``பொம்பளப் புள்ளைங்க படிக்கணும்மா!''- பெண்களுக்கான நூலகத்துக்காக வீட்டை எழுதிக்கொடுத்த நடராஜன்Sponsored``எங்க ஊரு கிராமம்தாங்க. பொம்பள புள்ளைகளை அடக்க ஒடுக்கமா கிடக்கணும்னு நினைக்கிற சனங்க வாழுற ஊரு. போட்டித் தேர்வுக்குப் படிச்சா அரசாங்க வேலை கிடைக்கும்னு கேள்விப்பட்டதும், அதுக்கான புத்தகங்கள் எடுக்க, என் வூட்டுக்காரரைக் கூட்டிட்டு எங்க ஊரு லைப்ரிக்குப் போனேன். அங்கே ஆம்பளைங்க நிறைய படிச்சுட்டிருந்தாங்க. அங்கேயே உட்கார்ந்து படிக்க கொஞ்சம் சங்கோஜமா இருந்துச்சு. என் வூட்டுக்காரரும் `நீ அங்கே போய் படிக்க வேணாம். வூட்டுல உட்கார்ந்து படிக்கிறதுன்னா படி. இல்லைன்னா இந்த ஆசையை விட்டுரு'னு சொல்லிட்டாரு. அப்புறம், எங்க ஊருக்கார பொண்ணுங்களோடு சேர்ந்து கோயில், பள்ளிக்கூட சத்துணவுக் கூடம்னு கூட்டமா உட்கார்ந்து படிப்போம். ஆனால், நடராஜன் தாத்தா புண்ணியத்துல இப்போ பெண்களுக்கான நூலகம் கிடைச்சிருக்கு. எவ்வளவு பெரிய வரம் தெரியுமா?'' - வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த தனலட்சுமி சொல்லும்போதே குரலில் அத்தனை ஆனந்தம். 

``நான் ஒண்ணும் அப்படிப் பெரிசா பண்ணலியே தாயி'' என மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார் நடராஜன் தாத்தா.

Sponsored


``எனக்குப் புள்ளை குட்டி கிடையாது. ஒண்டியா வாழ்ந்துட்டிருக்கேன். அதான், என் வீட்டைப் பெண்கள் நூலகம் அமைக்க அரசாங்கத்துக்குக் கொடுத்துட்டேன். அதோட மதிப்பு ஒரு கோடின்னு அரசாங்கத்தில் பதிவுசெய்திருக்காங்க. எவ்வளவா இருந்தா என்னம்மா. நாலு பேருக்கு உதவுச்சுன்னா போதும்'' என்கிறார்.

Sponsored


``என்ன தாத்தா இவ்வளவு லேசா சொல்லிட்டே. யாருக்கு வரும் இந்த மனசு...'' என்கிறார் தனலட்சுமி.

அதை ஒரு புன்னகையுடன் ஏற்கும் நடராஜன் தாத்தா, ``வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்ற இறக்கத்தைப் பாத்துட்டேன்மா. இதுதான் வாழ்க்கை, இது இருந்தால்தான் வாழலாம்னு எந்த விஷயத்தையும் முடிவுசெஞ்சுக்கறதில்லை. நாம வாழுற வாழ்க்கை மத்தவங்களுக்கும் உதவுற மாதிரி இருந்தால் போதும். எங்களோடது ஒரு காதல் திருமணம். என் பொண்டாட்டி எனக்கு மாமா மகள்தான். நான் அரசாங்க ஸ்கூலில் வாத்தியார இருந்தேன். அவள் படிக்கலை. கல்யாணத்துக்கு அப்புறம் நான்தான் பாடம் சொல்லிக்கொடுத்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கிறியான்னு அடிக்கடி கேட்பேன். அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டா. பொம்பளையா பொறந்துட்டா படிக்கக் கூடாதுன்னு இல்லே. அதுக்கான சூழல் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் கிடைக்கலை. கிடைச்சவங்களும் தயக்கத்தால் படிப்பை பலி கொடுத்துட்டாங்கம்மா. அது என் மனசுல ஒரு குறையாவே இருந்துச்சு. பெண்களுக்கான நூலகம் திறந்தது மூலமா, அந்தக் குறையிலிருந்து வெளியே வந்துட்டேன்'' என முதுமையின் சிரமங்களை மீறிப் பேசுகிறார்.

``எங்க ஊரு பிள்ளைக எல்லோரும் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பரீட்சைக்குப் படிக்கிறதைப் பார்ப்பேன். சில நேரம் வெளிச்சமே இல்லாட்டியும் படிச்சுட்டிருப்பாங்க. `அம்மாடி வெளிச்சத்துல உட்கார்ந்து படிக்க வேண்டியதுதானே'னு கேட்பேன். `உங்க தாத்தாவா திண்ணையில் லைட் போட்டு வெச்சுருக்காரு'னு கிண்டல் பண்ணுவாங்க. இந்தப் புள்ளைகளுக்கு ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. என் சொத்தை ஏதாவது ஆசிரமத்துக்கு எழுதிவெச்சுரலாம்னு இருந்த யோசனையை மாத்திக்கிட்டேன். என் சிநேகிதனும் நம்ம ஊருக்கு ஏதாவது பண்ணச் சொன்னான். அப்போதான் பெண்களுக்கான நூலகம் அமைச்சுரலாம்னு முடிவெடுத்தேன். மாவட்ட நூலக அலுவலர் மூலமா அரசாங்கத்தில் அனுமதி வாங்கினேன். இதோ, நல்லபடியா என் கண்ணு முன்னாடி மகளிருக்கான நூலகம் இயங்கிட்டிருக்கு. எங்க ஊரு பிள்ளைக இனி தெருவில் குறைஞ்ச வெளிச்சத்தில் படிக்க வேணாம். எனக்கு இப்போ 89 வயசு. செத்தாலும் எங்க ஊரில் எனக்கான அடையாளம் இருக்கு'' என்ற நடராஜன் தாத்தா குரலில் ஒரு திருப்தி மிளிர்ந்தது.Trending Articles

Sponsored