`எனக்குப் பிடிக்கல; தீர்த்துக்கட்டினேன்'- அதிகாரி கொலையில் பெண் ஊழியர் அதிர்ச்சி வாக்குமூலம்!Sponsoredதிருச்சி அருகே, வேளாண்துறை அதிகாரி பூபதி கண்ணன் கொலை சம்பவத்தில், பெண் தோழி கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட, அந்தப் பெண் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
 
புதுக்கோட்டை மேலவீதி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர்  பூபதி கண்ணன். இவர், புதுக்கோட்டை மாவட்ட வேளாண்துறை தனி அலுவலராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்துவந்தார். இவரது மனைவி அனுராதா, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் செயற்பொறியாளராகப்  பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு, இதிலா என்கிற 16 வயது பெண் குழந்தை உள்ளது. தற்போது, திருச்சியில் ராஜா காலனி பகுதியில் குடியிருந்துவரும் இவர், திருச்சி மாவட்டம்  மாத்தூர் காட்டுப் பகுதியில், கடந்த 28-ம் தேதி காலை  சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தகவலறிந்து வந்த மாத்தூர் காவல் ஆய்வாளர் ஜெயராம் தலைமையிலான போலீஸார், பூபதி கண்ணனின் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பிரேதப் பரிசோதனைசெய்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வேளாண் அதிகாரி பூபதி கண்ணன், அரை நிர்வாண நிலையில் கிடந்ததாகவும், அவர் வந்த காரில் டிபன் பாக்ஸ் திறந்த நிலையில் இருந்ததும், பெண் உள்ளாடைகளும் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கொலைக்குப் பெண் தொடர்பு இருக்கலாம் என முடிவுசெய்த போலீஸார், அந்தக் கோணத்தில் விசாரணைசெய்தனர். தொடர்ந்து, கீரனூர் ஏடிஎஸ்பி., இளங்கோவன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீஸாரின் தொடர் விசாரணையில், பூபதி கண்ணன் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அவரின் காரில், அவர் அலுவலகத்தில் டைப்பிஸ்டாகப் பணிபுரியும் சௌந்தர்யா என்பவருடன் காரில் செல்லும் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகியிருந்தது. மேலும்,  புதுக்கோட்டையை அடுத்த கீரனூர் பகுதி டோல் பூத்திலும்  சிசிடிவி வீடியோ பதிவுகளில் சௌந்தர்யா காருக்குள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சௌந்தர்யாவிடம் போலீஸார் கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்தினர். விசாரணையில் சௌந்தர்யா, "எனக்கு லால்குடியை அடுத்த பெருவளநல்லூர் சொந்த ஊர். கல்யாணத்துக்கு முன்னாடி எங்க ஊரைச் சேர்ந்த ஒருத்தரைக் காதலித்தேன். ஆனால், எனது பெற்றோர் வேளாண் துறையில் பணிபுரிந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்துவைத்தனர். நானும் எனது கணவரும் குளித்தலையில் குடியிருந்துவந்தோம். திருமண வாழ்வில் இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். ஆனாலும் எனது முதல் காதலை மறக்க முடியவில்லை. அதனால், எனது காதலனுடன் தொடர்பில் இருந்தேன். இது தெரிந்ததும் எனது கணவர் சுரேஷ் என்னிடம் பிரச்னை செய்தார். இறுதியில் விரக்தி அடைந்த அவர், மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். கணவரை இழந்த எனக்கு, கடந்த 2011-ம் ஆண்டு கருணை அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. சொந்த ஊரிலிருந்து வேலைக்குச் செல்ல முடியாது என்பதால், குழந்தைகளுடன் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணாநகர் பகுதிக்குக் குடிபெயர்ந்தேன்.

Sponsored


எங்கள் அலுவலகத்தின் வேளாண் அலுவலர் பூபதி கண்ணன், திருச்சியிலிருந்து காரில் வருவதால், என்னை பிக்கப் செய்துகொள்வார்.  அப்படி ஏற்பட்ட பழக்கம், எங்களுக்குள் நெருக்கத்தை உண்டாக்கியது. அடுத்து, நாங்கள் இருவரும் வேலை முடித்து வீடு திரும்பும் வழியில், ஆளரவம் இல்லாத பகுதிகளில் சந்தித்து தனிமையில் இருக்க ஆரம்பித்தோம். பூபதி கண்ணன் குடும்பத்தில் ஏற்கெனவே பிரச்னை இருந்ததால், அவர் என்மீது அளவுக்கதிகமான பிரியத்தோடு இருந்தார். எனக்குத் தேவையானதைச் செய்துவந்தார். இந்நிலையில், எங்கள் அலுவலகத்தில் வேறு துறையில் பணி புரியும் ஒருவருடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. எனது பழக்கத்தில் மாறுதலைக் கண்ட பூபதி கண்ணன், என்னைக் கண்டித்தார்.  அவர் என் விருப்பத்துக்கு எதிராகச் செயல்பட்டது எனக்குப் பிடிக்கல. இதுகுறித்து எனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பினேன். சம்பவத்தன்று, வழக்கம்போல நானும் பூபதி கண்ணனும் வேலை முடிந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காரில் கிளம்பினோம். திருச்சி மாத்தூர் அடுத்துள்ள ரிங் ரோடு சாலைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் காரை நிறுத்திவிட்டு இருவரும் தனிமையில் இருந்தோம். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி என்னை மிரட்டி அனுப்பியதுடன், அவரைக் கொலைசெய்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்" என்று முதலில் வாக்குமூலம் கொடுத்தார்.

பின்னர் சௌந்தர்யாவிடம் நடத்திய விசாரணையில், அந்த மர்ம நபர் தனது முன்னாள் காதலர் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் சுந்தர் என்றும்  முரணான தகவலைக் கூறினார். இந்நிலையில், போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், `தன் விருப்பத்துக்கு மாறாகச் செயல்பட்ட பூபதி கண்ணனைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்தேன். அவர் என்னோடு இருந்த பிறகு, தனியாகச் சென்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது, காரில் இருந்த கத்தியை எடுத்து நானே குத்திக் கொன்றேன்'' என்று சௌந்தர்யா வாக்குமூலம் அளித்துள்ளார். இன்று காலை சௌந்தர்யாவைக் கைதுசெய்த போலீஸார், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெண்கள் சிறப்பு சிறைச்சாலையில் அடைத்தனர்.

Sponsored
Trending Articles

Sponsored