉலைகளிலும் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுவருகிறது.
இரண்டாவது அணு உலை, பராமரிப்புப் பணிகளுக்காக 152 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த ஜூலை 21-ம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கியது. 

Sponsored


இந்த அணு உலை, 12 நாள்கள் மட்டுமே இயங்கிய நிலையில், மின்சார உற்பத்தி 950 மெகாவாட் அளவுக்கு உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு 2-வது அணு உலையின் வால்வுப் பகுதியில் பழுது ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. தற்போது ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாக, அணுஉலை வளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sponsored


ஏற்கெனவே கூடங்குளம் முதலாவது அணுஉலை, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காகவும் எரிபொருள் நிரப்பும் பணிக்காகவும் நேற்று (ஆகஸ்ட் 1-ம் தேதி) நிறுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது அணுஉலையும் பழுது காரணமாக மூடப்பட்டதால், 2000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அணு உலையில் அடிக்கடி பழுது ஏற்பட்டுவருவதால், அணுஉலைக்கு தரமற்ற உதிரிப்பாகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அணுஉலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 Trending Articles

Sponsored